January 31, 2011

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடிசாவடிஎன்கிற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் / றோம். இன்றைய தமிழ்ச்சூழலில் முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புலகம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம். இதன் தொடர்ச்சியாக 30-01-2011 அன்று மதுரை காக்காத்தோப்பில் இருக்கும் மூட்டா ஹாலில்சாவடியின் முதல் அமர்வு நடைபெற்றது. “இரவுக்காட்சி என்கிற தன்னுடைய சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் இந்த நிகழ்வின் முதல் படைப்பாளியாக கலந்து கொண்டார்.

மதுரையில் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவர்கள் - சமயவேல், .ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, ஹவி மற்றும் அவரது துணைவியார் இந்திரா, செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர்.வலைப்பதிவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். வாசிப்பில் புதிதாக நுழைய விழையும் வாசகர்கள் மற்றும் சில பெயர் தெரியா நண்பர்கள் என பலர் ஒன்று கூடிட நிகழ்வு பதினொரு மணிக்குத் தொடங்கியது. நிகழ்வுகளை என்னுடைய நினைவிலிருந்து மீட்டெடுத்து முடிந்தவரை சரியாக எழுத முற்படுகிறேன். எங்கும் ஏதேனும் தவறு இருந்தால் தொடர்புடையவர்கள் மன்னியுங்கள்.

முதலாவதாக எஸ்.செந்தில்குமார் பேசினார். “ஆரம்பிக்குமுன், இன்றைக்கு நாம் எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று பேசுவோம். அகச்சிக்கல்கள், நெருக்கடி என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் விஷயங்களைத்தான் காலம் காலமாக எழுதி வருகிறோம். அப்படிப் பார்க்கும்போது இன்றைய இளம் படைப்பாளிகளுக்கான பெரும் நெருக்கடியாக எது இருக்கிறது? பெரும்பாலும் காமம் சார்ந்த விஷயங்களையே அவர்கள் எழுதி வருவதாக எனக்குப் படுகிறது. அதிலும் குறிப்பாக, தன்னை விட மூத்த பெண் மீது ஒருவன் கொள்ளும் காதல். அப்புறம் இன்னொரு விஷயம், சுய மைதுனம். அதை விடுத்து உடல் சார்ந்து பேச பல விஷயங்கள் இருந்தாலும் நாம் பக்கம் பக்கமாக சுயமைதுனம் செய்து கொண்டிருக்கிறோம். இது சரிதானா? மௌனியில் ஆரம்பித்து தி.ஜாவில் தொடர்ந்து இன்றுவரைக்கும் திரும்ப திரும்ப இது எழுதித் தீராத விஷயமாக இருக்கிறது.. ஏன்? நாம் சார்ந்து இருக்கக் கூடிய சமுதாயத்தில் நமக்கு எவ்விதமான சிக்கலும் இல்லையா? ஏன் அவற்றை எல்லாம் இளம் படைப்பாளிகள் எழுத முன்வருவதில்லை..?”

கே.என்.செந்தில் - "நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. காலம் காலமாக பெண்ணின் மீதான காமம் மட்டுமே பதியப்பட்டு வருவதாக நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லை. புதுமைப்பித்தனின் எழுத்திலோ இல்லை மௌனியின் எழுத்திலோ நீங்கள் சொல்லும் மூத்த பெண் மீதான காமம் என்பது எதுவும் கிடையாது. தி.ஜாவும் அதன் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரின் எழுத்தில் இது போன்ற விஷயங்களைக் காணலாம். என்றாலும், இன்றைக்கு இருக்கக் கூடியவர்களுக்கு தங்களுடைய மிக முக்கியமான பிரச்சினையாக அவர்களுடைய உடல்தான் இருக்கிறது. தன் பிரதான பிரச்சினைகள் என நாம் நம்பக் கூடிய விஷயங்களையே ஒரு எழுத்தாளன் பதிவு செய்கிறான் எனும்போது காமம் சார்ந்து நிறைய பேச வேண்டியதாக இருக்கிறது.."

செந்தி - "இந்த தொகுப்பின் முன்னுரையில் இருக்கும் செந்திலின் சில வார்த்தைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முக்கியமானது என நான் எண்ணிய சில பாத்திரங்கள் ஒன்றுமில்லாமல் போக திடீரென உருவான சில பாத்திரங்கள் கதையின் மையமாகிப் போன விஷயங்கள் இங்கே நிகழ்ந்து இருக்கின்றன. கதையை நான் எழுதினேன் என்பதை விட கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பதுதான் மிகச் சரியாக இருக்கும். இது எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. அப்புறம் கதைகளைப் பற்றி, முதல் கதையில் வாரும் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது. கீழ்த்தரமான பழக்கங்களால் அவனுடைய உடலும் மனமும் சிதைந்து போயிருந்தன. இதில் "கீழ்த்தரமான" என்ற வார்த்தையை எப்படிப் பயன்படுத்தலாம்? ஆசிரியர் அதை தீர்மானிப்பது சரிதானா? அதேபோல கதையின் நாயகனின் பின்புலம் லாட்டரி மீது மோகம் கொண்டவன் என்பதாக இருக்கிறது. இதையும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். இரண்டாம் கதையான கிளைகளில் இருந்து கூட இதே போல வர்ணனைகளின் மீது மட்டுமே கவனம் கொள்வதாக எனக்குப் படுகிறது. தொகுப்பின் தலைப்புக் கதையான இரவுக்காட்சி எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சில நெருடல்கள் தவிர்த்து இது எனக்கு ரொம்பவும் பிடித்த தொகுப்பாக இருக்கிறது"

கே.என்.செந்தில் - "என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் எதையும் தீர்மானம் செய்வதில்லை. அது அந்த கதாபாத்திரம் உணரக் கூடிய உணர்வு மட்டுமே. பெண்கள், சுயமைதுனம் எனத் தன் உடம்பை அழித்துக் கொண்ட ஒருவன் தன்னைப் பற்றி தானே சொல்லும்போது இருக்கக் கூடிய குற்றவுணர்வை மட்டுமே அங்கே பார்க்க முடியும். மற்றபடி கதைக்குத் தேவையான வர்ணனைகள், சூழலை விளக்க கண்டிப்பாகத் தேவை என நான் நம்புகிறேன்."

பா.திருச்செந்தாழை - "இன்றைக்கு எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் சொல்ல முடியும். அது criminality மற்றும் sexuality. அதிலும் குறிப்பாக பாலுணர்வு சார்ந்து இயங்கும்போது ஒரு மனிதனுக்கு வரக்கூடிய அடிப்படை உணர்வுகளையும், குற்ற மனப்பான்மையும் பதிவு செய்வதுதான் முக்கியம் என நான் நம்புகிறேன். ஏன் என்றால் இவை தவிர்த்து எழுதப்படும் மற்ற விஷயங்கள் எல்லாமே காலாவதியாகி விட்டன. அன்பு, கருணை என்று அதை எல்லாம் மீண்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது என்பது வெறும் பாவனையாகவே இருக்கக் கூடும்.."

சமயவேல் - "எதை எழுதுவது என்பது பற்றிய இன்றைய படைப்பாளிகளுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை முன்னோடிகளின் சாதனைதான். சிறுகதைகளின் அத்தனை சாத்தியங்களையும் அவர்கள் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. எனவே இன்றைக்கு எழுதும்போது எந்த சூழலிலும் அவர்களுடைய சாயல் என்பது வந்து விடக் கூடாது என்பதில் இளம் தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதேபோல செந்தாழை சொன்னது ஒரு முக்கியமான விஷயம். குற்றமும் பாலியலும் இன்றைக்கு பெரும்பாலான கவனத்தைப் பெற முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நம்மால் அத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்பதால்தான்... இதுதான் எழுத வேண்டும் என்று யாராலும் அருதியிட்டுச் சொல்ல முடியாது.."

கே.என்.செந்தில் - "இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமானால் மூத்த படைப்பாளிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதையே நான் தீர்வாக சொல்லுவேன். என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே நமக்கான இலக்கு எது என்பதை நாம் தீர்மானம் செய்ய முடியும்.."

ஹவி - "அகச்சிக்கல்கள் பற்றி இங்கே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய உடல் மட்டுமே சிக்கலான ஒன்றாக இருக்குமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது என்றே நான் சொல்லுவேன். நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன? அவற்றோடு இணைந்துதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது அவை எப்படி நம்மை பாதிக்காமல் இருக்க முடியும்? உலகமயமாக்கல், அது சார்ந்த பிரச்சினைகள் என்று நிறைய பேசுகிறோம். நிறைய இழந்து விட்டோம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் பெருநகரத்தின் இன்னொரு முகத்தை நாம் ஏன் பதிவு செய்ய மறுக்கிறோம். சென்னையில் ஒரு மின்தொடர்வண்டியில் நானும் என் மனைவியும் போய்க் கொண்டிருந்தோம். திடீரென என் மனைவிக்கு அடக்க முடியாத இருமல். எதிரே அமர்ந்து இருந்த மனிதர் சட்டென தன் கையில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைக் கொடுத்து குடிக்கச் சொன்னார். திருப்பிக் கொடுத்தபோது கூட நான் இறங்கி விடுவேன் உங்களுக்கு உதவும் வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இறங்கிப் போய் விட்டார். இப்படியான மனிதர்களும் நகரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நாம் ஏன் பேசாமல் புலம்ப மட்டுமே செய்கிறோம்? இப்போது தொகுப்பை முன்வைத்து, கே.ஏன்.செந்திலுடைய கதைகள் நேர்மையாக இருக்கின்றனவா? தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லிடும் முனைப்பு அவரிடம் இருக்கிறது. ஒரு ஏழு வயது பையனைப் பற்றிக் கதை சொல்லும்போது அங்கே அந்த சிறுவனுடைய மனநிலையில்தான் கதைஸ் சொல்ல வேண்டும். மாறாக எனக்கு அங்கே ஆசிரியரின் கொள்கைகளை எல்லாம் சிறுவனின் மீது அவர் இறக்கி வைப்பதாகப் படுகிறது. ஒருவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அவன் என்ன மாதிரி எல்லாம் சிந்திக்க முடியும்? போகும் வழியில் செந்தில் உண்டாகும் பிம்பங்களை எல்லாம் என்னால் துல்லியமாக கவனிக்க முடிவதில்லை.. எதற்காக இத்தனை சிதறல்கள்? கேன்வாஸ் பெரிதாக இருக்கிறது என்பதற்காக அத்தனை விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்து விடவேண்டும் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.."

(உரையாடலின் தொடர்ச்சி அடுத்த இடுகையில்..)

January 28, 2011

எஸ்.எம்.எஸ் மொக்கைகள் (2)

1980 - டி பி (IDBI) பேங்க்ல அம்பானிக்கு லோன் தர முடியாதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு அதே பேங்கை நாம வாங்கலாமான்னு அம்பானி யோசிச்சுக்கிட்டு இருக்காரு. மனுஷன் நினைச்சா சாதிக்க முடியாதது எதுவுமே இல்லைன்னு இதுல இருந்து தெரியுது. அதே மாதிரி..

இப்போ.. 2011 - எனக்கு கனரா பேங்க்ல லோன் தர மாட்டேன்னு சொல்லிடாங்க. அதனால கண்டிப்பா 2025..

ரொம்ப யோசிக்காதீங்க. நான் மறுபடியும் லோன் தான் அப்ளை பண்ணப் போறேன். ஏன்னா.. கனரா பேங்க் கவர்மெண்டு பேங்க். விலைக்குக் கேட்டா கொன்டேபுடுவாங்க..

***************

டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: ஐஸ்வர்யா

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..

***************

இரண்டு குடிகாரர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"மச்சி என்னடா இவ்ளோ தூரம் நடந்தும் படியேறியும் இன்னும் நாம மேல போகவே இல்லையே.."

"அட அது கூட பரவாயில்ல மாமு.. சனியன் புடிச்சவனுங்க.. கைப்பிடிய எம்புட்டு கீழ வச்சிருக்காங்க பாரு.."

***************

சர்தாரும் அவருடைய மனைவியும் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்திருந்தார்கள். ஜட்ஜ் எவ்ளவோ சொல்லியும் ரெண்டு பேரும் பிரியணும்னு தீர்மானமா சொல்லிட்டாங்க. கடைசியா ஜட்ஜ் கேட்டார்.

"உங்களுக்குத்தான் மூணு பிள்ளைங்க இருக்காங்களே.. அவங்கள எப்படி பிரிச்சுப்பீங்க.."

ரொம்ப யோசிச்சுட்டு சர்தார் சொன்னார்.

"சரி விடுங்க.. நான் அடுத்த வருஷம் டைவர்ஸ் பண்ணிக்கிறேன்.."

***************

காதலர் தினம் இருப்பதால்தான் என்னமோ, அந்த மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு..

***************

பெண்களின் கண் அசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஆனால் ஒரு உண்மையான ஆண் நண்பனின் கண் அசைவுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு.

"மச்சி.. டக்குன்னு திரும்பாத.. ஒரு சூப்பர் பிகரு நம்மள கிராஸ் பண்ணிப் போகுது.."

***************

மயிலுக்கும் கிளிக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?

மயில் தேசியப்பறவை..

கிளி ஜோசியப்பறவை...

ஓகே ஓகே நோ டென்ஷன்.. இந்த மாதிரியான அறிவாளி விஷயமெல்லாம் எனக்குத்தான் தெரியுமாக்கும்..

***************

எனக்குக் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு. நல்லா விம் போட்டு வெளக்குனீங்கன்னா வசதியா இருக்கும்.

-> தண்ணிப்பாம்புக்கு ஜல்ப்பு பிடிக்குமா?

-> கருப்பா இருக்குற எருமைமாடு எப்படி வெள்ளக் கலர்ல பால் கொடுக்குது?

-> சரக்கு ரயில் தள்ளாடுமா?

-> பிராந்திய ஹாட் டிரின்க்னு சொல்றாங்களே.. அதை அப்படியே குடிக்கணுமா இல்ல ஆத்திக் குடிக்கணுமா?

-> ஒல்லியா இருக்குற பின்ன (pin) ஏன் குண்டூசின்னு சொல்றோம்?

-> கொசு கொட்டாவி விடுமா?

- இவண்
இப்படியெல்லாம் யோசிச்சாலாவது பெரிய விஞ்ஞானி ஆக முடியுதான்னு முயற்சிப்போர் சங்கம்.

இப்போதைக்கு அவ்ளோதான். இம்மாதிரியான கடிகள் இனிமேல் அடிக்கடி தொடரும். நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்..:-)))

January 21, 2011

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள் (2)

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள்

கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த மொத பதிவை எழுதினேன். ஆனா அது இன்னைக்கு வர்ற படங்களுக்குக் கூட பொருத்தமா இருக்கு. ஒரு சில விஷயங்கள் எப்போ சொன்னாலும் எந்த காலத்துக்கும் பொருந்தும் போல... இன்னைக்கும் கூட சில விஷயங்கள் தமிழ் சினிமாவுல இன்னும் மாறாமயே இருக்குன்னு சொல்லும்போது தனியா பொலம்புரதத் தவிர வேறென்ன பண்ண முடியும்? வாங்க.. நம்ம ஊரு சினிமால மாறாத இன்னும் சில விஷயங்களை பார்ப்போம்..

--> ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல “நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார். அவருக்கு ஒரு இளிச்சவா ஃபிகரு சோடியா வேற இருக்கும்.

--> படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

--> வில்லன் குரூப்பு அடி பின்னி எடுப்பானுங்க.. கத்தியக் கொண்டு குத்துவாங்க.. ஏன் அப்பப்ப துப்பாக்கி குண்டு கூட உண்டு. அதை எல்லாத்தையும் தாங்கிகிட்டு சண்டை போட்டு முடிப்பாரு நம்ம ஹீரோ. அப்ப எல்லாம் எதுவும் தெரியாது. ஆனா ஹீரோயின் ஃபிகரு அந்தக் காயத்த கிளீன் பண்ண வந்தா மட்டும் அவனுங்க கொடுக்குற சவுண்டு எஃபக்டு இருக்குதே.. ங்கொய்யால.. உலக நடிப்புடா சாமி..

--> லஃப்ஸ் வந்த ஒடனே ஹீரோ தெருவுல லூசு மாதிரி ஆடிக்கிட்டே வரணும்.. அது ஒரு ரூல். அட.. இது கூட ஓகே.. சோஷியல் மேட்டர்.. பண்ணிக்கலாம்.. ஆனா ரோட்டுல சும்மா போறவய்ங்களும் கரெக்டா அதே ஸ்டெப்பப் போடுற கொடுமைய என்னான்னு சொல்றது.

--> போலிஸ் ட்யூட்டில இருக்கும்போது எதையுமே நம்ம ஹீரோ கண்டுபிடிக்க மாட்டாரு.. ஆனா எவனாவது தீவரவாதி எஸ்ஸாகி அவர சஸ்பெண்டு பண்ணிட்டா போதும்.. எங்க இருந்து தான் அந்த வீரம் வருமோ.. ஒடனே குடு குடுன்னு ஓடிப்போய் வில்லன் குரூப்ப ஒரு கை பார்த்துப்புடுவாரு..

--> படம் மதுரைப்பக்கம் நடக்குறதா இருந்தா தொலஞ்சான் ரசிகன். ஹீரோவுக்கு பதினஞ்சு நாளா சிரைக்காத தாடி.. இத்துப்போன ஒரு கைலி.. வேலை வெட்டி இல்லாத ரவுடித்தனம்.. இதுதான் மதுரை தமிழ்னு அவங்களா நம்பிக்கிட்டி இழுத்து இழுத்துப் பேசுறது... அப்புறம் படத்துல கொடூரமா ஒரு கிளைமாக்ஸ் தவிர்க்கவே முடியாதது..

--> அடுத்ததா பேய்ப்பட ஸ்பெஷல்.. பேய்ப்படமா இருக்க தகுதி என்னன்னா, படத்துல ஆளே வராத ஒரு பாழடஞ்ச பங்களா அவசியம்.. அப்புறம் அங்க ஒரு வேலைக்காரனோ காரியோ வாய் கோணிக்கிட்ட மாதிரி இழுத்து இழுத்து பேசுறதும் அவசியம்.. யாராவது மொத தடவை வீட்டுக்குள்ள நொழஞ்சு சுத்திப் பாக்குற போது, ஒரு பூனையோ எலியோ அலமாரிக்குள்ள இருந்து தவ்வி ஓடி எல்லாரையும் பயமுறுத்த வைக்கும்.

--> இப்போ நான் சொல்றது ரொம்ப முக்கியமான விஷயம்.. அது என்ன மாயமோ இல்ல மந்திரமோ இல்ல அந்த பேய்களுக்கு எல்லாம் எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ.. கரெக்டா சொல்லி வச்ச மாதிரி ஹீரோவும் ஹீரோயினும் மேட்டர் பண்ணும்போதுதான் கொல்ல வரும்.. சீனுக்கு சீனும் ஆச்சு.. பேயையும் காட்டியாச்சு..

--> அப்புறம் பேய்ங்களோட காஸ்ட்யூம்.. எல்லாப் பேய்களுமே வெள்ள பொடவையும் ஒரு கம்பெனி பாட்டோடயுமே சுத்துதுங்க.. ஏதாவது சொட்டுநீலம் வெளம்பரத்துல நடிச்ச பேயோட பரம்பரையா இருக்குமோ?

ஸ்டாப்.. இதுல நெறய விஷயங்கள் குறுந்தகவலா வந்தது. நம்ம சினிமால இந்த மாதிரியான காமெடிகள் ஒரு வத்தாத கடல் மாதிரி. விட்டா வந்துக்கிட்டே இருக்கும். அதானல ஞான் இவிடே முடிக்குன்னு. ஒங்களுக்குத் தெரிஞ்ச வேற மாதிரியான அபத்தங்களயும் பின்னூட்டங்கள்ல சொல்லுங்க மக்களே..:-))

January 15, 2011

ஆடுகளம் - திரைப்பார்வை

ண்ணே.. வெற்றிமாறண்ணே.. கையக் கொடுண்ணே.. பின்னிப்புட்டீல்ல.. கொஞ்ச நாளாவே நம்ம ஊரு படம்னாலே லைட்டா டெர்ரரா இருந்துச்சுண்ணே.. பத்து நாள் தாடியோட ஒரு நாதாரி, எதுக்குனே தெரியாம அவன விரும்புற ஒரு பிகரு, சாதிப் பிரச்சினை, பாடாவதியா ஒரு கொலகாரக் கிளைமாக்ஸ்னு கொலையா கொன்டுக்கிட்டு இருந்தாய்ங்கண்ணே.. டே முட்டாப் பயலுகளா.. அதையும் மீறி இந்த ஊருல சொல்லாத கதைங்க இன்னும் எம்புட்டு இருக்கு பாருங்கடான்னு புதுசா ஒரு களத்தோடையும் கதையோடையும் எறங்கி மிரட்டி இருக்க பாரு.. பட்டாசுண்ணே.

"ஆடுகளம்னு சொன்னவுடனே நெறைய பேரு வெறுமனே சாவச்சண்டை நடக்குற இடம்னு நெனச்சுக்கலாம். ஆனா இந்தப் படத்துல அதையும் மீறி நெறய விஷயம் இருக்கு. இந்த ஒலகம்தான் உண்மையான ஆடுகளம். இங்க நான், நீங்க, நம்மள சுத்தி இருக்குற எல்லாரும் வெளாடுறோம். வாழ்க்கைங்கிற சுவாரசியமான ஆட்டம். இதுல நல்லவன் கெட்டவன்னு யாரும் இல்ல. சுத்தி இருக்குற சூழல்தான் ஒரு மனுஷன் என்னவா இருக்கான்னு தீர்மானிக்குது. “நான்அப்படிங்குற விஷயம் மனுஷன என்னவா மாத்துது.. இதுதான் ஆடுகளம்.


சாவச்சண்டை விடுறதுல பேட்டைக்காரன் குரூப்புக்கும் ரத்தினம் குரூப்புக்கும்தான் முட்டு. சாவலைத் தாண்டி மனுஷனுக்கு மானந்தாண்டா எல்லாம்கிற ரீதியில நடக்கிற சண்டைங்க. இதுல எப்பவுமே ஜெயிக்கிறது பேட்டைக்காரன் குரூப்புதான். அவர் குரூப்போட முக்கியமான கைங்க தொர, கருப்பு மற்றும் அயூப். ரத்தினம் குரூப்போட கடசி கடசியா ஒரு சண்டை விடுறாங்க. அதுல பேட்டைக்காரன் சொல்ல மீறி சண்டை விட்டு ஜெயிச்சுக் காட்டுறான் கருப்பு. இங்கதான் அவனுக்கு அனத்தம் பிடிக்குது. இனி நாம ஒண்ணுமில்லாமப் போயிடுவோமோங்கிற பேட்டைக்காரனோட பயம் எல்லாத்தோட வாழ்க்கையையும் எப்படித் திருப்பிப் போடுதுங்கிறதுதான் கதை.

கருப்பு தனுஷ் - படத்தோட மொத நாயகன். தம்பி.. இந்த குட்டி ஜட்டின்னு எல்லாம் படம் நடிக்குறத விட்டுப்புட்டு ஒழுங்கு மரியாதையா இப்படி தேடி தேடி நடிங்கப்பு. இதுதான் உங்க பேர சொல்லும். பயபுள்ள கண்ணு படம் பூரா இம்சை பண்ணுதுய்யா.. இடைவேளைல வர்ற சாவச்சண்டல கண்ணுல இருக்குற தீவிரம் என்ன, டாப்சி நான் இவனத்தான் லவ் பண்றேன்னு சொன்னவுடனே தெரியுற சந்தோஷம் என்ன, கடசில எல்லாம் செஞ்சது நீதானாண்ணேன்னு வெந்து போறது என்ன.. அடிச்சான் பாருய்யா சிக்ஸரு. ஆத்தா செத்த பொரவு டாப்சிகிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது டக்குன்னு திரும்பிப் பார்த்து ஆத்தா கூப்பிட்ட மாதிரி இருந்துச்சுன்னு சொல்லும்போது.. ப்ச்.. அம்சமான நடிப்பு. இதுவரைக்கும் வந்ததுல காதல்கொண்டேனுக்குப் பொரவு இதுதான் தனுஷோட சூப்பர் படம்னு தைரியமா சொல்லலாம்.

படத்தோட ரெண்டாவது ஹீரோ பேட்டைக்கரனா வர்ற ஈழக்கவிஞர் ஜெயபாலன். இடுங்கின கண்ணும் வெளுத்த மீசையுமா ரொம்ப சுளுவா மத்த எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுறாரு மனுஷன். கடைசி காட்சில குத்துப்பட்டு வர்ற தனுஷைப் பார்த்து சந்தோஷமா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னதும் தெறிச்சு ஓடுறார் பாருங்க.. மெரட்டி இருக்காரு. பொறாம கண்ண மறைக்க காதலிச்சு கூட வந்த பொண்டாட்டியவே தப்பாப் பேசுற சீன்ல எந்திரிச்சுப் போய் ஓங்கி அடிக்கலாமான்னு நமக்கே வெலம் வெலமா வருது. அவருக்குக் கொரல் கொடுத்திருக்குற அண்ணன் ராதாரவிக்கு ஒரு பெசல் நன்றி. அத்தன உணர்ச்சியயும் அழகா கொரல்லயே கொண்டு வந்திருக்குறாரு.



எங்க ஊருப்பக்கம் கை வண்டில ஐஸ் கொண்டுட்டு வருவாய்ங்கண்ணே. அதுல பால் ஐஸ்னு ஒரு ஐட்டம். அம்புட்டு வெள்ள வெளேர்னு இருக்கும். இத்தூணூண்டு குச்சிய கைல புடிச்சுக்கிட்டு.. அது ஒரு அழகிய நிலாக்காலம். ஹி ஹி ஹி.. டாப்சியப் பாக்குறப்போ அந்த பால் ஐஸ் ஞாபகம் தாண்ணே வருது. வட்ட மூஞ்சி, முட்டக்கண்ணு, வழவழான்னு கையும் காலும்.. உன்ன வெள்ளாவில வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா? அது பேசுற இங்கிலிஷு கலந்த தமிழு அம்புட்டு அழகுண்ணே.. புள்ளைய மாதிரியே. படத்துல பெருசா வேலை இல்லைன்னாலும் கண்ணுக்கு குளுர்ச்சியா வந்து போகுது.

தலைல டோப்பா வச்சு சமுத்திரக்கனி கொரல் கொடுக்க சுத்தி திரியுற கிஷோரு, போலிஸ் ரத்தினமா வர்ற ஆளு, அவரோட கையாளுங்க, ஜெயிக்கணும்டான்னு பொலம்பிக்கிட்டே இருகுற அம்மாக்கெழவி, எப்படியாச்சும் தம்மவன் முன்னேறிடுவான்னு நம்புற தனுஷோட அம்மா, தனுஷ் கூடவே சுத்துற மாமங்காரன், சட்டகாரனுக்கு ஒண்ணுன்னா தமிழ்ப்பசங்க வருவீங்களாடான்னு கேள்வி கேக்குற ஜெயப்பிரகாஷ், பேட்டைக்காரன் பொண்டாட்டியா வர்ற மீனாள்னு எல்லா மக்களையும் பார்த்து பார்த்து எடுத்திருக்காய்ங்க. கச்சிதம்.

யாத்தே யாத்தேஜி வி பிரகாஷ் பின்னியிருக்காரு. அந்தப் பாட்டும் கைலியால மூஞ்ச மூடிக்கிட்டு தனுஷ் கெட்ட ஆட்டம் போடுறஒத்தச் சொல்லாலபாட்டும் தியேட்டர்ல டான்சு கிழியுது. அய்யய்யோ பாட்டு அப்படியே அமைதியா மனச அள்ளிக்குது. பேக்கிரவுண்டு ம்யூசிக்கும் நல்லாப் போட்டிருக்காப்ல. படம் புடிச்ச புண்ணியவான் இருட்டுலயே முக்காவாசி படம் எடுத்திருந்தாலும் நம்ம ஊர பிரிச்சு மேஞ்சிருக்காரு. குறிப்பா சாவச்சண்ட சீன் எல்லாமே கில்மாவா எடுத்திருக்காய்ங்க. நெறய கம்ப்யூட்டர் ஜித்து வேல பண்ணி நல்லா இருக்கு. படத்துல ரெண்டே சண்ட. அதுவும் ஊருநாட்டான் சண்ட போட்டா நெஜமோ எப்படி இருக்குமோ அப்படித்தான் நேச்சரா இருக்கு.



கடைசியா வெற்றிமாறண் அண்ணே. ரொம்ப நன்றிண்ணே.. இந்த மாதிரிப் படங்கள் பார்க்கும்போதுதான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ஒரு சூப்பரான கதைசொல்லி. நெறைய பேரு ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர் செக்கண்ட் ஆஃப் ஓகேன்னு சொன்னாய்ங்க. ஆனா உண்மைல ரெண்டாம் பாதிதான் டாப்பு. இம்புட்டு நுணுக்கமா மனுஷ மனசோட உணர்வுகள சொல்லி இருக்கீங்க பாருங்க.. ஹாட்ஸ் ஆப். ஒரு மெட்ராஸ்காரன் இவ்ளோ கஷ்டப்பட்டு மதுரை மண்ணப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அந்த மனுஷங்கள ரத்தமும் சதையுமா காமிச்சு இருக்கீங்க.. மறுபடியும் நன்றி. படம் ஒலகத் திரைப்பட விழாக்களுக்குப் போகுதுல்ல.. கண்டிப்பா ஜெயிப்பீங்க. அட்வான்ஸ் வாழ்த்துகள்.

மதுரை மதி தியேட்டர் நேத்து செமயா கள கட்டி இருந்துச்சு. டேய் மாப்ள.. ரயில்வே காலனிடா.. டபில்யூ ஆபிஸ்டா.. டே இது நம்ம பசங்கடா.. அங்க பாரு திருப்பரங்குன்றம் கோயில்னு தியேட்டர் பூரா ஒரே பசங்க சவுண்டு. இதுல டாப்சியோட அப்பாவா நடிச்சவரும் நேத்து படம் பார்க்க வந்திருந்தாரு. ஒரே ரவுசுதான் போங்க. மொத்தத்துல அம்சமான படத்த அட்டகாசமாக் கொண்டாடிப் பார்த்த சந்தோஷம்.

ஆடுகளம் - அதகளம், அம்சம், அட்டகாசம்

January 13, 2011

மதமாற்றம் - இது சரிதானா?

எழுதலாமா வேண்டாமா என்கிற பெரிய குழப்பத்தோடும் கொஞ்சம் பயத்தோடுமே இந்த இடுகையை எழுதுகிறேன். இதை எழுதுவதன் காரணமாக நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறேன் என்றோ இன்னொரு மதத்தை ஆதரிக்கிறேன் என்றோ முத்திரை குத்தப்பட்டு விடும் அபாயம் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். அதனால் முதலிலேயே சொல்லி விடுகிறேன் - எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மதம் என்கிற பெயரால் மனிதர்கள் அடித்துக் கொண்டு சாகக் காரணமாயிருக்கும் கடவுள் என்கிற வஸ்துவையே காணாமல் போக்கடித்து விட வேண்டும் என நம்புவன் நான். (ஸ்ஸ்ஸ்.. அப்பா... எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கு? ) ரைட்டு.. இப்போ மேட்டருக்கு வருவோம்.

என்னுடைய நல்ல நண்பன் அவன். கிருத்துவ மதத்துக்கு பத்து வருடங்களுக்கு முன்பு மாறியவன். போன வெள்ளிகிழமை சாயங்காலம் எனக்கு போன் செய்திருந்தான்.

"டேய்.. சனிக்கிழமை சாயங்காலம் சர்ச்சுல ஏதோ படம் போடுறாங்களாம். வர்றியா?"

எனக்கு குஷியாகி விட்டது. பைபிள், டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற பழைய படங்கள் ஏதோ போடப்போகிறார்கள் போல.. சர்ச்சில் போடுவதால் கண்டிப்பாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். எனக்கு வரலாறு சார்ந்த பழைய படங்கள் பார்ப்பதில் ஆர்வம் ஜாஸ்தி. சரியென்று ஒப்புக் கொண்டு விட்டேன்.

சனிக்கிழமை மாலை. முதல் ரோவில் எனக்காக சேர் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள். ரொம்பக் கூச்சமாகப் போய் விட்டது.

"என்னடா இது?"

"இல்லடா என் பிரண்டு வர்றான்னு பாதர்கிட்ட சொன்னேன். அதான் இப்படி.."

சரி என்று ஆர்வமாக போய் உட்கார்ந்தாயிற்று. படத்தைப் போட்டார்கள்.

எரிநரகம்

என்னடா இது.. இப்படி ஒரு படம் பத்தி நாம கேள்விப்பட்டதே இல்லையே? எனக்கு லைட்டா அல்லையப் பிடிக்கிற மாதிரி இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம் நடந்த கொடுமையை என்னவென்று சொல்ல?

பூமியில் பாவம் செய்தவர்களுக்கு நரகத்திலே என்ன மாதிரியான தண்டனை தருவார்கள் என்பது பற்றிய படமது. திருடுபவன், மனைவிக்கு துரோகம் செய்பவன், கடவுளை மறுப்பவன் என பல மனிதர்கள்.. அவர்களுக்கு டிசைன் டிசைனாக தண்டனைகள். கண்ணில் ஊசியைக் குத்துகிறார்கள். எண்ணைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள். மூஞ்சியில் இருந்து புழுப்புழுவாக வருகிறது.

அவ்வவ்.. நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்? நண்பனைத் திரும்பிப் பார்த்தால் அவன் எனக்கு ஒண்ணும் தெரியாதுடா என்று பார்வையாலையே கெஞ்சுகிறான்.

முதல் ரோ என்பதால் எழுந்து போகவும் முடியவில்லை. ரொம்ப நேரம் கழித்து அப்படி இப்படி என்று படம் முடிந்தது. விட்டாண்டா பருப்புரசம் என்று கிளம்பலாம் எனப் பார்த்தால் அதற்குப் பிறகு நடந்ததுதான் ஹைலைட்.

பாதர் பொறுமையாக என்னிடம் நடந்து வந்தார். "கார்த்தி.. பார்த்தீங்க இல்லையா? உங்கள மாதிரி ஆளுகளுக்காகத்தான் இந்த படமெல்லாம் போடுறம். பார்த்து நீங்க திருந்தணும். ஆண்டவரை ஏத்துக்கணும். அவரோட மடி உங்களுக்காக எப்பவும் காத்துக்கிட்டு இருக்கு. இப்போ இருக்குற தப்பான இடத்துல இருந்து வெளிய வரணும். அங்கேயே இருந்தா நீங்களும் நரகத்துல கிடந்து சாகணும். புரியுதா?"

உன்னக் கேட்டேனா? நான் உன்னக் கேட்டேனா?

எனக்கு இதுதான் புரிய மாட்டேன் என்கிறது. என்னுடைய கடவுள் நல்லவர் என்று சொல்லுவது வேறு. உன்னுடைய கடவுள் கேவலமானவர் அவரை சார்ந்து இருந்தால் நீ நாசமாகத்தான் போவாய் என்கிற ரீதியில் பேசுவது எப்படி சரியாகும்?

நான் படித்த பள்ளியில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். "இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் எனச் சொல்லுகிறார்களே.. அது எப்படி வந்தது தெரியுமா? ஆரம்பத்தில் கடவுளிடம் நூறு கோடி தேவதைகள் இருந்தார்கள். அவர்களில் லூசிபர் என்கிற சாத்தான் பிரிந்து போனபோது அவனோடு மூன்றில் ஒரு பங்கு தேவதைகளும் பிரிந்து போனார்கள். அவர்கள்தான் இந்த இந்து மத தெய்வங்கள். ஆக இதத்தனையும் சாத்தான்கள்.." பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில் அவரைப் பொறுத்தவரை சாத்தான் கோவில்.

எந்த மதமும் பிற மதத்து மக்களை தூஷிக்க வேண்டும் என எனக்குத் தெரிந்து சொன்னதில்லை. அப்புறமும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள்?

நான் படித்த காருண்யா கல்லூரியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் இதே மாதிரித்தான் இருந்தது. அங்கே இருந்த பசங்கள் எல்லாருமே.. காலையில் எழுந்தவுடன் ஒரு பிரார்த்தனை.. நல்ல சாப்பாடு கிடைக்க ஒரு பிரார்த்தனை.. கிடைத்தது என ஒரு பிரார்த்தனை.. நாள் நன்றாக போக வேண்டும் என்று.. சற்றே அதிகப்படியான முஸ்தீபுகள்.

சீக்கிரம் திருந்து ஆண்டவரிடம் அடைக்கலம் ஆகு இல்லையேல் மவனே நீ சட்னிதான் என்பது போன்ற மிரட்டல் அங்கே வெகு சாதாரணமாக வரும்.

சாயங்காலம் பிரேயர் செல்லுக்குள் போனால் பயந்தடித்துக் கொண்டு ஓடிவர வேண்டும். அத்தனை பேரும் மாரில் அடித்துக் கொண்டு அழுவார்கள். இந்த உலகம் எங்களுக்கு வெறுத்து விட்டது ஆண்டவரே சீக்கிரம் எங்களை திவ்ய தேசத்துக்கு கூட்டிப் போங்கள் என்கிற ரீதியில் இருக்கும்.

மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நாங்கள் ரொம்பத் தீவிரமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகவே இது எனக்குப் படுகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்? நாம் பெரும்பான்மையாக இல்லாத ஒரு சமூகத்தில் தங்களின் இருப்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆழ்மன பயம் காரணமாக இருக்கலாமோ?

பதினெட்டு வருடங்கள் கிருத்துவ பள்ளி மற்றும் கல்லூரிகள் படித்ததால் அவர்களுடைய பழக்க வழக்கங்களை நிறைய அருகே இருந்து கவனிக்கும் வாய்ப்பு இருந்ததாலும் இங்கே கிருத்துவமதத்தை மட்டுமே முன்னிறுத்தி நான் பேசி இருக்கிறேன். என் சந்தேகங்கள்.. இது போன்ற நடைமுறைகள் தேவையில்லை என நான் நினைப்பதைச் சொல்வதற்காகவே.. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல..

(ஆரோக்கியமான விவாதங்களை எதிர்நோக்கி.. தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்..)

January 10, 2011

உக்கார்ந்து யோசிச்சது (10-1-11)

சென்னையில் இருக்கும் பிரபல பதிவரின் வீடு. இரவு மணி பத்து.

“உங்கள நான் எத்தன மணிக்குள்ள வரணும்னு சொல்லியிருந்தேன்?”

“அது இல்லம்மா.. அது வந்து..”

“உங்களுக்கு பெர்மிஷன் எத்தன மணி வரைக்கும் கொடுத்தேன்.. நீங்க எப்போ வர்றீங்க..? எனக்கு விளக்கமெல்லாம் வேணாம். பதில் வேணும்..”

“அதும்மா.. புத்தகத் திருவிழாக்கு போயிட்டு ஒம்போது மணிக்குள்ள வந்திரலாம்னுதான் போனேன். ஆனா பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்தேனா.. கொஞ்சம் லேட் ஆகிப்போச்சு..”

“பெரிய வெங்காய பிரண்ட்ஸ்.. எனக்குத் தெரியாதாக்கும்..? சொல்லத்தான் முடியும். எக்கேடோ கெட்டுப் போங்க.. எனக்கென்ன வந்துச்சு? இன்னைக்கு உங்களால நானும் பட்டினிதான்...”

தங்கமணி கோபித்துக் கொண்டு போக பிரபல பதிவர் தானே சமையலறைக்குள் நுழைந்து தோசை எல்லாம் ஊற்றி கெஞ்சிக் கூத்தாடி அவரைத் தாஜா பண்ணி சமாதானம் பண்ணுகிறார்.

ஆத்தாடி.. கொஞ்சம் லேட்டா வந்ததுக்கே இப்படியா? கல்யாணத்துல இம்புட்டு சட்டச்சிக்கல் இருக்கா? ரொம்பக் கஷ்டம் போலயே.. (யார் அந்த பிரபல பதிவர்னு கடைசில சொல்றேன் மக்களே..)

***************

எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை என்னோடு கூட படித்த தோழி அவள். பள்ளியை விட்டு போன பிறகு சுத்தமாக தொடர்பு விட்டுப் போயிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக வலைப்பதிவுகளின் மூலம் என்னை அடையாளம் கண்டு கொண்டு போனில் அழைத்திருந்தாள். திருமணம் முடிந்து ஆஸ்திரேலியாவில் இருப்பதாகச் சொன்னாள். மதுரை வரும்போது கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள்.

சொன்னதுபோலவே போன வாரம் மதுரை வந்து என்னை அழைத்தாள். சந்திக்கப் போயிருந்தேன். ஆச்சரியத்துடன் கூடிய சந்தோஷ கணங்கள். இரண்டு பிள்ளைகள். ஒருத்தி ஆறாவதும் இன்னொருவள் ஐந்தாவதும் படிக்கிறார்களாம். கிளம்பும் சமயம். தோழியின் பிள்ளைகளுக்கு ஐஸ்கிரீமும் சாக்லெட்டுகளும் வாங்கித் தந்தேன்.

“தேங்க்யூ அங்கிள்..”

என்னது அங்கிளா? அவ்வ்வ்வ்வ்வ்.. பாண்டியா.. நெஜமாவே நமக்கு வயசு ஆகிடுச்சோ? ஙே...

***************

பதிவுலகில் எனக்கு புது வருடம் ரொம்ப நன்றாகவே ஆரம்பித்து இருக்கிறது. தமிழ்மணம் போட்டியில் என்னுடைய இரண்டு இடுகைகள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.



என்னை விட நன்றாக எழுதிய நண்பர்கள் பலர் உண்டு என்பதை நான் அறிவேன். இருந்தும் இந்த இடுகைகள் தேர்வாகி இருக்கிறதென்றால் அது உங்களுடைய அன்பால்தான். வாக்களித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

***************

இளம் தலைமுறை நடிகர்களில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடிப்பது தனுஷ்தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறது “ஆடுகளம்” டிரைலர். கெளப்புடா கெளப்புடா தம்பி எனும் மதுரை பாஷையும், கையை உயர்த்தி கொன்டேபுடுவேன் என சொல்லும்போது சுண்டுவிரல் சற்றே மடங்கி நிற்பதும் என அச்சு அசல் மதுரைக்காரனின் உடல்மொழி. படம் திரைப்பட விழாக்களுக்கும் போவதாக சொல்கிறார்கள். பட்டையைக் கிளப்ப வெற்றிமாறன் குழுவினருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

***************

சமீப காலமாக பார்த்த பாடல்களில் ரொம்பப் பிடித்திருப்பது அய்யனாரின் “ஆத்தாடி ஆத்தாடி” பாடல்தான். நாயகி மீரா நந்தன் ரொம்ப ஹோம்லியாக மனதை அள்ளிக் கொள்கிறார். ரவுடிகள் மீரா நந்தனின் துப்பட்டாவைப் பறித்துக் கொள்ள, அதை பிடுங்கி விட்டு அவர்கள் மீது பாயும் ஆதியும், அவரைத் தடுத்து நிறுத்த முயலும் மீராவும் என விஷுவல்ஸ் எல்லாமே கொள்ளை அழகு.


அதே மாதிரி ஈசனின் “ ஜில்லா விட்டு ஜில்லா” பாட்டும் ஒரு சிறுகதை. ஆண்மையுடன் கூடிய அந்த ஆண்ட்டியின் நடிப்பும், அலட்டிக் கொள்ளாத நடனமும் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறது. இதுவரை மிஷ்கின் மட்டுமே பயன்படுத்தி வந்த நடனமுறைகளை நீட்டாக படம்பிடித்து இருக்கிறார் சசிகுமார். படம் அத்தனை நன்றாக இல்லையென்பது வருத்தமே. அடுத்த படம் நல்லா பண்ணுங்க சாமி..

***************

கலைஞரின் பக்கம் காற்று

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தபோது கலைஞர் என்ற சொல்லைக்கூட உச்சரிக்க பயந்த தமிழ் சினிமா உலகம் இன்று தினமும் அவரை மேடையேற்றி அவரை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர் சூடுகண்ட பூனையல்லவா, சிரித்தபடியே எச்சரிக்கையோடு அனைவரையும் அருகில் அனுமதிக்கிறார். நாளை காற்று எந்த பக்கம் வீசினாலும் சினிமாக்காரர்கள் அந்தப் பக்கம் பறந்து விடுவார்கள் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்.

(பழைய புத்தகக் கடையில் பொறுக்கிய 88 ஆம் வருட பாக்கெட் நாவலில் கண்ணில் பட்டது)

***************

ஒரு கவிதை முயற்சி.. (buzzஇல் கிறுக்கியது)

உனக்கானதொரு
அடையாளத்தை
உருவாக்கு
எனச்சொல்லும்
நண்பனிடம்
எப்படி விளக்குவது
பறவைகள்
தங்கள் தடங்களை
விட்டுச் செல்வதில்லை
என்பதை

***************

ரசித்த எஸ்.எம்.எஸ்..

ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான்.ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை.

இருபது வருடங்களுக்குப் பிறகு..

அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.

“இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது?”

“ஏன் கேக்குற?”

“இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு..” சொல்லியப்டியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

நீதி: சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது..

அப்புறம்.. பொண்டாட்டிக்கிட்ட வாங்கி கட்டிக்கிட்ட அந்த பிரபல பதிவர் தாங்க இந்த எஸ்.எம்.எஸ்ஸையும் அனுப்புனது. அவரு.. அண்ணன் அத்திரி.

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

January 5, 2011

கூடு

தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் அந்த டாக்சி ஸ்டாண்டில் கூடுவதை நானும் எனது இரண்டு நண்பர்களும் வாடிக்கையாகிக் கொண்டிருந்தோம். நாளெல்லாம் வயிற்றுப்பாட்டுக்காக நகரத்தின் சந்து பொந்தெல்லாம் அலைந்து திரிந்து சோர்ந்து வரும் எங்களுக்கு, ஒன்றாய்ப் பேசி மகிழும் அந்தப் பொழுதுகள், கூண்டுப் பறவைகள் வானத்தின் வாசம் தேடும் சிற்சில கணங்கள்.

இந்த ஊரைச் சுத்துன கழுதைக்கு வேறெந்த ஊரும் பிடிக்காது என்று கொண்டாடப்படும் மதுரையின் குடிமக்கள் நாங்கள். மதுரையும் நகரம் எனவோ கிராமம் என்றோ வரையறுக்க முடியாததொரு ஊர். நவீன பாணி கட்டிடங்களும் நூற்றாண்டு பழமையான வீடுகளும் மாறி மாறி காணக் கிடைக்கும். ஊரின் பழமைக்கு சாட்சியாக இன்னும் ரயில்வே ஸ்டேஷனின் எதிர்ப்புறம் இருக்கும் மங்கம்மாள் சத்திரம் பல கதைகள் சொல்லும். ஆனால் தூங்கா நகரம் இன்றைக்கு தூசி நகரம்.

சத்திரத்தின் பக்கவாட்டில் போகும் டவுன் ஹால் ரோட்டின் காலேஜ் ஹவுஸ்க்கு எதிரில் நாங்கள் கூடும் டாக்சி ஸ்டாண்டு இருந்தது. பச்சை நிற வர்ணமடித்த நான்கைந்து இரும்புக் கம்பங்கள் தாங்கிப் பிடிக்கும் ஒரு ஆஸ்பெடாஸ் கூரை. ஓரமாக குவிந்து கிடக்கும் நைந்து போன பழைய ட்யூபுகள். கூரையின் கம்பிகளில் தன்னுடைய கூட்டை அமைத்துக் கொண்டிருந்த குருவியின் குவிக் குவிக் சத்தம் மட்டும் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஸ்டாண்டின் உள்ளே சீருடையணிந்த பள்ளிப் பிள்ளைகளென வரிசையாக அணிவகுத்து நிற்கும் வெள்ளை நிற அம்பாசிடர்கள். விதவிதமான வசதிகளோடு எத்தனை கார்கள் வந்தாலும் நெடுந்தூரப் பயணம் என்றாலே மக்களுக்கு அது அம்பாசிடர்தான். அதிகபட்சமாக ஒரே நேரத்தில் ஐந்து கார்களை நிப்பாட்டுவதற்கான இடம் அந்த ஸ்டாண்டில் இருந்தது.

எப்போது பார்த்தாலும் மூன்று அல்லது நான்கு வண்டிகள் ஸ்டாண்டில் நின்று கொண்டே இருக்கும். வண்டியின் டிரைவர்களுக்கும் எங்களுக்கும் இடையே நல்லதொரு நேசபாவம் இருந்தது. எப்போது பார்க்கும்போதும் அவர்கள் முகத்தில் எங்களுக்கான சிரிப்பை ஒளித்து வைத்திருந்தார்கள். அந்த டிரைவர்களில் சிலர் தங்கள் மனைவிமாரை விடவும் அதிகமாக அந்தக் கார்களை காதலிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். தாம் குளிக்கிறோமோ இல்லையோ கார்களை அழகாகக் கழுவி துடைத்து பராமரிக்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது.

எங்களுக்கு ரொம்பவும் நெருக்கமான தன்ராஜ் அண்ணனுக்கு வீடென்று ஒன்று உண்டாவெனவே யாருக்கும் தெரியாது. அவருடைய கார்தான் அவருக்கு வீடு. சவாரி இல்லாத நாட்களில் ஸ்டாண்டு படு பயங்கரமாக களை கட்டும். சீட்டாட்டம், கோலி என விளையாட்டுகளில் டிரைவர்களுக்கு பொழுது போகும். தோற்பவர்கள் மற்றவர்களுக்கான சாப்பாட்டு செலவுகளையும் சரக்குக்கான தேவையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் விதிமுறை. இது மாதிரியான தினங்களில் அதிகம தோற்பது தன்ராஜ் அண்ணனாகத் தான் இருக்கும். எல்லாருக்கும் அவர் சரக்கு வாங்கும்போது அவர்களோடு நாங்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் இருந்தது.

ஸ்டாண்டின் டிரைவர்களுக்கு எல்லாம் கமலாதான் அன்னலட்சுமி. அவளுடைய இட்லிக்கடை ஸ்டாண்டின் இடப்புறமாக இருந்தது. கடை என்று சொல்லி விட்டதாலேயே பெரிதாக எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஒரு தார்ப்பாலின் சீட்டு, அதன் கீழே இரண்டு பேர் கல்லில் குத்த வைத்து உட்காருவதற்கான வசதி, இட்டிலிக்குண்டா, நான்கைந்து தட்டுகள், ஒரு இத்துப்போன வாளி (கை கழுவ) மற்றும் ஒரு பிளாஸ்டிக் குடம் (குடிக்க). சின்னக் கடையாக இருந்தாலும் அந்தப் பகுதியில் கூலி வேலை பார்க்கும் எல்லோருக்கும் அதுதான் ஸ்டார் ஹோட்டல்.

கமலாவுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி என்பதை விசாரித்து தெரிந்து கொண்டிருந்தோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காதலென நம்பி யார் கூடவோ மதுரைக்கு ஓடி வந்தவள். கூட வந்தவன் சகலத்தையும் கறந்து விட்டு கழண்டு கொள்ள நடுத்தெருவில் நின்றிருக்கிறாள். வயிற்றுப்பாட்டுக்கு உதவிய சிலரால் இந்தக்கடை வைத்து இன்றைக்கு சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை.

அவள் கடையின் மீதங்களைத் திண்டு உயிர் வாழ கற்றுக் கொண்டிருந்தது ஒரு கறுப்பு நாய். தெனக்கரத் தின்று விட்டு ஸ்டாண்டிலேயே படுத்துக் கிடக்கும். தெரியாத ஆட்கள் கடையை நெருங்கினாலோ ஸ்டாண்டுக்கு உள்ளே வந்தாலோ அது போடும் கூச்சலில் ஊரே அதிரும். கமலா ஒருத்தியின் குரலுக்குத்தான் அடங்கும். இரவு நேரங்களில் அதுதான் கடைக்கு காவல்.

நாலு வருஷம் முன்பு வரை கடைதான் அவளுடைய வீடாகவும் இருந்து வந்தது. இப்போது காக்காத்தோப்பில் வாடகைக்கு வீடு. (எத்தனை நாள் தான் தெருவிலேயே கிடக்குறது?) அங்கேயே சில பெண்களை வைத்து தொழில் செய்து வருவதாகவும் கேள்வி. ஆனால் அதை அவளிடம் கேட்கும் தைரியம் எங்களில் யாருக்கும் இல்லை.

டாக்சி டிரைவர்கள் தவிர்த்து கமலாவின் மிக முக்கியமான கஸ்டமர் முருகேசன். டாக்சி
ஸ்டாண்டின் எதிரே இருந்த புதிய உலகம் புத்தகக்கடையின் உரிமையாளர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். பிள்ளைகள் எல்லாரும் வெளிநாட்டில் போய் தங்கிவிட இவர் பொழுது போகாமல் இந்த புத்தகக்கடையை நடத்தி வந்தார். ரோட்டில் உள்தள்ளி இருக்கும் அந்தக் கடைக்கு புத்தகம் வாங்க ஆட்கள் வந்து யாரும் பார்த்து இல்லை. ஆனால் அதைப் பற்றி முருகேசன் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது.

அவரிடம் இல்லாத புத்தகங்களாக விசாரித்துக் கொண்டு சில தோழர்கள் அவரது கடைக்கு வருவார்கள். அவர்களே அவருடைய மிகப்பெரிய பேச்சுத்துணையாக இருந்தார்கள். டாக்சி ஸ்டாண்டின் டிரைவர்களுக்கும் அவர்களை நன்றாகத் தெரிந்திருந்தது. பகல் பொழுதை எல்லாம் பேசிக் கழிக்க அவர்களுக்கு அந்த ஸ்டாண்டும் கமலாவின் கடையும் மிக உதவியாக இருந்தன.

ஆரம்பம் முதலே எங்களுக்கும் முருகேசனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். பொதுவில் அவர் யாரையும் நம்பாதவராகவே இருந்தார். இரவில் கடையைப் பூட்டுவதில் அவருக்கு வித்தியாசமானதொரு பழக்கம் இருந்தார். முதலில் ஷட்டரை இறக்கிப் பூட்டுவார். சிறிது தூரம் செல்வார். பிறகு மீண்டும் வந்து பூட்டை ஒரு முறை பரிசோதித்துப் பார்ப்பார். திருப்தி இல்லாதவராக கடையைத் திறந்து ஒரு முறை மீண்டும் எல்லாவற்றையும் சரி பார்ப்பார். கடைசியாக கடையை பூட்டிக் கொண்டு புறப்படுவார். இதைத் தன் தினசரி கடமையாகவே அவர் கொண்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பிருந்து அவனை நாங்கள் ஸ்டாண்டில் பார்த்து வருகிறோம். கிழிந்த உடைகள். எப்போதும் வானத்தையே வெறிக்கும் பார்வை. வாயைத் திறந்து ஏதும் பேசவோ கேட்கவோ மாட்டான். எப்போதாவது பசித்தால் அருகில் இருக்கும் கடைகளில் சென்று கையை நீட்டுவதொடு சரி. யாரவன் எங்கிருந்து வந்தான் என்பதை யாரும் அறிந்திருக்க வில்லை. ஆனால் அவனும் ஸ்டாண்டைத் தன் வசிப்பிடமாகிக் கொண்டான்.

இரவு நேரத்தில் நடைபாதைக்கும் முருகேசனின் கடைக்கும் இருக்கும் இடைவெளியில் அவன் படுத்துக் கொள்ளுவதைப் பார்த்திருக்கிறோம். சிறிது நேரத்திலேயே அனிச்சை செயலாக அவனுடைய கைகள் கால்சராய்க்குள் போய் விடும். ஆரம்பத்தில் டிரைவர்கள் அவனைக் கடுமையாகத் திட்டுவதோடு இழுத்துப் போட்டு அடித்தது கூட உண்டு. ஆனால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக இருந்தான். காலப்போக்கில் அதுதான் அவனுடைய இயல்பென ஏற்றுக் கொள்ள டிரைவர்களும் பழகி விட்டார்கள்.

நாங்கள் கதை பேசி பிரியும்போது மணி பத்தைத் தாண்டி விடும். அதன் பிறகான பின்னிரவில் டாக்சி ஸ்டாண்டின் நிறமே மாறி விடும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். கார்களின் பின்புற இருளில் அசைவுகளும் சிரிப்பொலியும் பெருகும். பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டெஷனிலும் தங்களுக்கான கிராக்கிகளைக் கண்டுகொள்ளும் ரூட்டுகளும் அஜக்குகளும் செலவின்றி ஒதுங்குவதற்கான இடமாக அந்த ஸ்டாண்டையே பயன்படுத்தி வந்தார்கள். சிறுவர்கள் பொட்டலங்களோடு சுற்றுவதையும் வேணுமா அண்ணே என கிண்டலாக எங்களைக் கேட்பதும் வெகு இயல்பான விஷயமாக இருந்தது.

எதைத் தேடித் திரிகிறோம் எனத் தெரியாமலே அலைந்து திரியும் நாங்கள், டிரைவர்கள், கமலா உட்பட நாங்கள் அறிந்த மனிதர்கள் என எல்லோருமே ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்களாகவே இருந்தோம். ஆனால் எங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சின்னதொரு இழையாக அந்த டாக்சி ஸ்டாண்டு இருந்து வந்தது.

அந்த
டாக்சி ஸ்டாண்டைத்தான் சாலையை அகலமாக்குவதாக சொல்லி இரண்டு நாட்களுக்கு முன்பாக இடித்து விட்டார்கள்.

ஏதும் பேச இயலாதவர்களாக சாலையின் முனையில் நின்று கொண்டிருந்தோம். கண்களில் யாருமில்லா வெறுமை மட்டுமே நிறைந்து கிடந்தது. எப்போதும் அங்கே நிற்கும் கார்கள் இன்று இல்லை. காற்றில் கரைந்தவர்களாக அந்த டிரைவர்கள் காணாமல் போயிருந்தார்கள். கமலாவின் கடை இருந்த இடத்தில் தார்ப்பாலின் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கருப்பு நாய் மட்டும் அங்கே சுற்றி சுற்றி வந்தது. புத்தகக்கடை மூடி கிடக்க அதன் வாசலில் இருந்த கிறுக்கனையும் காணவில்லை.

குருவியின் கூட்டிலிருந்து பிய்த்து எறியப்பட்ட முற்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு முறை காரை கிளப்பும்போதும் வெளிவரும் புகையினால் உண்டான கறுப்புக் கறை மட்டுமே ஸ்டாண்டின் பின்புற சுவரில் பாக்கி இருந்தது. இன்னும் சில நாட்களில் அதுவும் இல்லாமல் போய்விடக் கூடும்.

January 3, 2011

புத்தாண்டு - நினைவுக்குறிப்புகள்

இரவு பத்து மணிக்கு கோரிப்பாளையத்தில் நண்பர்களின் சங்கமம். மதுவின் ருசி தெரியாதவர்களுக்கு நட்பே போதை. குமார் மெஸ்ஸில் புரோட்டா குருமாவும் சிக்கன் கைமாவும். மாப்ள ஏதாவது படத்துக்குப் போகலாமா? அந்தக் கருமத்துக்குத்தான் எப்பவும் போறோமே, வேற ஏதாவது சொல்லுங்கடா. தல்லாகுளம் கிரௌண்டு, தமுக்கம் ரெண்டுலயும் புரோக்ராம். என்ன பண்ண? தல்லாகுளம் காசு தமுக்கம் ப்ரீ. அப்ப வண்டிய தமுக்கத்துக்கு விடுங்கடா.
எந்த வருஷமும் ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருக்கும் அலைபேசியின் இந்த வருஷ அதிசய மவுனம். மொத நாளும் மெசேஜ் அனுப்பக் காசாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வராத கால்கள். நினைத்தே பார்க்காத மக்களிடம் இருந்து வந்த வாழ்த்துகள். வலி. நானும் யாரையும் கூப்பிடவில்லை. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.
தமுக்கத்தில் தங்கமயிலின் கலைவிழா கொண்டாட்டம். பிள்ளை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள். கொண்டாட்டம் என்பதையும் மீறி இப்போது சம்பிரதாயம். மிகச்சரியாக பனிரெண்டு மணிக்கு இதுவரைக்கும் யாராலும் அடித்துக் கொள்ள முடியாத சகலகலா வல்லவனின் “ஹாய் எவ்ரிபடி”யோடு பிறந்தது புத்தாண்டு. கிளம்பி வெளியே வந்தால் சாலையெங்கும் வாகனங்களில் அலைந்து திரியும் ஹேப்பி நியூ இயர்கள்.
வண்ணங்களில் மிதக்கும் வானம். ஹோட்டல்களின் வாணவேடிக்கைகள். சோடியம் மஞ்சளில் குளித்துக் கொண்டிருந்த ஆற்றுப்பாலத்தில் கேக் வெட்டி வருவோர் போவோர் மீதெல்லாம் இழுவி விளையாடும் இளைஞர் கூட்டம். திட்டிக் கொண்டெ கடந்து போகிறார் பெரியவர் ஒருவர். பாலத்தின் மீதிருந்து எட்டிப் பார்த்தால் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது வைகை.
நடப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதாய் பழ மூடைகளை இறக்கிக் கொண்டிருக்கும் யானைக்கல்லின் வியாபாரிகள். பாராவில் போலிஸ்காரர்கள். கோவிலில் சாமி கும்பிட்டு விபூதி பூசி புத்தாண்டை வரவேற்கும் பெண் போலிசார். வண்டியில் நான்கு பேர் போனாலும் கண்டு கொள்ளாத சுதந்திரம்.

பாண்டி பஜாரின் வாசலில் சீரியல் லைட்டுகளின் இதயத்தில் எழுதப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தங்கரீகல் முன்பாக வரிசையாக ராக்கெட்டுகள் விடும் ஆட்டோ டிரைவர்கள். பெரியார் நிலைய நுழைவில் வெளிநாட்டுக்காரர்களோடு ஆட்டம் பாட்டம் வீடியோவும் உண்டு. உங்கள் தேவனாகிய இயேசுவின் வருகை தூரத்தில் இல்லை பாவம் செய்தவர்களே சீக்கிரம் என்னிடத்திலே வாருங்கள் அலறிக் கொண்டிருக்கும் தேவாலய ஸ்பீக்கர்கள்.
பாலத்தின் மீது போதையில் ஆடும் நாளைய பாரதம். தள்ளாடியபடியே சென்று போலிசிடமே கைகொடுத்து வாழ்த்து சொல்லும் இளமைத் திமிர். வண்டியில் போன பெண் ஒருவளை மறித்து கை கொடுக்க வெருண்டு வேறு பக்கம் திருப்பிக் கொண்டு போகிறாள். பாலத்தின் மறுபக்கம் எதுவுமே தெரியாதது போல அமைதியில் எல்லிஸ் நகர்.
எப்போதும் புரிந்து கொள்ள முடியாத மாயத்தன்மையோடு, எல்லாம் கலந்ததாக, வசீகரமாக.. மதுரை.