April 28, 2011

கவிதைகளின் கவிதை


அந்தி நேர மஞ்சள் வானம்
தனித்திருக்கும் நிழல்
செடியில் பூத்த ஒற்றை ரோஜா
தொலைந்து போன காடு
குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு
சாம்பல் நிறமான இரவு
பவுர்ணமி நிலவில் கடலலைகள்
நியாயம் தவறிய தண்டனைகள்
கூண்டுக்குள் சிறகடிக்கும் காதல் பறவைகள்
கடவுளும் சைத்தானும்
உனக்கான என் பிரியம்
ஆசையைத் தொலைத்தவனா புத்தன்
நீ விட்டுச் சென்ற கைக்குட்டை
அர்த்தஜாம மோகினி
அறையில் மீதமிருக்கும் உன் வாசம்
இரண்டு தலைகளையுடைய பூனை
உதட்டோரச் சிரிப்பு
படமெடுக்கும் சர்ப்பம்
வில்லென உயரும் புருவங்கள்
அர்ஜுனனின் காண்டீபம்
முதல் முத்தம்
மரணத்தை முழுதாய் உணர்ந்தவன்
அபாய வளைவுகள்
எனக்கான ஒரு நதி
தியேட்டர் பொழுதுகள்
சொல்லவொண்ணா சூன்யம்
மறக்கவியலா அந்த இரவு
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை
கருணையின் கண்கள்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
நான்கும் ஒன்றான கால்கள்
ததும்பும் மதுக்கோப்பைகள்
நான் உன்னை மறப்பதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை
கொலையும் தற்கொலையும் மட்டுமே
நினைவில் கொண்ட
கனவுகளில் தொலைந்து போனவனின்
கவிதை இதுவென கொள்

April 22, 2011

கோ - திரைப்பார்வை

கே.வி.ஆனந்த் - சுபா கூட்டணியில் வெளியாகி இருக்கும் மூன்றாவது படம் "கோ". கனா கண்டேனில் கந்து வட்டியையும் அயனில் கடத்தல் தொழிலையும் களமாக எடுத்துக் கொண்ட ஆனந்த் இந்தப் படத்தில் வெகு தைரியமாக தற்கால அரசியலைப் பேசி இருக்கிறார். இத்தனை தெளிவான, தீர்க்கமான அரசியல் படம் எதுவும் சமீபத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தைத் தேர்தலுக்குப் பின் வெளியிட்டிருப்பதில் கூட சின்னதொரு அரசியல் இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.



தின அஞ்சல் பத்திரிக்கையின் புகைப்பட நிபுணர் ஜீவா. தைரியசாலி. ஒரு பேங்க் கொள்ளையின் போது திறமையாக செயல்பட்டு நக்சல் கும்பலைக் கைது செய்ய உதவுகிறார். அதே பத்திரிக்கையில் வேலை பார்க்கும் நிருபர்கள் பியாவும் கார்த்திகாவும். பியாவுக்கு ஜீவாவின் மேல் காதல். ஜீவாவுக்கு கார்த்திகா மீது காதல். தேர்தல் நேரத்தில் ஜோஸியர் சொன்னார் என்று எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச ராவ் பதிமூன்று வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதை ஜீவா அம்பலப்படுத்துகிறார். அதே போல ஆளும் கட்சியின் முதல்வர் நிருபர் ஒருவரை செருப்பால் அடிப்பதையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சிறகுகள் என்கிற அமைப்பின் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென தேர்தல் களத்தில் குதிக்கிறார் அஜ்மல். நிறைய நல்ல காரியங்கள் மூலம் மக்கள் மனதில் சிறகுகள் இடம்பிடிக்கிறது. இளைஞர்களால் மட்டுமே மாற்றம் கொண்டு வரமுடியும் என்கிற கோஷத்தோடு அஜ்மலின் கட்சி செயல்படத் தொடங்க அவர்களின் பிரச்சார மேடையில் குண்டு வெடிக்கிறது. சிறகுகளைச் சேர்ந்த முப்பது பேரோடு பியாவும் அந்த குண்டுவெடிப்பில் சாகிறார். ஆனால் பியாவின் மரணம் கொலை என்பதை ஜீவா கண்டுபிடிக்கிறார். தேர்தலில் அனுதாப அலை பெருக அஜ்மல் வெற்றி பெறுகிறார். குண்டு வைத்ததும் பியாவைக் கொன்றதும் யார், அஜ்மலால் அரசியலில் மாற்றம் கொண்டு வர முடிந்ததா என்பதேகோ”.

ராம், கற்றது தமிழுக்குப் பிறகு என்னால் இந்தப்படத்தில்தான் ஜீவாவை முழுமையாக ரசிக்க முடிந்தது. ரொம்ப இயல்பாக நடித்து இருக்கிறார். அவருக்கு உடையலங்காரம் செய்திருப்பவருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. முதலில் இந்த வேடத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. நல்ல வேளை நாம் பிழைத்துக் கொண்டோம். கனா கண்டேனில் பிருத்விராஜ் என்றால் இந்தப்படத்தில் அஜ்மல், படத்தின் நிஜ நாயகன் எனச் சொல்லுமளவுக்கு கிளாஸ். மக்களுக்காக வெகு அமைதியாக போராடும்போதும் விதைக்கப்படுகிறோம் எனப் பொங்கி எழும்போதும் கடைசியில் கண்களில் குரூரம் மின்ன சண்டை போடும்போதும் மிரட்டி இருக்கிறார்.



கண்ணுக்குக் குளிர்ச்சியாய் கார்த்திகா. நிறைய இடங்களில் ராதா. அந்தக் கண்ணும் மேலேறும் புருவங்களும்.. ஹய்யோ.. சான்ஸே இல்லை. அம்மணிக்கு நடிக்கவும் வருகிறது என்பது பிளஸ் என்றால் அவருடைய உயரம்தான் மைனஸ். ஜீவாவின் லூசுத் தோழியாக பியா. முதல் பாதி ஜாலியாகப் போவதற்கும் கதையின் திருப்புமுனைக்கும் பயன்பட்டு இருக்கிறார். முதல்வராக பிரகாஷ்ராஜ் வந்து போகிறார் என்றால் கோட்டா சீனிவாச ராவ் எதிர்க்கட்சி தலைவராக ராவடி பண்ணுகிறார். நக்சல் தலைவனாக போஸ் வெங்கட்டுக்கு முக்கியமான ரோல்.

நிறைய இடங்களில் வசனத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் சுபா. முதல் பாதி முழுக்க ஜாலி கோலி. இரண்டாம் பாதியின் அரசியல் வசனங்களில் தீ கிளப்புகிறார்கள் (சுரேஷ் ஒன்றிரண்டு காட்சிகளில் தலையைக் காண்பித்து இருக்கிறார்). பத்திரிக்கை ஆபிசுக்கு போன் வருகிறது ஏன்யா கடத்தல்காரனே கஸ்டம்ஸ்ல சேர்ற மாதிரிப் படம் எடுப்ப உனக்கு அஞ்சு ஸ்டார் கேக்குதா அரை ஸ்டார் கூட கிடையாது என தன்னைத்தானே சத்தாய்த்துக் கொள்கிறார் ஆனந்த். அத்தோடு கூடவே மச்சான்ஸ், கெமிஸ்ட்ரி என்று சோனாவைப் பேச வைத்து நமீதாவுக்கு ஒரு பஞ்ச். அங்கங்கே கமர்ஷியல் என்று இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.



ஹாரிசின் இசையில் பாடல்கள் எல்லாமே கொண்டாட்டம். என்னமோ ஏதோதான் டாப். மெல்லிசைப் பாடலுக்கே தியேட்டருக்குள் மக்கள் நடனம் எல்லாம் ஆடி ஒரே ரகளை. அமளி துமளி பாடல் படம் பிடித்திருக்கும் விதமும் லொக்கேஷன்களும் செம. படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் முன்பனியே பாடலில் கலை இயக்குனர் கலக்கி இருக்கிறார். பின்னணி இசையில் நிறைய இடங்களில்வி வில் ராக் யூவை உருவி யூஸ் பண்ணி இருக்கிறார் ஹாரிஸ். முதல் பாதியின் நீளத்தை கவனிப்பதில் மட்டும் ஆண்டனி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சுபாவோடு சேர்ந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஆனந்த். பார்வையாளனை முட்டாளாக்கும் அட்டகாசமான திரைக்கதை. முதல் பாதியில் நடந்த எல்லாமே வேறு என்பதை இரண்டாம் பாதியில் புரிய வைக்கும் இடங்களில் அட போட வைக்கிறார். என்ன இறுதி காட்சிகளில் கொஞ்சம் லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் இருத்துங்கள். இருந்தாலும் எல்லாப் படங்களிலும் ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கும் ஆனந்துக்கு பாராட்டுகள்.

கோலாகலம்.

அப்புறம் படவிமர்சனம் எழுதினா தியேட்டர் டிஸ்கி எல்லாம் போடணுமாம்ல. அதுக்காக..

டிஸ்கி : தியேட்டருக்கு நிறைய ஆண்களும் கொஞ்சம் பெண்களும் வந்து இருந்தார்கள். ஆண்கள் வந்த பைக்குக்கு எல்லாம் ஐந்து ரூபாய் டோக்கன் போட்டார்கள்.

டிஸ்கி : மக்கள் ஜோக்குகளுக்கு சிரித்தார்கள். கை தட்டினார்கள்.

டிஸ்கி : இடைவேளையில் ரெண்டு டிரைய்லரும் நாலு விளம்பரமும் போட்டார்கள். முறுக்கு பாப்கார்ன் கூல் டிரிங்க்ஸ் விற்றார்கள்.

டிஸ்கி : படம் முடிஞ்சு எல்லாரும் எழுந்து வெளியே போனார்கள்.

அம்புட்டுத்தான். நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்..:-)))

April 19, 2011

அழகர் திருவிழாவும் சில அக்கப்போர்களும்


டேய் என்னடா இது சாமியையும் காணோம் ஒரு கூட்டத்தையும் காணோம்

ஏண்டா லூசுங்களா சாமி காலைல ஆறரை மணிக்கு ஆத்துல இறங்குவாராமாம் இவங்க மத்தியானம் பனிரெண்டு மணிக்கு வந்து யாரையும் காணோம்னு தேடுவாய்ங்களாம் போங்கடா போக்கத்தவய்ங்களா போயி மண்டகப்படிகள்ல தேடி பாருங்கடா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது வேட்டைக்காரன் வர்றதப் பார்த்து

என்னடா நம்ம வாராரு வாராரு அழகர் வாராரு பாட்டயே காணோம்

உங்களுக்கு மட்டும் எல்லாத்துலையும் புதுசா புதுசா கேக்குதல்ல அழகருக்கு மட்டும் அதே பாட்ட போட்டிக்கிட்டு இருந்தா முடியுமா அதனாலத்தான்யா மாற்றம் ஒன்றே மாறாததுடா தம்பி

வெளங்கிரும்


ஆத்துல தண்ணி ஜாஸ்தி விட்டுருக்காய்ங்க பரவாயில்ல

இந்த வருஷம் முடி இறக்கம் நிறைய போலயேடா


எல்லாம் வெய்யக்காலம் மாப்ள டெக்னிக்கலா மொட்டயப் போட்டுட்டு சாமி பேரச் சொல்லி எஸ்கேப் ஆயிடுறாய்ங்க


இதுதான் உங்க தொழிலேவாண்ணே

ஆமா தம்பி நாங்க எல்லாம் ஒரே ஊருக்காரவுக ஆட்டுத்தோல பதப்படுத்தி பை செஞ்சு திருவிழா காலத்துல கொண்டு வந்து விப்போம் மத்த சமயங்கள்ல வெவசாயம் பார்ப்போம் இதுமாதிரி முப்பது குடும்பம் இருக்கோம் முந்தி நூறு குடும்பத்துக்கிட்ட இருந்தோம் இப்ப எங்க இந்த தலைமுறைப் பிள்ளைக எல்லாம் படிச்சுப்புட்டு வேற வேலைக்குப் போயிருச்சுக இது நிரந்தரமான வருமானம் கிடையாதுல


இந்த வருஷம் நல்ல வியாபாராமாண்ணே


இல்ல தம்பி இப்போ புதுசா ஏதோ பம்ப்பு ஒண்ணு செஞ்சு விக்கிறாக வர்ற மனுஷன குளுமையாக்க தண்ணி பீய்ச்சணும்னா ஆட்டுத்தோல் பைதான் வேணும்கிறது ஐதீகம் அதெல்லாம் யாரு மதிக்கிறா எல்லாம் கலிகாலம் ப்ச் விடுங்க தம்பி நன்றி வாறோம்


டேய் அந்த ப்ளூ சேல வர்றாள்ல அவ மேல தண்ணிப் பீச்சுடா

அதேதாண்டா எலேய் அவ வெக்கப்பட்டு சிரிக்கிறாடா


விடாதடா கரெக்டா அவ ***** மேல அடிடா மாப்ள


அய்யய்யோ பின்னாடி வர்றவன் அவங்கப்பன் போல இடத்த விட்டு ஜெண்ட் ஆகுங்கடா


சாமி ராமராயன் மண்டகப்படில இருக்காராம்

இந்த வருஷமும் பச்சப்பட்டுதானா


ஆமாங்க

ஹே ஹே ஹே எங்க வருஷா வருஷம் அவரும் பச்ச உடுத்தித்தான் எறங்குறாரு ஆனா எதும் பசுமையா நடக்க மாட்டேங்குதே பிரச்சினைதான் ஜாஸ்தி ஆகுது ஹ்ம்ம்ம்


கொஞ்சம் ***** மூடிக்கிட்டு வர்றியா கூட்டத்துல அடி வாங்கிக் கொடுத்துடாதடா


மயிறானுங்க சாமி பாக்கவா வர்றானுங்க புள்ளைகள நசுக்குறதுக்குன்னே வர்றாங்க இவங்க பண்ற அட்டூழியத்துலதான் இந்த வருஷம் வந்த மழையும் நிண்டு போச்சு

இந்தக் கூட்டத்துல பொம்பளப் பிள்ளைகளையும் கொழந்தைகளையும் கூட்டிட்டு வர்றது நம்ம தப்பு
ங்க

தம்பி அப்படிச் சொல்லாதீய அப்புறம் எதுக்கு இம்புட்டுப் போலீசு இதே ஊருக்குள்ள இதவிட சாஸ்தி மக்களக் கூட கட்டுப்பாடோட வச்சு திருவிழா நடத்தி இருக்காக தெரியுமா
எல்லாம் நம்ம கைலதான் இருக்கு

யாத்தாடி எம்புட்டுக் கூட்டம் செத்து சுண்ணாம்பு ஆயிட்டேண்டா மாப்ள

எப்படியோ அப்புடி இப்புடின்னு சாமி பார்த்தாச்சுல போவோமாடா

எந்த நம்பிக்கைலடா இத்தன லட்சம் மக்கள் சாமியப் பாக்க எந்தந்த ஊர்ல இருந்தோ எல்லாம் வர்றாங்க


நீ சொன்னைல அதாண்டா.. நம்பிக்கை.. இந்த சாமி நமக்கு நல்லது செய்யுங்கிற நம்பிக்கை.. கோவிந்தா கோவிந்தா..

April 14, 2011

வாத்தியார் வேலைன்னா அம்புட்டு இளப்பமா?

போன வாரம் வேறொரு துறையைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவனொருவன் என்னைப்பார்க்க வந்திருந்தான்.

"உங்ககிட்ட ஒரு விஷயம் பத்தி கைடன்ஸ் வேணும் சார்.."

"என்னடா.. சொல்லு.."

"நான் அடுத்ததா எம்.இ படிச்சுட்டு வாத்தியார் வேலைக்கு வந்திடலாம்னு இருக்கேன் சார்.."

எனக்கு ஆச்சரியம். காரணம் அவனுக்கு நல்லதொரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்து இருந்தது. அதை விடுத்து ஆசிரியர் வேலைக்கு வர ஆசைப்படுகிறான் என்றால்..

"ரொம்ப சந்தோஷம்டா. நல்ல விஷயம்தான். ஆனா ஏன்? டீச்சிங் உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா என்ன?"

"அதுதான் சார் உங்ககிட்ட கேக்க வந்தேன். இப்போ நான் டீச்சிங் வந்தா எவ்ளோ சம்பளம் கிடைக்கும்?"

"நல்ல காலேஜ்னா ஆரம்பத்துல 25 ,000 வரைக்கும் தருவாங்கடா.."

"போதும் சார். எந்த பிரச்சினையும் இல்லாம நிம்மதியா பாடம் நடத்துனோம்னு இருக்கலாம். சாப்ட்வேர் போனாலும் இதே சம்பளம் ஆனா டார்கெட் அது இதுன்னு டென்ஷன் ஆகணும்.. அத்தோட இதுல வேலையும் கம்மி. ஒரு நாளைக்கு ரெண்டு ஹவர் எடுத்தா போதாது?"

என்னுடைய உற்சாகம் சுத்தமாக வடிந்து போனது.

"இதுக்காகத்தான் சொன்னியாடா? உனக்குன்னு ஆசை எல்லாம் இல்லையா?"

"அடப்போங்க சார்.. அப்படி எல்லாம் ஒரு டாஷும் கிடையாது. நல்ல சம்பளம், அலட்டிக்காத வேலை, ஜாலியான லைப்னா போதும்னு தான் வர்றேன்.."

வந்த கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு, கண்டிப்பாக ஆசிரியர் வேலை என்பது கடனுக்கு செய்வது கிடையாது, அதற்கென நிறைய பொறுப்புகள் உண்டு, வெறுமனே உடல் நோகாமல் வேலை செய்ய வேண்டுமென்பதற்காக பார்க்கும் வேலை இது கிடையாது என்றெல்லாம் அவனுக்கு நிறைய புத்தி சொல்லி அனுப்பி வைத்தேன். அதை அவன் எடுத்துக் கொண்டானா இல்லையா என்பது தெரியவில்லை.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக இந்தத் துறையில் வேலை பார்த்து வருகிறேன். இதுவரை என்னோடு வேலை பார்த்த நான் பழகிய நூறு நபர்களில் எத்தனை பேர் ஆசிரியர் வேலைக்கு விரும்பி வந்தவர்கள் எனக் கேட்டால்.. மிகுந்த துயரத்தோடு இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது.. பத்து பேர் கூடத் தேற மாட்டார்கள். வேறு ஏதும் வேலை கிடைக்காத சூழலிலும் இந்த வேளையில் இருக்கும் சவுகரியங்கள் காரணமாகவும் ஆசிரியர் வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வேதனைக்கு உரியது.

அடுத்த தலைமுறையை உண்டாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு, அவர்கள் செய்வது ஒரு தவம், தங்களை உருக்கி மாணவர் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் பணி ஆசிரியர் பணி எனப் பேசிய காலமெல்லாம் மலையேறிப் போய் அதையும் ஒரு தொழிலாகப் பார்க்கும் மனப்பான்மை இன்றைக்கு அதிகமாகி விட்டது.

நான் பொறியியல் படிக்கும்போதே ஆசிரியர் வேலைக்குத் தான் வரவேண்டும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன். ஆசிரியர் பணி மீது எனக்கிருந்த ஆச்சரியமும், நான் படித்த விஷயங்களை எளிதில் என் நண்பர்களுக்குக் கடத்த முடிந்த நம்பிக்கையும், எப்போதும் மாணவர்களுடனே இருப்பது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும் எனும் ஆசையும் என்னை இந்தத் துறை நோக்கி செலுத்தின.

ஆரம்பத்தில் கொடைக்கானலில் வேலைக்குப் போனபோது ரொம்பவே விளையாட்டுப் பிள்ளையாக இருந்தேன். அங்கேதான் என் வாழ்வையும், ஆசிரியர் பணியின் பொறுப்பு பற்றிய என் பார்வையையும் மொத்தமாக திருப்பிப் போட்ட சம்மபவம் ஒன்று நிகழ்ந்தது. எனக்கு அப்போது 23 வயது. என்னை விட நான்கு அல்லது ஐந்து வயது மட்டுமே கம்மியான மாணவர்களுக்கு பாடம் நடத்தியதால் கிட்டத்தட்ட அவர்களில் ஒருவனாகவே இருந்து சந்தோஷமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது.

ஒருநாள் என்னைப் பார்க்க மாணவி ஒருவரின் அப்பா வந்திருந்தார். அந்தப் பெண் சரியாகப் படிக்காமல் நிறைய தேர்வுகளில் தோற்றுப் போயிருந்ததால் அவர்கள் வீட்டில் வரச் சொல்லியிருந்தார்கள். அவளுடைய வகுப்பாசிரியர் நான்தான் என்பதால் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் சட்டென கண்களில் கண்ணீர் மல்க எழுந்து என் கைகளைப் படித்துக் கொண்டார். "தம்பி.. அவதான் எங்க வீட்டோட கனவு. கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைக்கிறோம். நீங்கதான் எப்படியாவது புத்தி சொல்லி அவளை திருத்தணும் தம்பி. உங்க கூடப்பொறந்த பொறப்புன்னு நினைச்சுக்கோங்க.."

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்னைப் பார்த்துக் கொள்ளவே எனக்குத் தெரியாது என்பது என் அம்மாவின் குற்றச்சாட்டு. என்னைப் போய் இந்த மனிதர் இத்தனை நம்புகிறார் என்றால், அது என் பணியின் காரணமாக, அதன் முக்கியத்துவம் காரணமாக. நாம் செய்து கொண்டிருப்பது விளையாட்டுக் காரியமல்ல, பலரின் வாழ்வை தீர்மானிக்கும் பணி என்பதை நான் அன்றுதான் உளப்பூர்வமாக உணர்ந்தேன்.

அன்று முதல் இந்த வேலையை என்னால் இயன்ற அளவு நூறு சதம் முனைப்போடுதான் செய்து வருகிறேன். பாடம் என்பது வகுப்புக்குள் சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களில் மட்டும் இல்லை, அதைத் தாண்டியும் இந்த வாழ்க்கை இருக்கிறது என்பதே நான் என் பிள்ளைகளுக்கு சொல்லிப் போகும் விஷயம். ஒரு உன்னதமான ஆசிரியர் பணியில் இருக்கிறோம் என்று ரொம்பப் பெருமையாகவும் உணருகிறேன். சமீபத்தில் டெல்லியில் இருந்த என்னுடைய முன்னாள் மாணவன் ஒருவன் போன் செய்து தனக்கு கிடைத்த பாராட்டை பகிர்ந்து கொண்ட போது சந்தோஷத்தில் என் கண்களில் துளிர்த்த கண்ணீர்தான் இந்த பணியில் கிடைக்கக்கூடிய உண்மையான வெகுமதி.

இத்தனை புனிதமான ஆசிரியர் பணி இன்றைக்கு வெறும் தொழிலாகப் பார்க்கப்படும் அவலநிலை வந்து விட்டதே என்பதே கவலை. பள்ளியும் கல்லூரியும் வெறும் பாடம் சொல்லிக் கொடுக்கும் இடங்கள் மட்டுமல்ல, ஒரு மாணவனை நல்ல மனிதனாக மாற்றும் இடங்களும் கூட. அதில் பெரும்பங்கு வகிக்கக் கூடியவர்கள் ஆசிரியர்களே. இதை உணர்ந்து உண்மையாகத் தங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய மனிதர்கள் ஆசிரியர்களாக வரவேண்டும் என்பதே எனது ஆசை.

April 5, 2011

2011 தேர்தலும் தரங்கெட்ட ஊடகங்களும்

இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி இருந்தது.

"தேங்காய் உடைத்து கருணாநிதி பயணம்"

திராவிடம், கடவுள் மறுப்பு எனச் சொல்லும் கருணாவும் சகுனம் பார்க்கிறார் என நிறுவுகிறார்களாம். அதே இதழில் வெளியாகி இருந்த இன்னும் சில தலைப்புகள்..

"அதிருப்தி.. கோஷ்டி சண்டை காரணமாக சோனியா வருத்தம்.."

"புதுவையில் உடைகிறது தி.மு. அணி.."

"பாமகவுக்கு ஆதரவாக குஷ்பூ? எப்படி ஆகிப்போச்சு நிலைமை.. திமுகவினர் கவலை.."

இது எல்லாமே சாம்பிள்தான். திமுகவை திட்டி எழுதுவது தவிர்த்து எத்தனை செய்திகள் தினமலரில் வருகிறது எனப் பார்த்தால் இரண்டு பக்கம் கூட தேறாது போல. அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனியம் சார்ந்து இயங்கக் கூடிய பத்திரிக்கை, இவர்களுக்கும் திமுகவுக்கும் ஆகாது என எல்லாருக்கும் தெரிந்தாலும் இந்தத் தேர்தலில் எல்லா எல்லைகளையும் மீறிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டபோது இவர்கள் எழுதியது..

“ஜெ.க்கு தெரியாமலே பட்டியல் வெளியானதா?”

ஜெவை நல்லவர் என நிறுவ முயலும் இவர்கள், மன்னார்குடி கும்பல்தான் அவரைச் சீரழிக்கிறது எனச் சொல்லும் இவர்கள், அவர்களை விட்டு வெளியே வாருங்கள் என எழுதாது ஏன்? திராவிடம் புண்ணாக்கு என்றெல்லாம் சொல்லி விட்டு கோவில் கோவிலாக ஜெ போகும்போது இவர்களுக்கு கசப்பதில்லையே. லூசுத்தனமாக அவர் காரியம் செய்தால் கூட ஜெ அப்பாவி, கருணாநிதி அதையே செய்தால் அடப்பாவியா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்?

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை தினமலர் வைகோவை சீண்டிய விதம். தேர்தல் புறக்கணிப்பு என்றதும் “ஓட்டம்” எனக் கார்ட்டூன், ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள் தினம் என்பதாக வைகோ மீண்டும் ஜெவைச் சந்தித்தார் எனச் செய்தி போட்டு அசிங்கப்படுத்தியது. இதையெல்லாம் வெளிப்படையாக ஒரு கட்சிக்கு ஆதரவு சொல்லி விட்டு செய்யலாமே.. இதுதான் எங்கள் அரசியல் நிலைப்பாடு என முடிவு செய்கிறீர்களா.. தைரியமாக அறிவித்து விட்டு மோதலாமே.. ஏன் நடுநிலை நாளிதழ் என்கிற பெயரில் செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி.

அடுத்ததாக விகடன் குழுமம். தங்கள் வீட்டில் ஒரு அங்கம் எனத் தமிழக மக்கள் பலரும் நம்பும் பத்திரிக்கை. அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மதுரையில் ஜூ.வி நிருபருக்கு அடி விழுந்த நேரத்தில்தான் இது ஆரம்பித்தது என நினைக்கிறேன். முதலில் நன்றாக விஜயகாந்துக்கு விளம்பரம் கொடுத்து சுதி ஏற்றினார்கள். அதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிமுக ஏன் தேமுதிகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றும் விளக்கினார்கள்.

இப்போது தேர்தல் நேரத்திலோ நேரடியாக களத்திலேயே இறங்கி விட்டார்கள். தொடர்ச்சியாக கருத்து கணிப்புகள், அத்தனையும் மு.க மற்றும் அவர் குடும்பத்தைத் தாக்கி. மறைமுக எண்ணம் என்றெல்லாம் இல்லாமல் நேரடித் தாக்குதல்தான். மறக்க முடியுமா என்று தலையங்கம், துறை வல்லுனர்களின் குற்றச்சாட்டு, அரசாங்கம் நிகழ்த்தும் அராஜகம் என்று பயங்கரமான ஒரு ஊடகத் தாக்குதலை விகடன் இன்றைய அரசு மீது நிகழ்த்தி வருகிறது. அதிலும் விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை அடித்ததை சப்பைக்கட்டு கட்டி ஜூ.வியில் வெளியான கட்டுரை அத்தனை பெரிய கேவலம்.

கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிக்கைகளுமே இந்தத் தேர்தலில் ஏதாவொரு நிலையெடுத்து இயங்குவதாக தெரிகிறது. நக்கீரனைப் பொறுத்தவரை அது அறிவிக்கப்படாத முரசொலி மாதிரி. ஊரில் எல்லாப்பயலும் திமுக ஜெயிப்பது கஷ்டம் என்றால் இவர்களுக்கு மட்டும் எல்லா இடங்களிலும் அதாவது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி என்பார்கள். ஜிங்க்சாக் அடிங்கையா.. ஆனா கொஞ்சமாவது மனசாட்சியோட அடிங்க.

தினத்தந்தியைப் பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சாதகம். அரசியல் விசயங்ளைப் பொறுத்தவரை ஹிந்து என்பது நம்மைப் பிடித்து இருக்கும் ஒரு கெரகம். ஆ.விக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதாலேயே குமுதம் திமுக பக்கம். துக்ளக் - சொல்லவே வேண்டாம். ஏதோ தமிழக அரசியல் (யார் பத்திரிக்கை என்று தெரியவில்லை) என்கிற ஒரு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் தொலைக்காட்சிகள் எல்லாமே கட்சிசார் நிறுவனங்கள் என்றாகி விட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் உண்மையான செய்திகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் இவர்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து எழுத்தொடங்கினால் பொதுஜனம் என்ன செய்வது? எங்களுடைய கருத்துதான் உங்களுடையதாகவும் இருக்க முடியும் என மக்கள் மீது திணிப்பது எத்தனை பெரிய அராஜகம்? நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் எழுத்துத் துறை இந்த லட்சணத்தில் இருந்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது?

பீப்ளி லைவில் ஒரு காட்சி வரும். பல ஆண்டுகளாக உழைத்த ஒருவன் அதே கிணறுக்குள் விழுந்து செத்துப் போயிருப்பான். ஆனால் ஊடகங்களோ சர்ச்சைக்குரிய மனிதன் மலம் கழித்த இடத்தை தேடிக் கொண்டிருப்பர்கள். இங்கே எது விற்குமோ அதைத் தருவதுதான் ஊடகங்களின் கடமை என்பதாக ஒரு நிருபர் சொல்லுவார். இதுதான் நிதர்சனம். உண்மைக்கு இங்கே மதிப்பு இல்லை. விக்கிலீக்ஸுக்கு கேபிள்கள் அனுப்பி உதவிய வீரரொருவர் இருபதாண்டு தனிமைச் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு இன்னும் சிறிது நாட்களில் பைத்தியம் ஆகும் சூழலில் இருக்கிறார். இதை நேர்மையாக எந்த பத்திரிக்கையாவது வெளியிட்டதா? இல்லையே.. எல்லாமே வியாபாரம்னு ஆகிப் போச்சு.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சின்னு எந்த பேதமும் இல்லாம உண்மையா செய்திகள் சொல்ற பத்திரிக்கையோ, டிவியோ இனிமேல் வாய்ப்பே இல்லைன்னுதான் தோணுது. இதே லட்சணத்துல போனா பி.எஸ்.வீரப்பா டயலாக்க சொல்லித்தான் முடிக்கணும்.. “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..”

April 2, 2011

நஞ்சுபுரம் - திரைப்பார்வை

நல்லபாம்பு தெய்வத்துக்கு சமமானது ஆனால் அடிபட்ட நாகம் தன்னை தாக்கியவனைப் பழிவாங்காமல் விடாது என்பது போலான ஐதீகங்கள் மற்றும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் நஞ்சுபுரம். சின்னத்திரையில் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான ராகவ் தயாரித்து நாயகனாகவும் நடித்து இருக்கிறார். பாம்புகள் பற்றிய பயம் இருக்கும் மக்கள் (எனக்கு உண்டு.. அவ்வ்வ்வ்..) இந்தப் படத்துக்கு போகாமல் இருப்பது நல்லது. ஒரு சில காட்சிகளில் ரொம்பவே கொடூரமாக டெர்ரர் காண்பித்து இருக்கிறார்கள்.


நாகத்தை தெய்வமாக மதித்து அவற்றை தங்கள் வாழ்வின் ஒருபகுதியாகக் கருதி வாழப் பழகிக் கொண்ட மக்கள் இருக்கும் ஊர் நஞ்சுபுரம். அங்கே மேல்சாதிக்கார ராகவுக்கும் கீழ்சாதிக்கார மோனிகாவுக்கும் காதல். ஊரே பாம்பை பார்த்து பயபக்தியோடு இருக்க ராகவ் மட்டும் உல்டாவாக இருக்கிறார். ஆற்றில் குளிக்கும் மோனிகாவை ஒரு நாகம் கடிக்க வர அதைக் காயப்படுத்தி நாயகியைக் காப்பாற்றுகிறார் ராகவ். ஆனால் தப்பிப் போன நல்லபாம்பு நாற்பது நாட்களுக்குள் அவரைப் பழிவாங்கும் என ஊரே பயமுறுத்த எல்லோரும் சேர்ந்து ஒரு பரணைக் கட்டி அதில் ராகவை பத்திரமாக தங்க வைத்து காவலும் இருக்கிறார்கள். ராத்திரி நேரங்களில் மற்றவர்களுக்குத் தெரியாமல் இறங்கிப் போய் காதல் பண்ணும் ராகவுக்கும் மோனிகாவுக்கும் கசமுசகச ஆகி விடுகிறது.

தன் மகன் கீழ்ஜாதிப் பெண்ணை விரும்புகிறான் என்பதால் ஊர் ப்ரெசிடென்ட் உதவியோடு மோனிகாவுக்கு வேறொரு மாப்பிளை பார்க்க வைக்கிறார் ராகவின் அப்பா. இதே நேரத்தில் ஊரார் சொல்லும் விதவிதமான கதைகளைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக ராகவின் மனதில் பயம் புகுந்து கொள்ள பாம்பு பற்றிய கதைகளை அவரும் நம்ப ஆரம்பிக்கிறார். பார்க்கும் இடமெல்லாம் பாம்பாகத் தெரிய பயந்து நடுங்கி பரணுக்கு உள்ளேயே அடைந்து கிடக்கிறார். கல்யாண நாள் நெருங்க மோனிகாவுக்கோ பயங்கர மன உளைச்சல். கடைசியாக சந்திர கிரகணம் அன்று தைரியத்தை மீட்டெடுத்து தன் காதலியோடு ஊரை விட்டுத் தப்பிப் போக முயற்சி செய்கிறார் ராகவ். அவர்கள் காதல் ஜெயித்ததா இல்லை பாம்பு தான் நினைத்தபடி பழிவாங்கியதா என்பதுதான் நஞ்சுபுரத்தின் கதை.

பங்கரைத் தலையுடன் சுற்றி வரும் ராகவுக்கு இதுவொரு நல்ல ஆரம்பம். ஊருக்குள் தைரியமாக சுற்றி வரும்போதும் மோனிகாவைக் கரெக்ட் செய்யும் காட்சிகளிலும் கடைசியில் பயத்தால் நடுங்கி சாகும்போதும் நீட்டாகச் செய்திருக்கிறார். சிலந்தியில் பொளந்து கட்டியது போக மிச்சம் இருக்கும் மேக்கப் இல்லாத விஜய் மகேந்திரனின் தானைத்தலைவி மோனிகா கொள்ளை அழகு. ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பாவாடை சட்டை போட்ட பட்டாசு நாயகி. அப்பப்போ முந்தானையைச் சரியவிட்டு பார்ப்பவர்களை பேஸ்தடிக்க வைக்கிறார். வில்லனாகத் தம்பி ராமையா. மைனாவுக்கு முன் ஒத்துக்கொண்ட படம் போல அவரும் இருக்கிறார் அவ்வளவே. மற்றபடி கடைசி காட்சியில் மோனிகாவுக்கு உதவி செய்யும் திருடனாக வருபவர் ஒருவரை நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லலாம்.


படத்தின் பாடல்களை எழுதி இருப்பவர் கவிஞர் மகுடேஸ்வரன். "தேளாகக் கொட்டுதம்மா தேகத்தை காதல் கொடுக்கு.." பாட்டு ஈர்க்கிறது. "யாவரும் சேர வேண்டிய புள்ளி" காமக் கடும்புனல். அதே மாதிரி வசனமும் கவிஞர்தான் எழுதி இருக்கிறார். நான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும் முனைப்பு இல்லாத இயல்பான வசனங்கள். படத்துக்கு இசையமைத்து இருப்பதும் ராகவ்தான். எக்கச்சக்கமாக ரகுமான் பாதிப்பு. அதுவும் "எண்ணட்டுமா நட்சத்திரம்" பாட்டு அப்படியே ஸ்வதேசின் தாரா வோ தாரா பாட்டு மாதிரியே இருக்கிறது. பின்னணி இசையில் ஒரு சில சத்தங்கள் நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் இரைச்சல். ஆண்டனியின் ஒளிப்பதிவும் கலை இயக்குனர்கள் உருவாக்கி இருக்கும் நஞ்சுபுரம் கிராமும் படத்துக்கு பலம்.

நாகதோஷம் இருக்கும் ஒருவனை பாம்பு கடித்து கண்ணாமுழியைப் பிடுங்கி கொலை செய்யும் முதல் காட்சியிலேயே இது வேறு மாதிரியான முயற்சி என்பதை சொல்லி விடுகிறார்கள். ஆனால் இது திகில் படமா, காதல் படமா, இல்லை சாதி சார்ந்து பேசும் படமா என பல விஷயங்களைப் போட்டுக் குழப்பி அடித்திருப்பதுதான் சிக்கல். முதல் பாதியில் ராகவ் மோனிகா காதலைச் சொல்லி பாம்பு தப்பித்து ராகவை பரணில் ஏற்றுவதுவரை ஓகே. ஆனால் இடைவேளைக்குப் பின்னரும் அதே ரீதியிலான காட்சிகள் தொடர்ந்து வருவதும் கடைசி பதினைத்து நிமிடங்களில்தான் ராகவுக்கு பயம் வருவது போலவும் திரைக்கதை அமைத்திருப்பது ரொம்பவே பொறுமையைச் சோதிக்கிறது.


காலம் காலமாக தமிழ் சினிமாவில் இருந்து கொஞ்ச நாட்களாகக் காணாமல் போயிருந்த சில காட்சிகளை இந்தப்படம் மீட்டெடுக்கும் வேலையைச் செய்திருக்கிறது. காதலியின் மீது குத்திய முள்ளைக் காதலன் தன் வாயால் எடுப்பது, கில்மா முடிந்து நாயகி தலையில் அடித்துக் கொண்டு அழுவதும் உடனே கதாநாயகன் அருகில் இருக்கும் சூலத்தில் தன் கையை அறுத்து பொட்டு வைப்பது.. ஸ்ஸ்ஸ் அப்பா.. கண்ணக் கட்டுதே. அதோடு லாஜிக் சார்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் படம் டப்பா டான்ஸ் ஆடிவிடும். ஊருக்குள் எந்த வசதியும் இல்லை என்று அறிமுகம் செய்து விட்டு ராகவ் வீட்டில் கேபிள் டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டென்னிஸ் மேட்ச் ஓடுவது எப்படி, ஊரே பாம்பு பயத்தில் இருக்கும்போது ஊருக்குள் ஒரு வைத்தியர் கூட இல்லாமல் பத்து கிமீ சுத்திப் போகும் கொடுமை, பாம்புகள் கிடக்கும் காட்டுக்குள் ஏதோ விருந்துக்குப் போனவன் மாதிரி திருடன் படுத்துக் கிடப்பதும்.. அடப் போங்கப்பா.

திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் சார்லஸ். கண்டிப்பாக இலக்கியப் பரிச்சயம் உள்ள மனிதராக இருப்பார் என நினைக்கிறேன். பயம்தான் விஷம் என்கிற விஷயத்தைக் கொண்டு போயிருக்கும் விதம் அழகு. ஐந்தறிவு உள்ள மிருகம் கூட சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது ஆனால் மனிதனுக்குள் இருக்கும் மிருகம்? இதுதான் படம் எழுப்பும் அடிப்படைக் கேள்வி. ஆனால் எத்தனை பேரை இது சரியாகப் போய் சேரும் என்று தெரியவில்லை. கடைசியில் சோகமாக முடித்தால்தான் படம் ஹிட்டு என்கிற வலைக்குள் மனுஷன் விழுந்ததும் ஏன் என்று புரியவில்லை. காதல் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்து திகில் காட்சிகளை இன்னும் கூட்டி இருந்தால் படத்தின் டெம்போ நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சி என்கிற வகையில் இயக்குனருக்குப் பாராட்டுகள்.

நஞ்சுபுரம் - திரைக்கதையால் "நஞ்ச"புரம்