April 30, 2009

உழைப்பாளர் தினம் + அல்டிமேட் வாழ்த்துக்கள் + கொஞ்சமா மொக்கை..

May 1 - நாளைக்கு உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இந்த நாளை கொண்டாடும் இதே வேலையில உண்மையில நமக்கு இந்த நாளை கொண்டாடுற தகுதி இருக்கான்னு யோசிக்கணும். பாக்குற வேலைக்கு கூலியா கூட இருபது ரூபா கேட்டா போலிசே துரத்தி துரத்தி அடிக்கிற நிலைமையில்தான் நம்ம நாடு இருக்கு. கொளுத்துற வெயிலில நாள் பூரா வேலை செஞ்சும் ஒரு வேளை கஞ்சி குடிக்க முடியாம கஷ்டப்படுரவங்க எத்தனை பேர்? இதெல்லாம் மாறினா அன்னைக்கு நாம இந்த நாளை இன்னும் மகிழ்ச்சியா கொண்டாடலாம்.. மாறும்னு நம்புவோம்.
***************
* படிச்சது பத்தாம் வகுப்புதான்..

* ஐந்து மொழிகளை தங்கு தடை இல்லாமல் பேசக் கூடியவர்..

* தனது வாழ்க்கையை ஒரு எளிய மெக்கானிக்காக ஆரம்பித்தவர்..

* பிற்காலத்தில் இந்தியாவின் பெருமையாக பார்முலா ரேசிங்கில் கலந்து கொண்டார்..

* சினிமாவில் நுழைந்தாலும் 4 - 5 வருடங்கள் நிலையான இடம் கிடைக்காமல் போராட்டம்..
* நடிப்புக்காக பல "filmfare" அவார்டுகளை வாங்கியவர்...

* CBSC பிரிவில் ஐந்தாம் வகுப்பில் அவர் பற்றிய ரோல் மாடல்கள் என்ற பாடம் சேர்க்கப் பட்டுள்ளது..

* மே 1 இல பிறந்து - உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் உதாரணமாக இருப்பவர்..

* கிங் ஒப் ஓபனிங் என்று தமிழ் திரையுலகில் அழைக்கப்படுபவர்..

* அசல் "தல"....
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
***************
படிச்சதில் பிடிச்சது..
ஒரு தகவலை ரொம்ப அவசரமாக நண்பர்களுக்கு பரப்ப வேண்டுமா? மூன்று வழிகள் உள்ளன..

* டெலிபோனை பயன்படுத்துங்கள்..

* தந்தி அடியுங்கள்

* உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள்..

ரொம்ப ரொம்ப அவசரமா பரப்பணுமா?... அப்போ யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க.. போதும்..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு புதிர்.. இதுவும் என் மாணவர்கள் எனக்கு SMS அனுப்பினது தான்.. பின்னூட்டத்துல பதில சொல்லுங்க..
நீங்க ஒரு படகுல ஏறி நதிக்கு நடுவுல போய்க்கிட்டு இருக்கீங்க.. உங்க கிட்ட ரெண்டு சிகரெட் இருக்கு..(புகை பிடித்தல் உடல் நலனுக்கு கேடானது.. ). நீங்க அதுல ஒரு சிகரட்டை பத்த வைக்கணும். உங்ககிட்ட படகுல வேற ஒண்ணுமே இல்லை.. எப்படி பத்த வைப்பீங்க? யோசிங்க மக்களே..


புதிருக்கான விடை:- ஒரு சிகரெட்டை எடுத்து தண்ணீரில் வீசி விடுங்கள்.. இப்போது படகு லைட்டாகி (லேசாகி) விடும்.. அதில் நீங்கள் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொள்ளலாம். என்னது.. இன்னொரு பதில் வேணும்மா? வச்சுக்கோங்க.. ஒரு சிகரெட்டை மேலத் தூக்கி போட்டு காட்ச் பிடிங்க.. காட்செஸ் வின் மாட்ச்.. (catches win matches)..மாச்சாஸ்னா என்ன.. தீக்குச்சி.. இப்போ சிகரட்ட ஈசியா பத்த வைக்கலாம்.. யாரோ பல்லை கடிக்குற சத்தம் கேக்குதே.. சரி சரி.. எதுன்னாலும் பேசித் தீர்த்துக்கலாம்ப்பா..:-)

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 29, 2009

கேள்வியும் நானே..பதிலும் நானே..!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் அத்திரி இந்த தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட முப்பது கேள்வி. ரொம்ப யோசிக்க எல்லாம் இல்ல.. மனசுக்கு என்ன தோணுச்சோ, அதை அப்படியே எழுதுறேன்.. படிச்சு பாருங்க..
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஊருல இருக்குற எல்லா முருகன் கோவிலுக்கும், மதுரை பாண்டி கோவிலுக்கும் எங்கம்மா அலையா அலைஞ்சு பெத்தெடுத்த புள்ள நானு.. இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்னுதான் என்னோட அம்பதாவது பதிவுல என்னோட பெயர்க்காரணத்தை விரிவா சொல்லி இருக்கேன்.. முடிஞ்சா இங்கே க்ளிக்கி அதையும் படிங்க..
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சமீபத்தில் என்னுடைய இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாவில் அழுதேன்.. மூன்று வருடம் என்னுடைய நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.. கண்டிப்பாக எங்கு போனாலும் அவர்களின் நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கும்..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எங்க வாத்தியார் எல்லாம் அதை கையேழுத்துன்னே சொல்ல மாட்டாங்க.. கோழி கிண்டுறதுன்னுதான் சொல்வாங்க... இந்த லட்சணத்துல நீ எல்லாம் வாத்தியாரான்னு என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணும் அளவுக்கு ரொம்ப மோசமா இருக்கும்.. ஆனா எனக்கு என் கையெழுத்து ரொம்ப பிடிக்கும் :-)
4).பிடித்த மதிய உணவு என்ன?
சிக்கன் பிரியாணி
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வாழ்க்கையில நான் சம்பாதிக்கிற நினைக்கிறது மனிதர்களைத்தான்.. நல்லவங்கன்னு நம்பிக்கை வந்துட்டா கடைசி வரைக்கும் நட்பைத் தொடரனும்னு நினைப்பேன்.. உடனே பழகுனாலும் ரொம்ப நாள் ஆனாலும், அது வாழ்க்கை பூரா கூட வரதா இருக்கணும்.. அவ்வளவுதான்..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல்.. சின்ன வயசுல இருந்தே கடல் மேல சொல்ல முடியாத காதல் உண்டு.. குறிப்பா கன்னியாகுமரியும், புதுச்சேரி கடலும் ரொம்பப் பிடிக்கும்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்ணத்தான் பார்ப்பேன்.. அதுல ஒரு உண்மை இல்லன்னா நெகிழ்வு தெரியும்..
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என்னோட தன்னம்பிக்கை பிடிக்கும்.. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வெளியே காட்டிக்க மாட்டேன்.. அந்தக் கஷ்டத்த எப்படி கடந்து வரலாம்னுதான் யோசிப்பேன்..

யார் என்ன சொன்னாலும் மூஞ்சிக்கு நேரா மறுத்துப் பேச தெரியாது.. எனக்குத் தெரிஞ்சே சில நேரங்களில் மக்கள் என்னை யூஸ் பண்ணிக்குவாங்க.. அப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என் தேவதையை எங்கமா அப்பா தேடிக்கிட்டு இருக்காங்க.. கிடைச்சதுக்கு அப்புறம்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை மிஸ் பண்ணக்கூடிய ஜீவன் அதுதான்.. பையனா பொரந்ததுக்காக என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சவங்க..
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இளம்பச்சை நிறத்தில் சட்டை.. அடர்த்தியான பச்சையில் பேன்ட்..
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மொபைலில்..."ஒரு கல் ஒரு கண்ணாடி.. - சிவா மனசுல சக்தி.."
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கடலலையின் நீல நிறம்
14.பிடித்த மணம்?
மளிகைக் கடையில போய் நிக்குறப்ப என்னன்னு சொல்ல முடியாத ஒரு மணம் வரும்.. அது ரொம்ப பிடிக்கும்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஆதவா - இளைஞர்... கவிதைகளில் கலக்குபவர். சின்ன வயசுதான்னாலும் கருத்துக்களில் முதிர்ச்சி உண்டு..(பிஞ்சிலே பழுத்தவர்னு கூட சொல்லலாம்.. ஹி ஹி ஹி..) நல்ல நண்பரும் கூட..
டக்ளஸ்... - பாசக்கார பயபுள்ள.. நம்ம ஊரு வேற.. குசும்புக்கு குறைவே கிடையாது.. வந்து கொஞ்ச நாள்லயே நிறைய மக்களை பழகி வச்சிருக்கவர்..
குமரை நிலாவன் - மலேஷியாவில் இருந்து எழுதுபவர்.. அருமையான மனிதர்.. நட்பை மதிப்பவர்.. நாம இந்த சமுதாயத்துக்கு எதாவது செய்யணும் நண்பா என்று அடிக்கடி சொல்பவர்..
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அத்திரியோட அரசியல் பதிவுகளில் இருக்கும் நையாண்டி ரொம்ப பிடிக்கும்.. குறிப்பா இந்தப் பதிவு..
17. பிடித்த விளையாட்டு?
கால்பந்து.. F1.. கிரிக்கட்.. டென்னிஸ்.. எல்லாமே பார்க்க பிடிக்கும்.. கிரிக்கட் விளையாடுவேன்.. ஷட்டிலும்..
18.கண்ணாடி அணிபவரா?
+2 படிக்குறப்பவே வலது கண்ணு அவுட்டு... அப்ப இருந்தே போட்டிருக்கேன்..
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதைத் தொடும் விதத்தில் இருக்கணும்.. இல்லைன்னா போரடிக்காம போகணும்..
20.கடைசியாகப் பார்த்த படம்?
அது ஒரு சோகக் கதை.. அவ்வ்வ்.. மரியாதை..
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஜெயமோகனின் "ஊமைச் செந்நாய்.." நான் படிக்குற அவரோட முதல் புத்தகம்.. வட்டார வழக்குல இருக்குறதால ரொம்பப் பொறுமையா படிச்சிக்கிட்டு இருக்கேன்..
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நான் பயன்படுத்துறது காலேஜ் கம்ப்யூட்டர்.. அதனால அதை நோண்ட மாட்டேன்..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தைகள் கிட்ட இருந்து வர எல்லா சத்தமும் பிடிக்கும்..

ரொம்ப எரிச்சல் தரது வாகனங்களோட ஹார்ன் சத்தம்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மதுரையில் இருந்து ஷிம்லா வரை.. எங்கப்பா ரயில்வேயில் இருக்குறதால அது ஒண்ணுதான் மிச்சம்.. மொத்த இந்தியாவையும் காசே குடுக்காம ரயில்ல சுத்தி இருக்கேன்.. கண்டிப்பா நம்ம மக்கள் எல்லாருமே ஒரு தடவையாவது கல்கா டூ ஷிம்லா ரயில்ல போய் பாருங்க.. அவ்வளவு அருமையா இருக்கும்..
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மிமிக்ரி பண்ணுவேன்.. பாடுவேன்.. காலேஜ்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்திருக்கேன்..
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சமுதாயத்துல இருக்குற ஏற்றத்தாழ்வு.. கொஞ்ச பேர் பணக்காரனாவும் மீதி எல்லாரும் சோத்துக்கே கஷ்டப்பட்டு.. என்னால இதை ஒத்துக்கவே முடியாது.. இந்த மாதிரி சமயங்கள்லதான் சாமின்னு ஒன்னு இருக்கானே கோபம் வரும்..
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லாரும் நம்மை கவனிக்கனும்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அது சரி கிடையாது..
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கனும்னு ஆசை உண்டு.. இந்தியால எனக்கு நான் பார்த்த இடத்துல பிடிச்சது.. ஜெய்ப்பூர்..
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சந்தோஷமா இருக்கணும்.. என்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்.. போதும்..
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கேள்வி நமக்கு செல்லாது..
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நாம இங்க, இப்படி பொறக்கனும்னு நாம முடிவு பண்றது கிடையாது.. ஆனா நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு நாம்தான் தீர்மானம் பண்றோம்.. நாலு பேருக்கு நல்லது பண்ண முடியாட்டியும், யாருக்கும் கெட்டது செய்யாம வாழ்ந்தாலே பெரிசு..
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1. ஆதவா
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 27, 2009

காமத்தின் நீண்ட நிழல்..!!!

மழையின் முதல் துளி மண்ணில் விழுந்த போது அவன் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். நான்கு வருட வாழ்க்கையில் நகரத்தின் சந்துகள் அவனுக்கு பழக்கமாகி விட்டன. சிறு தெருக்களின் ஊடாக வேகமாக நடக்கத் தொடங்கினான். சிறுமி ஒருத்தி வேக வேகமாக சைக்கிள் ஒன்றை மிதித்துக் கொண்டு அவனை கடந்து சென்றாள். வீடுகள் எல்லாம் அமைதியில் உறைந்து கிடந்தன. பெருநகரங்களின் தெருக்களில் இப்போதெல்லாம் யாரையும் வெளியே பார்க்கவே முடிவதில்லை. நிமிர்ந்து வானத்தை பார்த்தான். பறவைகளே இல்லாத வானத்தில் மேகங்கள் குழுமி இருந்தன. பெருமழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தது.



ஒரு வளைவில் திரும்பியபோது நாய் ஒன்று ஒன்று விருட்டென்று அவனை தாண்டிப் போனது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நிலைகுலைந்தவன், சமாளித்துக் கொண்டு நடையை எட்டி போட்டான். பேருந்து நிலையத்தில் கூட்டம் பெரிதாக இல்லை. அவன் ஊருக்கு செல்லும் பஸ் ஓரமாக நின்று கொண்டிருந்தது. போய் ஏறிக் கொண்டான். ஜன்னல் அருகே இருந்த இடத்தில் போய் அமர்ந்தான்.

காலையில் மாமா போனில் பேசியது ஞாபகம் வந்தது.

"அப்பா இப்பவோ அப்பவோன்னு இருக்காரு.. உன்னை பார்க்கனும்னு ரொம்ப ஆசைப்படுறாரு.. உடனே கிளம்பி வா.."



சிறு கிராமம் ஒன்றில் பிறந்து, தங்களை வளர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்? நினைக்கும்போதே அவனுக்கு கண்கள் கலங்கின. படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் நகரத்திற்கு வந்து எத்தனை நாட்கள் ஆகி விட்டன? இன்னும் ஒரு நிலையான இடத்துக்கு வர முடியவில்லை. அக்கா ரெண்டு பேரையும் கட்டிக் கொடுத்தது கூட அப்பாதான். நம்மளால ஒண்ணும் செய்ய முடியலையே..? இயலாமையின் நிதர்சனம் அவனை சுட்டது... போன முறை வீட்டுக்குப் போனபோது அவர் சொன்னது..

"உன்னை நீ நல்லா பார்த்துக்கிட்டா போதும்யா.. பத்திரமா இரு.."



வேலை பார்க்கும் இடத்தில் மானேஜரிடம் பதட்டத்தோடு சொன்னபோது அவர் சுவாரசியமாக காது குடைந்து கொண்டிருந்தார். இவனுடைய வார்த்தைகளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. கடைசியில், இன்றைய வேலையை முடித்து விட்டுத்தான் போக வேண்டும் என்றும், இரண்டு நாள் மட்டுமே விடுப்பு தர முடியும் என்றார். இப்போதெல்லாம் மனிதர்களை விட இயந்திரங்கள் தான் உலகில் அதிகமாக உலாவுகின்றனவோ என்னவோ? வெளியே வந்தபோது அவன் நண்பன் கேட்டான்.."தப்பா எடுத்துக்காத.. ரெண்டு நாள்தான் லீவ் தருவேன்னு சொல்றான்.. அதுக்குள்ளே அப்பாவுக்கு எதுவும் ஆகலைன்னா..?" அவனிடம் பதில் இல்லை. மௌனமாக இருந்தான்.



பேருந்து கிளம்பி விட்டிருந்தது. மழை சற்று வழுவாகப் பெய்ய தொடங்கியது. நாசியில் மண்வாசத்தை உணர முடிந்தது. அவனுடைய கவனம் சற்றே மாறி வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். வழியில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது அவள் உள்ளே ஏறினாள்.கூட்டம் கொஞ்சம் ஏறி விட்டிருந்த காரணத்தால் இடம் இல்லாமல் அவனுக்கு வலப்பக்கம் நின்று கொண்டாள். தன்னையும் அறியாமல் அவன் அவளை பார்க்கத் தொடங்கினான்.



அவளிடம் ஒரு சொல்ல முடியாத வசீகரம் இருந்தது. கருப்பு என்றும் சிவப்பு என்றும் சொல்ல முடியாத நிறம். கண்களில் ஒரு கனிவு. மூக்கு நல்ல கூர்மையாக இருந்தது. சின்ன உதடுகள். சரேலென்று இறங்கிய கழுத்தில் சின்னதாய் இரு மச்சங்கள். சேலையை இறுக்கமாக உடுத்தி இருந்ததால் மழையில் நனைந்து அவளின் வளைவுகளை நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. வீசிய காற்றில் சற்றே சேலை பறக்கும்போது தெரிந்த நாபியும் பூனை முடிகளும் அவனை என்னவோ செய்தன. நிமிர்ந்து முகத்தை பார்த்தபோது அவள் இவனையே பார்ப்பதுபோல் இருந்தது. சட்டென்று கண்களை மூடிக் கொண்டான்.



அவன் இறங்குமிடத்தில்தான் அவளும் இறங்கினாள். இவனைத் தாண்டி போகும்போது ஒரு சின்ன காகிதத்தை வீசிச் சென்றாள். அதில் அவளுடைய போன் நம்பர் இருந்தது. பேசியபோது கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகச் சொன்னாள். நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். மறுநாள் காலை அவன் அவள் வீட்டுக்கு போனான். யாருமில்லாத வீட்டில் அவள் அவனை உற்சாகமாக வரவேற்றாள். குடிப்பதற்கு ஏதேனும் கொண்டு வருகிறேன் என்று சொல்லி உள்ளே போனவளைத் தொடர்ந்து அவன் உள்ளே போனான். பிரிட்ஜை மூடி அவள் திரும்பியபோது அவனின் சூடான வெப்ப மூச்சு அவள் முகத்தின் மீது விழுந்தது. அவள் ஏதும் பேசாமல் அவனுடைய கண்களை ஆழ்ந்து நோக்கினாள். அவன் மெதுவாக அவளுடைய தோளைத் தொட்டான். அவள் மறுப்பேதும் சொல்ல வில்லை. குனிந்து அவள் ஈர உதடுகளை முத்தமிட்டான். அவள் அவனை தன்னோடு இறுகிக் கொண்டாள். சிறு குழந்தை போல அவளைத் தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் கிடத்தினான். ஒரு மிருகத்தின் வெறியோடு அவளை நெருங்கியபோது..



தடக்கென்று பஸ் ஒரு மேட்டில் ஏறி இறங்கியதில் அவன் விழித்துக் கொண்டான். கண்டது எல்லாம் கனவா? மழை நின்று போய் இருந்தது. அருகில் பார்த்தான். அந்தப் பெண் எப்போதோ இறங்கிப் போய் விட்டிருந்தாள். அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட ஒரு பெண்ணை புணருவதாக தனக்கு வந்த கனவை எண்ணி அவன் வெட்கம் கொண்டான். காமம் ஒரு கொடிய மிருகம் போல் மனிதனை எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது. உடம்பில் ஓடித் திரியும் பச்சை நரம்புகளைப் போல் அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது. அவனுக்கு அவன் மீதே வெறுப்புத் தோன்றியது. அவனுடைய ஊர் வந்ததும் இறங்கினான். புலம்பிக் கொண்டே இருளின் உள்ளே நடந்து மறைந்து போனான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 26, 2009

மரியாதை - திரை விமர்சனம்..!!!


தமிழகத்தை தாக்க வந்த..ச்சீ.. காக்க வந்த தங்கத் தலைவர், இளைஞர்களின் விடிவெள்ளி, புரட்சிக் கலைஞர் விசயகாந்துக்கு சில விண்ணப்பங்கள்..


1. தயவு செஞ்சு உங்க தொப்பைய குறைங்க.. நீங்க திரைக்கு வரதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடியே தொப்பை ஸ்க்ரீனுக்கு வந்துருது.. போற போக்கை பார்த்தா ஸ்க்ரீனில் முக்காவாசி இடத்தை நிறைப்பது நமீதாவா இல்லை நீங்களான்னு போட்டியே வைக்கலாம் போல..


2. உங்க ஒப்பனைக் கலைஞர்கிட்ட சொல்லி நல்ல விக்கா வாங்க சொல்லுங்க.. உங்கள க்ளோசப்புல காட்டுறப்போ பிள்ளைங்க எல்லாம் பயப்படுதுல்ல..


3. உங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்றவரு யாருன்னு சொல்லுங்க.. தேடிப் பிடிச்சு கால்ல விழணும்.. ரோஸ், பச்சை, மஞ்சள்னு இத்தனை கலர்ல கோட் சூட் போட முடியும்னு கண்டுபிடிச்சு பல பேரு கண்ணை குருடாக்குன அந்த புண்ணியவானுக்கு.. இருக்கு..


இல்லை.. இதெல்லாம் என்னால மாத்த முடியாதுன்னு சொன்னா.. ரொம்ப ஈசியா ஒரு விஷயம் இருக்கு.. தயவு செஞ்சு நடிக்கிறத விட்டுடுங்க.. தமிழ் மக்கள் பொழச்சு போகட்டும்..


***************


ஒரு அம்மா வீட்டுக்கு முன்னாடி பெருக்கிக்கிட்டு இருக்காங்க.. அவங்க பையன் வானத்துல இருக்குற சூரியன பார்த்துக்கிட்டே இருக்கான்..


"என்னப்பா. ரொம்ப நேரமா சூரியனையே உத்துப் பாத்துக்கிட்டு இருக்க?"


"இல்லம்மா.. அந்த சூரியனுக்கு மீசை இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்.."


"வேற என்ன.. நம்ம அண்ணாமலை ஐயா மாதிரி இருக்கும்.."


சூரியன க்ளோசப்புல காட்டுறாங்க.. அதுக்கு மீசை, கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் கிராபிக்ஸ்ல வரைஞ்சா விசயகாந்து.. தாங்க முடியல.. தமிழ் சினிமா திருந்த வாய்ப்பே இல்லடா சாமி..


***************


ஊரிலேயே பெரிய மனிதர் விஜயகாந்த். மகனை அன்பாக அவன் இஷ்டப்படி வளர்க்கிறார். மகன் விஜயகாந்த் விவசாயம் படித்து விட்டு ஊரிலியே இருக்கிறார். கெமிக்கல் பாக்டரி ஆரம்பிக்க விரும்பும் வில்லன்களுக்கு நிலத்தை விற்க அப்பா விஜயகாந்த் மறுத்து விடுகிறார். மீனா (இவர் உண்மையில் வில்லனின் காதலி..) மகன் விஜயகாந்தை காதலிப்பதுபோல் நடித்து சொத்துக்களையும் நிலத்தையும் ஏமாற்றி வாங்கி விடுகிறார். இவர்களின் வீட்டுக்கு புதிதாக வரும் மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறார். அவர் யார்? வாழ்க்கையில் மீண்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றாரா? வில்லன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க முடிந்ததா? இதுதான் மரியாதை படத்தின் கதை.


வீட்டுக்கு வருபவர் பொய் சொல்லி உள்ளே நுழைந்து எல்லோருக்கும் சந்தோஷத்தை கொண்டு வருவது - பூவே உனக்காக..


காதலித்த பெண் ஏமாற்றி விட்டதால் நொந்து போன கதாவை அடுத்த பெண் மாற்றி வாழ்க்கையில் முன்னேறச் செய்வது - சூர்யா வம்சம்..


மொத்த குடும்பமும் ஒன்றாக வாழ்ந்து வரும் காட்சிகள் - வானத்தை போல..


முந்தைய படங்கள் எல்லாத்தையும் கலந்து கட்டி ஒரு மொக்கை படத்தை எடுத்துள்ளார் விக்ரமன். பொதுவாக இவர் படங்களில் இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் கூட இந்தப் படத்தில் இல்லை.


மகன் விஜயகாந்த்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இஞ்சி தின்ன குரங்கு போலவே இருக்கிறார். அப்பா கேரக்டேர் எவ்வளவோ பரவா இல்லை. அம்பிகாவும் அம்முவும் அம்மா மகளாக வந்து போகிறார்கள். ரமேஷ் கன்னா வானத்தை போல படத்தில் செய்த அதே ரோல். சமைக்கத் தெரியாத அம்பிகா, பாடத் தெரியாத அம்மு, மொக்கை ஜோக் சொல்லும் ரமேஷ், பழைய காலத்து காமெடி மியூசிக் என நகைச்சுவை காட்சிகள் எல்லாமே பிளேடு போடுகின்றன. வில்லனாக ஷண்முகராஜன், சம்பத்.. ரெண்டுமே காமெடி பீஸ். மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம்ப நன்றாகத் தெரிகிறது. கடைசியில் அவர் மனம் திருந்துவதும் நம்பும்படி இல்லை. படத்தின் ஒரே ஆறுதல், மீரா ஜாஸ்மின். நல்ல நடிச்சு இருக்கார். ஆளும் பார்க்க பிரெஷா இருக்கார்.


விஜய் ஆண்டனியோட இசையில பாடல்கள் எல்லாமே மெலடியா நல்லா இருக்கு. ஆனா, இன்பமே பாட்டை பாடின உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க.. ஒளிப்பதிவு நல்ல தெளிவு. பாட்டு எல்லாம் கொஞ்சம் பார்க்குற மாதிரி இருக்கு. என்ன.. பாட்டியாலா பாண்ட், ரோஸ் கோட் எல்லாம் போட்டுக்கிட்டு விஜயகாந்த் ஆடுறதை கொஞ்சம் சகிச்சிக்கணும். சென்னை காதல் என்ற மகா மொக்கை படத்துக்கு பிறகு விக்ரமனுக்கு கிடைச்ச வாய்ப்பை வீண் அடிச்சுட்டார்னுதான் சொல்லணும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே கதையவே எடுப்பீங்க? கொஞ்சம் மாத்தி யோசிங்க சார்.


படம் பார்த்தவங்களோட "மரியாதை" கெட்டுப் போச்சு..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 24, 2009

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள்....!!!

காலம் காலமா நம்ம தமிழ் சினிமாவில் மாறாத சில விஷயங்கள் இருக்கு. அந்தக் காலத்து எம்ஜியார்ல ஆரம்பிச்சு இன்னைக்கு இருக்கிற தனுஷ் வரைக்கும் கண்டிப்பா எல்லார் படத்துலயும் இந்த விஷயங்கள் இருக்கும். அதுல எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள் பத்தித் தான் இந்தப் பதிவு.. இதே மாதிரி விஷயங்கள் உங்களுக்கும் தோணுனா அதப்பத்தி பின்னூட்டத்துல சொல்லுங்க நண்பர்களே..
---> கதாநாயகனோட அறிமுகம்.. கை, கால், மூக்கு, நாக்குன்னு எல்லாத்தையும் காமிப்பாங்க ஆனா மூஞ்ச மட்டும் உடனே காட்ட மாட்டாங்க.. யாராவது ஒரு பெரிசு வந்து ஹீரோவைப் பத்தி நாலு நல்ல விஷயம் சொன்ன உடனே ஸ்லோமோஷன்லதான் நம்ம கதாவோட முகத்தை காட்டணும் என்கிறதுதான் விதி..
---> கதாநாயகி கண்டிப்பா வில்லனோட தங்கச்சியாவோ, மகளாவோத்தான் இருப்பா. முதல் தடவை பார்க்கும்போது நாயகனோட மோதல் வரும்.. அப்புறமா அவளோட மானத்தை நம்ம கதா காப்பாத்துன உடனே காதல் வந்திரும்..
---> நாயகனும் நாயகியும் இருக்குறது கொட்டாம்பட்டியா இருந்தாலும், காதல் வந்த உடனே டூயட் பாட ச்விட்சர்லாந்தோ, நியுசிலாந்தோ போய்டுவாங்க.. அங்கே பனி மழை மாதிரி பெய்யும்.. நம்ம கதா கையுறை, காலுறை, ஆணுறை உட்பட்ட எல்லா உறைகளும் போட்டுக்கிட்டு ஆடுவாரு.. ஆனா நம்ம நாயகிக்கு ரெண்டே பீசுதான்.. அந்த அம்மா குளிர்ல நடுங்குரதுதான் டான்சு..
---> கதாநாயகனுக்கு தங்கச்சி இருந்தா அவ வில்லனை காதலிச்சு ஏமாந்து இருப்பா.. அதே மாதிரி வில்லனுக்கு நாயகனை பழி வாங்கணும்னா தெரிஞ்ச ஒரே வழி கதாவோட தங்கச்சிய கற்பழிக்கிரதுதான்.. அப்போ சுவத்துல இருக்குர புலி மானை வேட்டையாடுற போட்டோவைக் காட்டுறது ரொம்ப முக்கியம்..
---> படத்துல ரெண்டாவது கதாநாயகி கதாவை ஒருதலையா காதலிப்பா.. கடைசி சீன்ல வில்லன் நம்ம கதாவை கொல்ல முயற்சி பண்ணும்போது நடுவுல விழுந்து செத்துப் போவா.. அப்போ கதாவோட கைய நாயகியோட சேர்த்து வைக்கிறதுதான் அவளோட முக்கிய கடமை..
---> குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..
---> கதாநாயகி கோவிச்சுக்கிட்டு வேற ஊருக்கு போறதுக்காக எர்போர்ட்டுக்கோ, ரெயில்வே ஸ்டேஷனுக்கோ போவா.. அவ வரதுக்காகவே நாயகியோட பிரென்ட் காத்துக்கிட்டு இருப்பா.. ஹீரோ எவ்ளோ நல்லவன்னு சொல்லிட்டு வந்த வேலை முடிஞ்சதுன்னு கிளம்பிடுவா..
---> குடும்பப் படம்னா கடைசி ஒரே சீன்ல வில்லன் நல்லவனா மாறி மன்னிப்பு கேட்டுருவாரு.. உடனே குடும்பத்துல எல்லாரும் அவரை மன்னிச்சு ஏததுக்கிடுவான்க..
---> கதா வாழ்க்கைல முன்னேறனும்னா ஒரே ஒரு பாட்டு போதும்.. அந்த பாட்டு இப்போ விக்ரமன் சார்கிட்ட ஸ்டாக்ல இருக்கறதா பேசிக்கிறாங்க..

---> கடைசியா, கதா எத்தனை பேரைக் கொன்னாலும், வில்லன் என்ன அட்டூழியம் பண்ணினாலும் கண்டுக்காம இருந்துட்டு, படம் முடிய அஞ்சு நிமிஷமே இருக்குரப்பதான் போலிஸ் வரும்..
அவ்வ்வ்வ்வ்வ்... இந்த மாதிரி நெறைய இருக்கு.. இப்போதைக்கு இது போதும்..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 21, 2009

பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!! (சங்கமம் போட்டிக்காக)


பேருந்தை பிடிக்கும்
அவசரத்தில் உணவை
மறுத்து ஓடிய நாட்களும்....

நிற்கும்போது ஏறாமல் - நகரத்
துவங்கியபின் ஓடிப்போய்
ஏறும் இளமைத்திமிரும்....

சக பயணியின் வசவை
ரசித்துக்கொண்டே படியில்
தொங்கும் பெருமிதமும்..

நண்பர்களின் பாட்டுக் கச்சேரியும்..
கணப்பொழுதில் சிரிப்பை தந்து
கடந்து போகும் பள்ளிப் பெண்ணும்..

நடத்துனரோடு ஆடும் நகைச்சுவை
கூத்தும் - பஸ் டே
கொண்டாட்ட குதூகலமும்..

எல்லாம் அவனுக்கு
பிடித்து இருந்தன..!!

உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 20, 2009

எனக்குப் பிடித்த ஆசிரியர்கள்...!!!!

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு..

பொருள்: "எண்" என்று சொல்லப்படுவதும், "எழுத்து" என்று கூறப்படுவதும் என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் கண் என்பார்கள்.
எழுத்தறிவித்தவன் இறைவன் - இப்படி ஒரு சொலவடை உண்டு. சொல்லி கொடுக்குற ஆசிரியர கடவுளுக்கு சமமா சொல்ற மக்கள் நாம. கடவுள் எப்பவும் மனுஷன் கூட இருக்க முடியாதுன்னுதான் அம்மாவக் கொடுத்தான். ஆனா இன்னைக்கு இருக்கிற சூழ்நிலைல அம்மாவ விட பசங்க கூட அதிகமா நேரம் செலவிடுறது ஆசிரியர்கள்தான். மூணு வயசுல பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சா இருபது வயசுல கல்லூரி முடிக்கிற வரைக்கும்.. ஒரு பையனோட / பொண்ணோட நல்வாழ்வைத் தீர்மானிக்குரதுல ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கு. வெறுமனே பாடத்தை மட்டும் சொல்லித் தராம, ஒழுக்கத்தையும் வாழ்கைல போராடுற குணத்தையும், நம்பிக்கையையும் ஆசிரியர்கள்தான் சொல்லித்தரணும். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பற்றிய இந்த தொடர்பதிவை என்னை எழுத சொல்லிய நண்பர் லோகுவுக்கு நன்றி. அவருடைய பதிவை படிக்க இங்க க்ளிக்குங்க..
நான் படிச்சது மதுரை ஜெய்ஹிந்துபுரத்துல இருக்குற செவேந்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி. அந்தப் பள்ளி ஆரம்பிச்சப்போ போய் சேர்ந்த கொஞ்ச பேர்ல நானும் ஒருத்தன். கடைசியா பனிரெண்டாம் வகுப்பு முடிக்கிற வரை ஒரே ஸ்கூல் தான். ஆரம்ப காலத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச ஆசிரியர்கள்னா.. ப்ரின்சிபாலா இருந்த சுந்தர் சிங் சார், அவங்களோட மனைவிதான் என்னோட தமிழ் டீச்சர் (பேர் ஞாபகம் இல்லை).. மாட் மிஸ்(இவங்க ஒரு ஆங்கிலோ இந்தியன்.. ஆனா அருமையா தமிழ் பேசுவாங்க...) ரொம்ப சின்ன வயசுங்கரதால இவங்களைப் பத்தின வேற எந்த விஷயமும் ஞாபகம் இல்லை.
என்னுடைய பள்ளி வாழ்க்கைல நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ரெண்டு பேர்.
குருராஜ் சார்: ரெண்டாவதுல இருந்து +2 வரை எனக்கு பாடம் எடுத்தார். கடவுள் மேல ரொம்ப பக்தி உள்ளவர். எப்பவும் மாரல் கிளாஸ் எடுத்தாருன்னா எல்லாருமே அவ்வளவு விரும்பி கேப்போம். சின்ன சின்ன கதைகள் சொல்லி, பாட்டெல்லாம் பாடி போர் அடிக்காம நடத்துவார். ஒரு தடவை ஸ்கூல்ல இருந்து ஒரு மேடத்தை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. யாருக்கும் தெரியாம ஒரு நாலஞ்சு பசங்க போய் அவங்களை பார்த்துட்டு வந்தோம். இதை யாரோ பிரின்சிகிட்ட போட்டுக் கொடுக்க, எங்க மேல விசாரணை வச்சாங்க. அப்போ கடைசி வரை கூட இருந்து, கார்த்தி அப்படி தப்பெல்லாம் பண்ண மாட்டான்னு வாதாடி எனக்காக சார் ரொம்ப கஷ்டப்பட்டதை மறக்கவே முடியாது. பள்ளிக்கூடம் முடிஞ்சா கடைசி நாள் அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கினேன். நீ ரொம்ப நல்லா வருவடான்னு அழுதுகிட்டே என்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டாரு. அந்த நிமிஷம் எனக்குள்ள இன்னும் அப்படியே இருக்கு.
மாரியம்மாள் மிஸ்: இவங்க என்னோட ஆறாம் வகுப்புல வந்து சேர்ந்தாங்க. வந்த புதுசுல யாருக்கும் இவங்களை பிடிக்காது. ரொம்ப கண்டிப்பானவங்க. ஆனா போகப் போக பசங்க அவங்க நல்ல மனச புரிஞ்சிக்கிட்டோம். பிசிக்ஸ் தான் அவங்களுடைய முக்கிய பாடம்னாலும் மத்த பாடத்துல யார் போய்க் கேட்டாலும் சொல்லிக் கொடுப்பாங்க. இவங்க கிளாஸ்லதான் நான் அதிகமா சேட்டை பண்ணி மாட்டி இருக்கேன். மத்த ஆசிரியர்களுக்கும் உதவி பண்றதுல மொத ஆளா இருப்பாங்க. நாம நல்லா இருந்தா பத்தாது, நம்மள சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தவங்க இவங்கதான்.
கல்லூரியில நிறைய ஆசிரியர்கள் பழகினாலும் அவ்வளவா யாரும் என்னை ரொம்ப பாதிச்சது கிடையாது. இந்தப் பதிவுல பிடிக்காத ஆசிரியர்கள் பத்தியும் எழுத சொல்லி இருந்தாரு நண்பர் லோகு. அன்னைக்கு அந்த நேரத்துல யாராவது ஒரு ஆசிரியர் மேல கோபம் வந்தது உண்டு. ஆனா இன்னைக்கு பொறுமையா யோசிச்சு பார்த்தா, எல்லாமே நம்ம நல்லதுக்குத்தானே.. யாருமே நாம கெட்டுப் போகணும்னு சொல்லலியேன்னு தான் தோணுது. உண்மைல நாமதான் ஆசிரியர்கள் மனச நோக அடிச்சிருக்கோம்.. அதனால் யாரையும் பிடிக்காதவங்கன்னு எழுத மனசு வரல..
ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறது இளைஞர்கள்னு சொன்னா.. அவங்கள நல்ல மனிதர்களா ஆக்குறது ஆசிரியர்கள்தான். இது ஒரு வேலை கிடையாது.. சேவை. இன்னைக்கு நெறைய பேரு வேலை கிடைக்காம விளையாட்டா இந்த ப்ரோபாசனுக்கு வராங்க. அப்படி இல்லாம இதை மனமுவந்து செஞ்சாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். நான் ஒரு ஆசிரியரா இருக்குறதுல பெருமைப்படுறேன். நான் படிக்கும்போது என்னோட ஆசிரியர் என்கூட எப்படி சகஜமா பழகனும்னு ஆசைப்பட்டேனோ, அப்படித்தான் நான் இன்னைக்கு இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது...
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 18, 2009

The Road Home (1999) - காப்பி அடித்தாரா "பூ" சசி....?!!!



உலகில் ஆதி மனிதன் காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் உணர்வு - காதல்தான். நாம் பல வகையான காதல் கதைகளைக் கேட்டிருப்போம். நண்பர்களின் காதலுக்கு உதவியும் இருப்போம். ஆனால் நமக்கு வெகு அருகே இருந்தும் அதிகம் அறிந்திராத ஒரு காதல் உள்ளதென்றால் நீங்கள் நம்புவீர்களா? அது நம் பெற்றோரின் காதல் கதை.. தன்னுடைய அப்பா அம்மாவின் கண்ணியமான காதலை நினைத்துப் பார்க்கும் ஒரு மகனின் கதைதான் - The Road Home. 1999 ஆம் வருடம் இந்த சீன மொழித் திரைப்படம் வெளியானது. பௌ ஷி என்னும் எழுத்தாளரின் "Remembrance" என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.



மலைப் பாதையின் வழியெங்கும் பனி பெய்து கொண்டிருக்கிறது. இறந்து போன தன் அப்பாவின் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக யூஷேங் தனது கிராமத்திற்கு திரும்பி வருகிறான். அவனுடைய அப்பா கிராம பள்ளிக்கூடத்தின் டீச்செராக இருந்தவர். பள்ளிக்கான கட்டிடம் கட்டுவதற்காக ஊர் ஊராய் அலைந்து கொண்டு இருந்தவர். இதய நோய் வந்து இறந்து போய்
விட்டார். அவருடைய உடம்பு ஊரில் இருந்து நாற்பது கிலோமீடர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் உள்ளது. அவர் உடம்பை வண்டியில் கொண்டு வர மேயர் ஏற்பாடு செய்கிறார். ஆனால் அதை யூஷேங்கின் அம்மா ஏற்க மறுக்கிறாள்.


தன்னுடைய கணவரின் உடம்பை மலைப்பாதை வழியாக மனிதர்கள் சுமந்து கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகிறாள். அவ்வாறு செய்வது சீனாவில் ஒரு சம்பிரதாயம். இதன் மூலம் தனது இறுதி யாத்திரையை மேற்கொள்ளும் மனிதன் தன் வீட்டுக்கான பாதையை மறக்க மாட்டான் என நம்புகிறார்கள். ஆனால் ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி நகருக்கு சென்று விட்டதால் அம்மாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவது கஷ்டம் என மேயர் சொல்லுகிறார். அந்த மலைப்பாதைக்கும், தங்களுக்கும் நிறைய உறவு இருப்பதால் தனது கணவனின் உடல் அந்த வழியாகத்தான் வர வேண்டும் என்று சொல்லுகின்ற அம்மா, தறியில் தனது கணவரின் மீது போர்த்த வேண்டிய இறுதித் துணியை நெய்யத் தொடங்குகிறாள். அம்மாவின் அறைக்குள் இருக்கும் தனது பெற்றோரின் புகைப்படத்தை பார்க்கிறான் யூஷேங். அவனுடைய நினைவுகள் பின்னோக்கி நகர ஆரம்பிக்கின்றன.



புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார் சாங்க்யூ. கிராமத்தில் அழகியான தீக்கு அவரை பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. பள்ளியில் கட்ட வேண்டிய துணியை அவள்தான் நெய்கிறாள். கட்டிடம் கட்டும் மக்களோடு சேர்ந்து ஆசிரியரும் வேலை பார்க்கிறார். உணவு உண்ணும் நேரத்தில் அவர் தன்னுடைய சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டும் என்று தீ விரும்புகிறாள். வீட்டுக்கு வரும் ஆசிரியருக்கு அருமையாக மரியாதை செய்கிறாள். இருவருக்கு உள்ளும் ஒரு இனம்புரியாத அன்பு பெருகுகிறது. தீயின் தாய்க்கு இது பிடிக்கவில்லை. அரசியல் பிரச்சினைகளால் ஆசிரியர் ஊரை விட்டு செல்ல நேரிடுகிறது. தீ அவருக்காக காத்து இருக்கிறாள். விடுமுறை முடிந்து திரும்பி வரும் ஆசிரியர் தீயை மணந்து கொள்கிறார். அன்றில் இருந்து அவர்கள் ஒருவரை ஒருவரை பிரியாமல் வாழ்கிறார்கள். இத்துடன் நினைவுகள் முடிகின்றன.



இறந்து போன சாங்க்யூவின் உடலை அவரது மாணவர்களே தூக்கி வருகிறார்கள். தனது கணவருக்கு கம்பளி ஆடையை தீ அணிவிக்க பள்ளியின் அருகிலேயே அவரின் உடல் அடக்கம் செய்யப் படுகிறது. யூஷேங் அம்மாவை தன்னோடு நகரத்துக்கு வரும்படி அழைக்கிறான். அதற்கு மறுத்து விடும் தீ ஒரு முறையாவது அவன் அப்பா பாடம் நடத்திய பள்ளியில் அவனும் பாடம் நடத்த வேண்டும் என்று சொல்கிறாள். அம்மாவின் ஆசைக்காக யூஷேங் பள்ளியில் பாடம் நடத்துகிறான். அது அவனுடைய அப்பாவின் குரலாகவே தீக்குக் கேட்கிறது. அவள் சந்தோஷத்தோடு பள்ளியை நோக்கி செல்வதோடு படம் முடிகிறது.



மிக மெதுவாக நகரும் இந்தப் படத்தின் இயக்குனர் ஜாங் ஈமு(Zhang Yimou..). இவருடைய படங்கள் எல்லாவற்றிலுமே வண்ணங்களுக்கு எனத் தனி இடம் உண்டு. இந்தப் படத்தில் நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் நினைவுகள் வண்ணத்திலும் படமாக்கப் பட்டிருப்பது ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகிறது. பனி விழும் மலைகள், மஞ்சள் நிற இலைகள் பூத்துக் குலுங்கும் மரங்கள், நீண்ட செம்மண் பாதை என காட்சிகள் எல்லாமே ஓவியங்களை நினைவூட்டும். படத்தின் பின்னணி இசையாக பெரும்பாலும் இயற்கை ஒலிகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. காதலர்கள் சந்திக்கும் காட்சியில் மட்டுமே மனதை வருடும் காதலின் இசை பெருகி வழிகிறது.


* ஆசிரியர் முதல் முதலாய் தன்னை பார்க்கும் போதும் தீ பரவசம் கொள்ளும் காட்சி.. இந்தப் படத்தில்தான் Zhang ziyi அறிமுகம் ஆனார்.. கண்களில் மகிழ்ச்சியோடு அவர் துள்ளிக் குதித்து ஓடுவது நமக்கும் பெருத்த சந்தோஷத்தை தருகிறது..



* மலைப்பாதையில் சாங்க்யூவிற்காக பலநாள் காத்து இருக்கிறாள் தீ.. தீராத தனிமையும் அவரை பார்க்கும்போது அவளின் மனம் கொள்ளும் உவகையும் இசையில் மிக அருமையாக சொல்லப்பட்டு இருக்கும் காட்சிகள்


* ஆசிரியர் தான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக பிறரின் பாத்திரங்களை நகர்த்தி தன்னுடைய உணவை முன்னாடி வைக்கிறாள் தீ.. பின்னாளில் வீட்டிற்கு உணவு உண்ண வரும் ஆசிரியரிடம் தன்னுடைய பாத்திரத்தை அடையாளம் தெரிகிறதா என தீ கேட்பது..


* அவளுக்கு பரிசாக க்ளிப் ஒன்றை ஆசிரியர் தருவது.. ஆசிரியரை துரத்தி ஓடுகையில் மலைப்பாதையில் தீ அதை தொலைத்து விடுகிறாள்.. வரும் வழி எல்லாம் தனது கால் சுவடுகளின் கூட க்ளிப் எங்கேனும் கிடக்கிறதா என தீ தேடும் காட்சி...


* உடைந்து போன பாத்திரத்தை மகளுக்காக தீயின் அம்மா சரி பண்ணி வைப்பது..


* கடைசி காட்சியில் வயதான தீ பள்ளியை நோக்கி நடக்கும்போது அவளுடைய இளவயது ஞாபகங்கள் வருவது..



எல்லாக் காட்சிகளுமே கவிதையைப் போல் படமாக்கப் பட்டுள்ளது. மிகக் குறைந்த வசனங்களே இருந்தாலும் படம் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் அருமை. பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிச்சிங்கம் விருதினை இந்தப் படம் வென்றது.

சரி, தலைப்புக்கு வருவோம்..

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த தமிழ்ப்படம் - பூ. அருமையான திரைக்கதையும் பார்வதியின் அற்புதமான நடிப்பும் தமிழில் ஒரு உலக சினிமா என்று சொல்ல வைத்தது. அந்தப் படத்தின் இடைவேளைக் காட்சி.. மாமன் கேட்ட கள்ளிப்பழங்களை எடுத்துக்கொண்டு நாயகி அவன் வீட்டுக்கு வருவாள். அவன் ஊருக்கு கிளம்பி விட்டதாக கேள்விப்பட்டு அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துரத்திப் போவாள். ஒரு கட்டத்தில் கீழே விழுந்து பழம் எல்லாம் சிதறி போகும். இந்தக் காட்சி அப்படியே "The Road Home" படத்தில் உள்ளது. ஆசிரியருக்காக தீ காளான் உணவைத் தயாரிக்கிறாள். திடீரென அவர் ஊருக்கு கிளம்பியதை அறிந்து உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவரை துரத்தி ஓடுகிறாள். மலைப்பாதையில் வழுக்கி விழுந்து பாத்திரம் உடைந்து போகிறது. அழுது கொண்டே திரும்புகிறாள். மலைப்பாதையில் தீ காத்து நிற்பது, அப்படியே ஸ்ரீகாந்திற்காக பார்வதி காத்து நிற்கும் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. அதே போல, பூவின் பின்னணி இசை.. ட்ரைலர் பார்க்கும் போதே அசத்தலாக இருந்தது. அதுவும் இந்தப் படத்தின் பின்னணி இசையில் இருந்துதான் சுட்டிருப்பார்கள் போலத் தெரிகிறது. தமிழில் ஒரு உலக சினிமா எடுங்க.. அதுக்காக உலக சினிமாவையே சுட்டு எடுக்காதீங்கப்பா..தமிழில் வந்த சினிமாக்களில் பூ ஒரு மிகச்சிறந்த படம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால் அதில் இப்படி சில விஷயங்கள் நடந்து இருப்பதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது... !!!

(இந்தப் படத்தின் டிவிடியை தந்து உதவிய நண்பர் அகநாழிகை - பொன்.வாசுதேவனுக்கு நன்றிகள் பல.. )
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 15, 2009

சிகரெட் - தனக்குத்தானே கொள்ளி..!!!!

முன்பெல்லாம் தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பாக ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் செய்திப்படங்கள் காமிப்பார்கள். அதை பார்ப்பதற்காகவே தியேட்டருக்கு சீக்கிரம் போகும் பழக்கம் எனக்கு இருந்தது. இந்திய நாட்டுத் தலைவர்கள், பயணங்கள், தியாகிகள், சின்ன சின்ன கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும். செய்திப்படங்கள் போடும் பழக்கம் இப்போது சுத்தமாக மறைந்தே போய் விட்டது. ஆனால் அதிசயமாக, சமீபத்தில் அயன் படம் பார்க்க போனபோது மதுரையில் உள்ள தியேட்டரில் ஒரு படம் போட்டார்கள். அது ஒரு கார்ட்டூன் படம். அந்த படத்தின் பெயர்.." The first puff - புகைப்பழக்கத்தின் முதல் தருணம்.."
ஒரு சேரின் மேல் மனிதன் ஒருவன் அமர்ந்து இருக்கிறான். அவனுடைய உடல் இதய வடிவத்தில் இருக்கிறது. கீழே கிடக்கும் ஒரு பீடித்துண்டை எடுத்துப் புகைக்கிறான். அடுத்து அவன் புகைப்பது சிகரெட்டாக மாறுகிறது. இப்போது சிந்திக்கிறான். ஒரு குழாயை எடுத்து அதில் கஞ்சாவை நிரப்பி குடிக்கிறான். கடைசியாக போதை மருந்து. பேப்பரில் போட்டு சூடு பண்ணி அதையும் புகைக்கிறான். அவன் இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது அவனுடைய இதய வடிவிலான உடல் கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாக மாறி வருகிறது. அவனுடைய இதயத்தை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். வேகமாக கறுப்பாக மாறி அதிவேகமாக துடிக்கத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் படாரென வெடித்துச் சிதறுகிறது.
படத்தின் கடைசியில் இரண்டு வரிகள் தோன்றுகின்றன. " the first puff - might be your last puff". மொத்தப்படமும் ரெண்டே நிமிடம்தான். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இசையும் அருமை. எனக்குத் தெரிந்த வரை நம் மக்கள் உடம்புக்கு ஆகாது எனத் தெரிந்தும் செய்யும் ஒரு கெட்ட காரியம் என்றால் அது புகை பிடிப்பதுதான். இதில் பெரும் கொடுமை என்னவென்றால், அன்றைக்கு தியேட்டரில்.. இடைவேளையின் போது என்னால் வெளியே நிற்கவே முடியவில்லை. எங்கும் புகை மண்டலம். தண்ணி அடிப்பவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். எங்காவது ஓரமாக மல்லாந்து விடுவார்கள்.. அவர்களால் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப் படுவதில்லை. ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள்..? தங்களின் உடல் நலத்தையும் கெடுத்து.. அடுத்தவரின் நிம்மதியையும் உடலையும் பாழ் பண்ணி (passive smoking)... இவர்களை என்ன செய்வது?
எனக்கு அரசியல் கட்சிகளில் சுத்தமாக பிடிக்காத ஒரு கட்சி பா.ம.க. அதிலும் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் சுகாதாரத் துறை அமைச்சராக ஆனபோது மண்டை காய்ந்து போனேன். ஆனால், அவர் வாழ்க்கையிலேயே செய்த ஒரே உருப்புடியான விஷயம்.. புகையிலைக்கு எதிராக போராடியதுதான் என்று சொல்வேன். அவர் அதை அரசியல் காரணங்களுக்காக செய்து இருக்கலாம். ஆனால் அந்த முயற்சி ரொம்ப நியாயமானதே. அன்புமணியின் வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெறாமல் பார்த்துக் கொண்டது ஒரு நல்ல உதாரணம். காரணம், நம் தமிழ் மக்களை சினிமா எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அதேபோல பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் எத்தனையோ மக்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
கிட்டத்தட்ட 400 விஷப் பொருட்களையும், 4000 வேதியியல் பொருட்களையும் தன்னுள்ளே அடக்கியதுதான் சிகரெட். புகை பிடிப்பதனால் எட்டு நொடிக்கு ஒரு மரணம் நிகழ்கிறதாம். கேன்சர், இதய நோய்கள் என சிகரெட்டால் வரும் பிரச்சினைகள் ஏராளம். முக்கியமாக ஆண்மைக்குறைவு ஏற்படவும் சிகரெட் காரணமாக இருக்கிறது. புகைப்பவர்களை மட்டும் அல்லாது புகையை உள்வாங்கும் அருகில் இருக்கும் மனிதர்களையும் சிகரெட் வெகுவாக பாதிக்கிறது. இன்று வெளிநாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைக்கிறார்கள். இது அவர்கள் கர்ப்பமாக இருக்கும்போது சிசுவின் மரணத்திற்கு வித்திடுகிறது.
நீர் நிரம்பிய பாட்டில் ஒன்றில் சின்ன ஓட்டை விழுந்து தண்ணீர் ஒழுகி ஓடுவதைபோல.. மனிதன் புகைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் உடலை விட்டு வெளியேறுகிறது. உண்மையை சொல்வதானால், மனிதன் உயிருடன் இருக்கும்போதே தனக்கு தானே வைத்துக் கொள்ளும் கொள்ளிதான் சிகரெட். புகைக்கும் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்... அடுத்த முறை நெருப்பை பற்ற வைக்கும்போது ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்பது நீங்கள் மட்டும் அல்ல.. அதில் உங்கள் குடும்பமும் அடக்கம். உங்களை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் புகைக்கும்போது அவர்களின் நலனையும் நம்பிக்கையையும் சேர்த்துத்தான் எரிக்கிறீர்கள். இதை படிக்கும் யாராவது ஒருவர் சிந்தித்தால் கூட அதுவே எனக்குப் போதும்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 14, 2009

என்ன கொடுமை சார் இது...?

சனிக்கிழமை எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா என்பதால் வேலை ஜாஸ்தி. ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டரை மாணவ நண்பர்களுடன் கோவையில் கொண்டாட முடிவாகி இருந்தது. மறுநாள் இறுதியாண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா. எனவே மூணு நாலு நாளைக்கு பதிவுகள் பக்கம் சுத்தமா வர முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. சரி.. அதுவரைக்கும் நம்ம கடை காலியா இருக்க வேணாமேன்னு ஏழெட்டு படத்த டவுன்லோட் பண்ணி.. ஒரு மொக்கை பதிவு போட்டேன். சும்மா நண்பர்களை ஓட்டுவது மட்டுமே எனது எண்ணம். எனக்குள் இருக்கும் ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுத்தான் அது. ஒரு சில நண்பர்கள் அதை ரசித்து இருந்தனர். ஆனால் சில நண்பர்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதை பின்னூட்டத்திலும் அலைபேசியிலும் சொன்னார்கள். கார்த்தி எழுதுனா கொஞ்சம் உருப்புடியா இருக்கும்னு என்னை இன்னும் நம்பிக்கிட்டு இருக்கிற அந்த உள்ளங்களுக்கு நன்றி. அவங்ககிட்ட என் வருத்தத்த தெரிவிச்சுக்கிறேன். (கவனிங்க.. தலைவர் ஸ்டைல்.. வருத்தம்தான்.. )

இதுல ஒரு நொம்பலம் என்னன்னா.. நான் எழுதுனதுலே அதிகமான ஹிட்ஸ் இந்தப் பதிவுக்குத்தான் வந்திருக்கு.. 2000 ஹிட்ஸ்.. மனுஷன் உக்கார்ந்து யோசிச்சு நல்ல விஷயங்களா எழுதுனா அதை படிக்குற மக்கள் கம்மியாத்தான் இருக்காங்க.. ஆனா சும்மா எதையாவது எழுதி அதுக்கு தலைப்பு மட்டும் காமாசோமான்னு வச்சா.. (குறிப்பா இந்த 18 +).. கூட்டம் அள்ளுது.. என்ன கொடுமை சார் இது?

***************

மாணவ நண்பர்களுடன் அடிக்கடி ப்ளாகுகள் பற்றி பேசுவது உண்டு. போன வாரம் இதேபோல் பேசிக்கொண்டு இருக்கும்போது.. எஸ்ராவைப் பற்றி நான் எழுதியதையும் பின்பு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன். உடனே கேட்டுக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சொன்னான்..

"சார், நீங்க சொல்ற மாதிரி நடக்கும்னா நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சார்..".

எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பரவா இல்லையே.. நாம பேசி ஒரு பையனுக்குள்ள ஆர்வத்த தூண்டிட்டோமேன்னு நினைச்சுக்கிட்டு அவன்கிட்ட கேட்டேன்..

" சொல்லுடா.. எதப்பத்தி எழுதப் போற.."

அதுக்கு அவன் சொன்னான்.. "சார்.. என் வாழ்க்கையின் லட்சியமே நமீதாவை சந்திக்கிறதுதான்.. அதனால நான் ப்ளாக்ல அவங்களைப் பத்தி எழுதி.. அவங்கள போய் பாக்கலாம்னு இருக்கேன்.."

நான் அதுக்கப்பறம் அவன்கிட்ட என்னத்தப் பேச..? ஆணியே புடுங்க வேண்டாம்னு பேச்ச நிப்பாட்டிட்டேன்.. என்ன கொடுமை சார் இது..?

***************

கிளாஸ்ல பாடம் நடத்துறது போக, அப்பப்போ மத்த விஷயங்களையும் டிஸ்கஸ் பண்ணுவது உண்டு. பொது அறிவு, முக்கியமான நிகழ்வுகள்.. இந்த மாதிரி. அப்படித்தான் ஒருநாள் மாணவர்கள் தங்களுடைய தொடர்பு கொள்ளும் திறனை (communication skills) வளர்த்துக் கொள்வது பற்றியும், ஆங்கிலத்தில் தப்பில்லாமல் பேசுவது பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.."சும்மா சொல்லாதீங்க சார்.. ஆங்கிலம் ஒன்னும் ரொம்ப நல்ல மொழி எல்லாம் கிடையாது.. அதுல நிறைய தப்பெல்லாம் இருக்கு.. எக்கச்சக்கமான உச்சரிப்பு பிராப்ளம் உண்டு.. தெரியுமா.."

"எப்படிடா சொல்ற..." - நான்.

அவன் போர்டுக்கு வந்து எழுதத் தொடங்கினான்.

"ma - இது என்ன சார்?"

"ம..."

"chi - இது என்ன சார்?"

"சி..."

"ne - இது என்ன சார்?" "நி.."

"இப்போ எல்லாத்தையும் சேர்த்து வாசிங்க... ma chi ne - மச்சினி தான.. அப்புறம் என் மெஷின்னு சொல்றாங்க? "

எனக்கு வாயடைச்சுப் போச்சு. உக்கார்ந்து யோசிப்பாங்களோ? அவன் அத்தோடு நிறுத்தவில்லை.

"on - இது ஆன் தான் சார்.. e - ஈ.. அப்போ சேர்த்து எழுதுனா one - ஆணின்னு தான சொல்லணும்.. ஏன் ஒன் அப்படின்னு சொல்றாங்க..."

தெய்வமே என்ன விட்டுடுன்னு கெஞ்சாத குறையா ஓடி வந்தேன். இந்த பயபுள்ளைகள கட்டி மேய்க்கிறதுக்கு உள்ள.. நாம நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம் போல.. எ. கொ. சா. இ..?

***************

கடைசியாக.. ஒரு மாணவன் எனக்கு அனுப்பிய S.M.S...

"உலகின் எல்லா தலைசிறந்த இசைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கக்கூடிய மென்மையான பாடல்கள் கூட.. எங்கள் ஆசிரியரின் தாலாட்டின் முன் தோற்றுப்போகும்.. "

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இந்த விரோதி ஆண்டு நண்பனாக அமைய.. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 11, 2009

கதாநாயகிகளின் கவர்ச்சி படங்கள் (வயது வந்தவர்கள் மட்டும்....)














































ஹி.. ஹி.. ஹி.. நம்புங்கப்பா.. அந்தக் காலத்துல கவர்ச்சின்னா இவ்வளவுதான்.. அப்புறம் அந்தத் தலைப்பு.. வயதானவர்கள் மட்டும்னு போட வேண்டியது.. வயது வந்தவர்கள் மட்டும்னு கொஞ்சம் நாறிப் போச்சு.. சீ சீ.. மாறிப் போச்சு..

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 9, 2009

பிரியமான தோழிக்கு...!!!



என்னவென்று விவரிக்க இயலாத
ஏதோ ஒரு கணத்தில் எனக்கும்
உனக்குமான உறவு உருப்பெற்றது..!!

நாம் காதலர்கள் அல்ல..
இருந்தும்.. நம்
நட்பைக் காதலிக்கிறோம்..!!

எனக்குள் இருக்கும் உன்னை
உனக்குத் தெரியும்..
உனக்குள் இருக்கும் என்னை
எனக்குப் புரியும்..!!

வானம் அழுது தீர்த்த
ஒரு மாலை நேரத்தில்..
குடை மறந்த எனக்காய்
நீ நனைந்த நினைவுகளும்..

உன் சந்தோஷமும் துக்கமும்
என்னுடனாய் - பகிர்ந்து
கொண்ட சந்தர்ப்பங்களும்..

உன் அம்மா உன்னை
திட்டிய தினத்தன்று - என்
தோள் சாய்ந்து அழுத பொழுதுகளும்..

என் எல்லாப் பிறந்த நாளுக்கும்
முதல் மனுசியாய் நீ
சொன்ன வாழ்த்துக்களும்..

நான் அழுத போதெல்லாம்
கை படாமல் துடைத்த பாங்கும்..

தோழி..

நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..

நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..

ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!

(இந்தக் கவிதையின் கரு என்னுடையது அல்ல... எப்போதோ படித்த கவிதை ஒன்றின் வரிகள் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. அத்துடன் என்னுடைய வார்த்தைகளையும் கோர்த்து எழுதி இருக்கிறேன்...)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 8, 2009

ரயில் பயணங்களில்...!!!

மதுரை ரயில் நிலையம். ஈரோடு வழியாக பெங்களூர் வரை செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். பிளாட்பாரம் எங்கும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனர். வண்டி அரை மணி நேரம் தாமதமாக வந்தது. வண்டியின் உள்ளேயும் பயங்கர ஜனத்திரள். எல்லோருக்கும் பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு அடித்து பிடித்து ரயிலில் ஏறினால் நிற்கக் கூட இடம் இல்லை. என்னருகில்.. ஒரு பாட்டி கையோடு ஒரு சிறு குழந்தையையும் கூட்டி வந்து இருந்தார்கள்.

"தம்பி.. கொஞ்சம் இடம் விட்டீங்கன்னா வயசானவ உக்காந்துக்குவேன்.."

"பரவா இல்லை பாட்டி.. இப்படி கீழ உக்காருங்க.."

மெதுவாக கீழே அமர்ந்தவர் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். அவர் மடியில் அந்தக் குழந்தை படுத்துக் கொண்டது. சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கொண்டார். பக்கத்தில் நடந்து போன ஒருவர் தெரியாமல் அவரை இடித்தபோது காச்மூச்சென்று கத்தத் தொடங்கி விட்டார். எனக்கு எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லும் விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடி கேட்பார்கள்.." சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து கதவை ஒட்டி நின்று கொண்டேன். ரயில் நகரத் தொடங்கி இருந்தது. காற்று மிதமாக என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. இரவின் குளிர் காற்றில் எங்கும் பாவி இருந்தது.


தரையில் நிறைய பேர் உட்கார்ந்து இருந்தார்கள். என்னை ஒட்டி நின்று இருந்த சிலர் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். வடமாநிலத்தவர் போல.. வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? எதை தேடி பயணம் செய்கிறார்கள்? இவர்களுடைய குடும்பத்தினர் இவர்களைப் பற்றி கவலைப் படுவார்களா? எனக்குள் நிறைய கேள்விகள். வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் இருள் படர்ந்து இருந்தது. மரங்களும் விளக்குக் கம்பங்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.


வாசற்படியில் அமர்ந்து இருந்த ஒரு ஹிந்தி இளைஞன் காதில் செல்போனை மாட்டிக் கொண்டு சத்தமாக பாடி கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். " பாகோ மே சலே ஆ..." நானும் மெதுவாக அந்தப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். நான் பாடுவதை அவன் கவனித்து விட்டான். சட்டென்று நின்று போன பெருமழை போல, நத்தை தனது கூட்டுக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது. எதற்காக அவன் பாடலை நிறுத்தினான்? நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம். அவனுடைய சந்தோஷத்தை பறித்துக் கொண்டதுபோல் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. மெதுவாக ரயிலின் உள்ளே திரும்பி நின்று கொண்டேன். சற்று நேரம் கழித்து அவன் மீண்டும் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.


ரயிலின் உள்ளே கலைத்துப் போட்ட சீட்டுக்களாய் மக்கள் எல்லா இடங்களிலும் உக்கார்ந்து இருந்தார்கள். கதவை ஒட்டிய முதல் கூபெவில் ஒரு குடும்பம் பொறுமையாக தாங்கள் கொண்டு வந்த புளிச்சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலை ஒட்டி ஒரு ஜோடி அமர்ந்து இருந்தது. புதுமணத் தம்பதி என்பது பார்த்தவுடன் புரிந்தது. பெண் ரொம்ப சின்னவராக இருந்தார். நிறைய பேசிக்கொண்டே வந்தார். அவள் கணவரோ அதில் சுவாரசியம் இல்லாமல் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் பேச்சை நிறுத்தி விட்டு ஜன்னலின் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அந்தக் கண்களில் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம் தேங்கி நின்றது . இதற்குள் ரயில் திண்டுக்கல்லை அடைந்து விட்டு இருந்தது.


ரயிலுக்குள் இரண்டு குறவர்கள் ஏறினார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையை துவைத்து பல மாதங்கள் இருக்கும். ரயிலில் நின்றவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து முகம் சுளித்தார்கள். ஒருவர் அவர்களிடம்.."டேய்.. இங்க எல்லாம் நிக்கக் கூடாது.. போ.. போய் கக்கூஸ் பக்கத்துல உக்காரு.." அவர்கள் எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? எனக்குப் புரியவில்லை. ரயிலுக்குள் பார்த்தேன். அந்தப் பெண்ணின் கணவர் அவள் தோளின் மீது சாய்ந்து தூங்கி விட்டிருந்தார். நான் கையோடு எடுத்துப் போயிருந்த "பதினெட்டாம் நூற்றாண்டின் மழை"யில் ஆழ்ந்து போனேன். கரூர் வந்தபின்தான் உட்கார இடம் கிடைத்தது.

சிறிது நேரத்திற்குப் பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. ஏதாவது கிராசிங்கா இருக்கும் என்றார்கள். வெகு நேரமாக வண்டியின் உள்ளேயே இருந்ததால் மூச்சு முட்டுவது போல் இருந்தது. கொஞ்ச நேரம் கீழே நிற்கலாம் என்று இறங்கினேன். ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு மனிதர் "கடலை சார், டைம்பாஸ் கடலை சார்.." என்று கத்தியவாறே கடலை விற்றுக் கொண்டிருந்தார். அருகில் கிடந்த சிமென்ட் பெஞ்சின் மீது படுத்துக் கொண்டேன். விரித்து வைத்த கறுப்புப் போர்வையாய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெளிச்ச பொட்டுக்களாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது. பொதுவாக எனக்கு தனிமை பிடிப்பதில்லை. எனினும் அந்த இரவின் ஏகாந்தம் ரொம்ப ரம்மியமானதாக இருந்தது.

திடீரென.. யாரோ என்னை பார்ப்பதுபோல் ஒரு குறுகுறுப்பு. அந்த பெண்ணும் ஜன்னல் வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தவள், என்னை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இனம் புரியாத ஒரு ஆர்வமும் சிநேக பாவமும் இருந்தன. அவளும் வானத்தை ரசித்து கொண்டு இருந்திருக்கிறாள். எனக்கு அவளைப் பார்க்கையில் சொல்லவொண்ணாத உணர்வுகள் தோன்றின. முக்கால் மணி நேரம் கழித்து ரயில் கிளம்பியபோது நான் அவளை எனக்கு மிகவும் நெருக்கமானவளாக உணர்ந்தேன்.

ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது மணி ஒன்றாகி இருந்தது. அந்தத் தம்பதியும் ஈரோடுதான் போல.. இறங்கி எனக்கு எதிர் திசையில் நடக்கத் தொடங்கினர். அந்தப் பெண்ணின் முகமும் அவள் உதடுகளில் தேங்கி நின்ற சிரிப்பும் எனக்குள் நன்றாக பதிந்து விட்டிருந்தது. நான் ரயிலை பிரிந்து நடந்தேன். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 6, 2009

அயன் - திரை விமர்சனம்...!!!


சுரேஷ் - பாலா (சுபா..) தமிழின் மாத நாவல் எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். ஆக்சன் காட்சிகளை இவர்களின் எழுத்தில் படிக்கும்போது நேரில் பார்ப்பது போலவே இருக்கும். இவர்களின் சூப்பர் நாவல் அட்டைப்படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர்தான் கே. வி. ஆனந்த். தனது ஒளிப்பதிவில் முதல் படமான தேன்மாவின் கொம்பத்துக்காக தேசிய விருது வாங்கியவர். இவர்களுடைய நட்பு இன்று வரை தொடர்வது சந்தோஷம். ஆனந்த் இயக்கிய முதல் படமான "கனா கண்டேன்" சுபாவின் பூமிக்குள் புதைந்தவன் என்னும் நாவலின் கதைதான். இந்த நண்பர்கள் கூட்டணியுடன் சூர்யா, ஹாரிஸ், சன் பிக்சர்ஸ், AVM முதலான பெரும் தலைகள் இணைந்து இருக்கும் பர பர ஆக்சன் படம்தான் "அயன்".


வெளிநாட்டில் இருந்து வைரம், புதுப்பட சிடி என்று சகலத்தையும் கடத்தி வருபவர் சூர்யா. தன் அப்பாவின் நண்பரான பிரபுவுக்காகவும், த்ரில்லுக்காகவும் இந்த கடத்தல் வேலைகளை செய்கிறார். இவர்களின் தொழில்ரீதியான எதிரி ஆகாஷ். பணத்துக்காக தன் அப்பாவையே கொல்லும் அளவுக்கு மோசமான வில்லன். பிரபுவின் கூட்டத்தில் புதிதாக சேரும் ஜெகன் சூர்யாவின் நண்பன் ஆகிறார். ஜெகனின் தங்கை தமன்னா சூர்யாவைக் காதலிக்கிறார். உண்மையில் ஜெகன் ஆகாஷின் ஆள். பிரபுவை கஸ்டம்சில் போட்டுக் கொடுக்க முயற்சிக்கையில் சூர்யா காப்பாற்றி விடுகிறார். உண்மை தெரிந்து நண்பர்கள் பிரிகிறார்கள்.


பணத்துக்காக ஆசைப்பட்டு வயிற்றில் போதை மருந்துடன் மலேஷியா போகிறார் ஜெகன். அதே விமானத்தில் சூர்யாவும் பயணம் செய்கிறார். வயிற்றுக்குள் போதை மருந்து காப்சூல் உடைந்து போக உயிருக்கு போராடும் ஜெகனை சூர்யா காப்பாற்ற முயல்கிறார். ஆனால் ஆகாஷின் ஆள்கள் ஜெகனைக் கடத்தி போதை மருந்தை எடுப்பதற்காக வயிறைக் கிழித்து கொன்று போடுகிறார்கள். ஊர் திரும்பும் சூர்யா கஸ்டம்ஸ் ஆபிசர் பொன்வண்ணன் உதவியுடன் ஆகாஷின் திட்டங்களை தவிடு பொடியாக்குகிறார். வில்லன் சூர்யாவைக் கொல்ல முயற்சிக்க அதில் பிரபு பலியாகிறார். கடைசியில் வில்லனைக் கொன்று சூர்யா வாழ்க்கையில் நல்வழிக்கு திரும்புவதுதான் கதை.


செம அதிரடியாக, ப்ரெஷாக... சூர்யா. பின்னி எடுக்கிறார். நகைச்சுவை பகுதிகளை ரொம்ப எளிதாக ஹாண்டில் செய்து உள்ளார். சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். எல்லா ஹேர் ஸ்டைல்களும் அவருக்கு அழகாக இருக்கிறது. உடைகளும் செம மாட்சிங். உள்ளாடையோடு அறிமுகம் ஆகிறார் தமன்னா. (ஆதவா.. நோட் பண்ணுப்பா..) கல்லூரிக்கு பிறகு இந்தப் படத்தில் தான் எனக்கு அவரை பிடித்து இருக்கிறது. பாடல்களுக்கு பயன்பட்டு இருக்கிறார்.


படத்தின் முக்கியமான நபர் ஜெகன் ( விஜய் டிவி கடவுள் பாதி மிருகம் பாதி புகழ் நண்டு) . கேரக்டர் ஒரு மாதிரி என்றாலும் பின்னி எடுத்துள்ளார். இவர் பேசும் ஒரு வரி வசனங்கள் சக்க காமெடி. கடைசியில் நண்பன் கண் முன்னாடியே உயிர் விடும்போது மனதைத் தொடுகிறார். வில்லன் ஆகாஷ் ஓகே ரகம்தான். சூர்யாவின் அம்மாவாக ரேணுகா . பிரபு நியாய சிந்தனைகள் கொண்ட கடத்தல்வாதியாக வருகிறார். கருணாசும் உள்ளார்.


படத்தின் உண்மையான ஹீரோ - ஒளிப்பதிவாளர் M.S. பிரபு. டைட்டில் பறவைப் பார்வையில் வெவ்வேறு நாடுகளை காண்பிக்கும்போது ஆரம்பிக்கிறது அதகளம். ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பயன்படுத்தி இருக்கும் கலர் டோன்கள் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. காங்கோவில் நடைபெறும் சேஸ்.. மலேஷியா கார் சேஸ் என்று காமிரா வித்தை காட்டுகிறது. பாடல்களை படமாக்கி இருக்கும் விதம்.. அட்டகாசம். பாலைவனம், நீண்ட வானம், அந்திச் சூரியன், கடல் எல்லாம் ஒன்று சேரும் நெஞ்சே நெஞ்சே பாடலில் அசத்தி உள்ளார்கள். கனல் கண்ணன் சண்டைக் காட்சிகளை தூளாக அமைத்துள்ளார். முதல் சேஸ் Casino royale, ong bak, rumble in the bronx போன்ற படங்களை நினைவு படுத்தினாலும் நன்றாக எடுத்துள்ளார்கள். ஹாரிஸின் இசையில் பாடல்கள் ஹிட். ராஜீவனின் கலையும் ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்தை கூட்டுகின்றன.


படத்தின் மிகப் பெரிய மைனஸ் - லாஜிக்கே இல்லாதது...

* பல வேடங்களில் சூர்யா கடத்தல் செய்வது நம்பும்படி இல்லை..

* அண்ணன் ஜெகன் தங்கையின் காதலை பார்க்கும் விதம்...

* சென்னை பாஷை சூர்யாவுக்கு சுத்தமாக பொருந்த வில்லை..

* தேவையே இல்லாமல் வரும் ஹனி ஹனி பாடல்..

* கண்முன்னே வில்லன் ஒரு சின்ன பெண்ணை நாசம் செய்வதை சூர்யா வேடிக்கை பார்த்துவிட்டு வீடியோ மட்டும் எடுத்து வருவது..


இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அதை அனைத்தையும் மறக்கடித்து விடுகிறது.. கே. வி. ஆனந்தின் திரைக்கதை. காங்கோவில் நடக்கும் ராணுவக் கொடுமைகளை குழந்தைகள் புட்பால் விளையாடும் ஒரே காட்சியில் புரிய வைத்து விடுகிறார். (தேவை இல்லாமல் சிட்டி ஆப் காட் படம் ஞாபகத்திற்கு வருகிறது...) சின்ன சின்ன உத்திகளை படம் முழுக்க சுவாரசியமாக பயன்படுத்தி உள்ளார். குறிப்பாக.. குல்பி ஐஸின் மணிச் சத்தம் மூலம் சூர்யா வில்லனை அடையாளம் காணும் காட்சி. அதே போல் படம் முழுவதும் வரும் அந்த "ரீவைண்ட்" யுத்தியும் அருமை. மொத்தத்தில் ஒரு நல்ல ஆக்சன் படம் பார்த்த திருப்தி.

அயன் - அதிரடி அசத்தல்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 2, 2009

பற பற பற.. பட்டாம்பூச்சி...!!!


பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி... இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியுகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். (நன்றி: தமிழ் விக்கிப்பீடியா...)


இருங்க இருங்க.. பொறுமை.. இப்போ இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா.. நாம வாங்குன பட்டாம்பூச்சி விருத நம்ம நண்பர்களுக்குத் தரப் போறோம். கூடவே கொஞ்சம் பொது அறிவையும் வளர்ப்போம்னுதான். (ஹி ஹி ஹி...) ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நண்பர் வேத்தியன் எனக்கு இந்த விருதைக் கொடுத்தார். நேத்து நம்ம நண்பர் ஷீ-நிசி போனப் போட்டு தி(கு)ட்டிட்டார். "அழகா சுதந்திரமா பறக்க வேண்டிய பட்டாம்பூச்சிய உன்னோட வலையில ஏன் சிறைப்பிடிச்சு வைக்குறன்னு.." அதனால விருதைக் கொடுத்திர வேண்டியதுதான்..


அதுக்கு முன்னாடி.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா உங்களுக்கு உள்ளேயே விருது கொடுத்து வெளையாண்டுக்கிட்டுன்னு கேள்வி கேக்குறவங்களுக்கு.. தப்பில்ல.. நாலு பேருக்கு சந்தோஷம் கிடைக்கும்னா எதுவும் தப்பில்ல.. இந்த மாதிரி விருது கொடுக்குறது எதுக்கு? ஒரு சின்ன ஊக்கம் தானே.. நாலு பேரு நாம எழுதறத படிக்குரதுங்கறதே ஒரு சந்தோஷம்தான.. கூடவே ஒரு அங்கீகாரம் கிடைச்சா இன்னும் நல்லா எழுதணும்னு மக்கள் நினைப்பாங்கல்ல.. நண்பர்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதை விட உலகத்துல பெரிய விஷயம் ஏதும் இருக்கா என்ன..?


நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்கும் நண்பர்கள்..




புதிய பதிவர்களைத் தேடிப்பிடித்து ஊக்குவிப்பவர். குறைவாக எழுதினாலும் நல்ல பதிவுகளை எழுதுபவர். பதிவுலகில் நான் மட்டுமே படித்து வந்த என் பதிவுகளை மற்றவரும் அறியச் செய்தவர். இவருடைய காதல் கவிதைகள் ரொம்ப அருமையாக இருக்கும்.




ரொம்ப ஜாலியான மனிதர். மற்றவர்களை ஓட்டுவது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். மும்பையில் வேலை பார்க்கிறார். இவருடைய கற்பனை கவிதைகளும், கார்ட்டூன் குசும்புகளும் அட போட வைக்கும்.




போலிஸ் என்பதையும் தாண்டி எனக்கும் ராமிடம் பிடித்த விஷயம் -நல்ல மனிதர். தீடிர்னு காதல் கவிதை எழுதுவார். அடுத்த நாளே நாட்டுப் பற்றோட சல்யூட் வைப்பார். இன்னொரு முறை தன்னை அசத்திய மனிதர்கள் பற்றி.. எல்லாம் எழுதுபவர். பழமொழியில் சதம் கண்டவர்.




திருப்பூரில் இருந்து எழுதும் நண்பர் சொல்லரசன் சமூகத்தின் மீது தீராத கோபம் கொண்டவர். இவருடைய எல்லாப் பதிவுகளுமே ஏதோ ஒரு வகையில் அரசியல் மீதான கோபம் கொண்டதாகவே இருக்கும். கொஞ்சமாக, ஆனால் காட்டமாக எழுதுபவர்.




புகைப்படக் கலையில் அலாதி விருப்பம் கொண்டவர். யாரும் தொடாத தளங்களை பற்றி திடீர்னு கவிதைகள் எழுதுவார். அவ்வப்போது கதைகளும்... கொஞ்சம் அரசியல் கோபமும் உண்டு.




இளைஞர். சிவகாசியில் இருப்பவர். வாழ்க்கையின் கஷ்டங்களுக்கு இடையே தன்னுடைய விருப்பங்களை காக்க போராடி வருபவர். வித விதமான படங்களாக தேடி பதிவிடுவார். நகைச்சுவையாக படிக்க இவரது தளத்துக்கு சென்றால் போதும். கவிதைகளும் தத்துவமும் கூட உண்டு.


ஏய்.. ஏய்.. நிப்பாட்டு.. மூணு பேருக்குத்தான கொடுக்கணும்.. நீ பாட்டுக்கு கொடுத்துகிட்டே போறன்னு நினைக்காதீங்க நண்பா.. என்னைய விட்டா எல்லாருக்கும் கொடுத்துருவேன்.. அப்புறம் நம்ம நண்பர்கள் விருது கொடுக்க ஆள் இருக்க மாட்டாங்கலேங்குற ஒரே காரணத்துக்காக இத்தோட நிப்பாட்டிக்குறேன்.. மத்தபடி இந்த விருது என்ன பண்ணனும்.. எப்படி கொடுக்கணும்.. எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதாத்தான் இருக்கும்.. பட்டாம்பூச்சி விருத என்ன பண்ணனும்னு கேக்குறவங்க வேத்தியனோட இந்தப் பதிவ படிங்க.. விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.. !!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துறை
போடுங்க..)