September 25, 2011

ஒரு இலக்கியப் பேரொளியும் பின்னே ஞானும்

ஹலோ. கார்த்திகைப்பாண்டியன் இருக்காரா?

வணக்கம். நாந்தான் சார் பேசுறேன். சொல்லுங்க.

வணக்கம் தம்பி. உங்களுக்கு அந்தியைத் தெரியுமா?

ஓ தெரியுமே. சாயங்காலம் சூரியன் மறையறதுக்கு முன்னாடி..

தம்பி தம்பி.. அது இல்லை தம்பி..

அப்புறம்?

நான் சொல்றது எழுத்தாளர் அந்தி. கேள்விப்பட்டது இல்லையா?

இல்லீங்களே?

என்ன தம்பி இப்படிச் சொல்லிட்டீங்க? அவர் ஒரு இலக்கியப் பேரொளிப்பா. இதுவரைக்கும் 22 தொகுப்பு வந்திருக்கு. எட்டு சிறுகதைத் தொகுதி, பனிரெண்டு கவிதைத் தொகுப்பு.. கூடவே ரெண்டு நாவலும்.

ஓகோ. சரிங்க..

இருங்க.. நீங்க புத்தகம் எல்லாம் வாசிப்பீங்க தான?

நல்லாவே வாசிப்பேங்க..

என்ன வாசிப்பீங்க?

குமுதம், விகடன், கல்கி, அப்புறம்..

தம்பி தம்பி. நான் சொல்றது இது இல்லைப்பா. இது இலக்கியப் பத்திரிக்கை. இ ல க் கி ய ப் பத்திரிக்கை. புரியுதா?

ஏதோ புரியுது. ஆனா புரியலீங்க.

புரியலையா? ஹ்ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு உங்க நம்பர் தந்து பேசச் சொன்னாங்க. எங்கேயோ ஏதோ தப்பு நடந்து போச்சே.

என்னங்க நீங்களாப் பேசுறீங்க?

அதில்லை தம்பி. நாங்க ஒரு இலக்கியப் பத்திரிக்கை கொண்டு வரப் போறோம். உழைப்பால் உயர்வோம்னு பேரு. தனிச் சுற்றுக்கு மட்டும். அது பத்தி பேசலாம்னுதான் கூப்பிட்டேன். சரி விடுங்க. நீங்க அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டீங்க.

அப்படிங்களா அய்யா.. மன்னிச்சுக்கோங்க.. அப்புறம் ரொம்ப நேரமா ஒரு இலக்கியப் பேரொளி... அந்தி பத்தி சொன்னீங்களே? அவர் யாருங்க அய்யா..

அட அது நாந்தாப்பா.. போனை வை சாமி..

எல்லாம் முடிஞ்சு போச்சு. தப்பிசாண்டா பாண்டியன்.

September 20, 2011

அற்றைத் திங்கள் - அம்ஷன் குமார் சந்திப்பு

கடந்த 18-09-11 அன்று மாலை ஆறு மணிக்கு மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் காலச்சுவடு மற்றும் கடவு இணைந்து நடத்தும் "அற்றைத் திங்கள்" கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாத சிறப்பு விருந்தினராக திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குனரான அம்ஷன் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக அம்ஷன் குமார் பேசினார். அதன் பின்பாக அவருடைய படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. இறுதியாக வாசகர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.



முதலில் அம்ஷன் குமாரின் உரை..

"என்னுடைய சொந்த ஊர் திருச்சி. சின்ன வயதில் இருந்தே வாசிப்பும் திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக இருந்தன. திருச்சியில் இருக்கக்கூடிய எல்லா நூலகங்களிலும் புத்தகங்களைத் தேடிதேடிப் படித்திருக்கிறேன். குறிப்பாக திரைப்படங்கள் சார்ந்த புத்தகங்களை விரும்பி வாசிப்பேன். வளர்ந்து வெகு நாட்களுக்கு ஏதும் இலக்கின்றி சுற்றித் திரிந்த பின்பு ஒரு வங்கிப்பணியில் சேர்ந்து சென்னை வந்து சேர்ந்தேன். இந்தக் காலகட்டத்தில், திரைப்படங்கள் தயாரிப்பு பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் ஒரு திரைப்படம் பார்ப்பது எப்படி, என்கிற ரசனை சார்ந்த புத்தகம் ஒன்றை நான் எழுதினேன்.

சில நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பர் ஒருவர் தான் எடுக்கப் போகும் விளம்பரப் படம் குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவர் சொன்ன விளம்பரப்படத்தின் கதை அத்தனை நன்றாக இல்லை எனச் சொல்லி நானே ஒரு கருவைச் சொன்னேன். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் அந்தப்படத்தை என்னையே எடுத்துத் தரும்படி சொன்னார். ஏதோ ஒரு தைரியத்தில் நானும் ஒத்துக் கொண்டேன்.

அது விளம்பரப் படங்களுக்கு ரொம்பப் பெரிய மதிப்பு இருந்த காலம். என்னுடைய விளம்பரத்துக்கு .ஆர்.ரகுமான் தான் இசை. நான் ஏற்கனவே திரைப்படம் சார்ந்து நிறைய வாசித்து இருந்ததால் படத்தளத்தில் ஒளிப்பதிவாளரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டே இருப்பேன். கருவியின் கோணம் இப்படி இருக்க வேண்டும் அது இதுவென. அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வெறுமனே புத்தகத்தில் படித்தது நிதர்சனத்தில் உதவாது என்பதை நிரூபிப்பதாக ஒரு சம்பவம் நடந்தது.

படப்பிடிப்பின் முதல் நாள். அப்போது இருந்த வழக்கம என்னவெனில், முதலில் இயக்குனர் ஸ்டார்ட் எனச் சொல்ல வேண்டும். உடனே ஒளிப்பதிவு கருவியை ஒளிப்பதிவாளர் இயக்குவார். அப்போது ரன்னிங் என்று சொல்வார். பிறகு இயக்குனர் ஆக்ஷன் எனச் சொல்ல வேண்டும். எனக்கு இதெதுவும் தெரியாது. எடுத்தவுடனே ஸ்டார்ட், ஆக்ஷன் என்று சொல்ல ஒளிப்பதிவாளருக்குக் கடும் கோபம். பின்பு அந்த வழிமுறைகளை எல்லாம் வேகமாகக் கற்றுக் கொண்டேன். இப்படியாகத்தான் எனது திரையுலக அனுபம் ஆரம்பித்தது.

என்னுடைய விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, அத்துறை என்னை இழுத்துப்போக, என்னால் முழுமையாக வங்கிப்பணியில் கவனம் செலுத்த இயலவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த அவர்களும் சில நாட்களில் என்னைக் கூப்பிட்டுச் சொல்ல வேலையை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் விளம்பரப் படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை. இந்த சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஏதெனும் செய்ய ஆசை. எனவே ஆவணப்படங்கள் எடுக்கத் துவங்கினேன்.

பொதுவாக என்னுடைய படங்களில் அரசியல் இருக்காது. ஆனால் நான் எடுப்பவை எல்லாமே மக்களின் வாழ்க்கை பற்றிய அரசியல் சார்ந்த படங்களாக, மக்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். புதிது புதிதான அனுபவங்களோடு இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்னைப் பற்றி இத்தோடு போதும் என நினைக்கிறேன். அடுத்ததாக படங்களைப் பார்க்கலாம்.”

அடுத்ததாக அம்ஷன் குமார் இயக்கிய திரப்படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. சுப்பிரமணிய பாரதி பற்றிய ஆவணப்படம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு பற்றிய அவரது அனுபவங்கள், சர்.சி.வி.இராமன், நவீன நாடகத்தில் புரட்சி செய்த பாதல் சர்க்கார் பற்றிய படம், கி.ராஜநாராயணனின்கிடைஎன்கிற சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்டஒருத்தி”, தமிழ் நவீன கலை - சிற்பங்கள் பற்றிய படம் என ஆறு படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. பிறகு அப்படங்கள் சார்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. அவற்றில் சில துளிகள்..

தமிழில் மாற்று சினிமாவுக்கான களம் இருக்கிறதா?

இல்லை. ஆங்காங்கே சில கீற்றுகள் நம்பிக்கை தந்தாலும் சமரசம் செய்து கொள்ளாமல் படம் எடுப்பது என்பது இன்னும் சாத்தியமாக வில்லை. நாம் இன்னும் வியாபார சினிமாவில்தான் இருக்கிறோம். இதோ - 2011 வந்தால் நம் தமிழ் சினிமாவுக்கு வயது நூறு ஆண்டுகள் ஆகப் போகிறது. 1914 இல் கீசகவதம் நம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதுதான் உண்மையான துவக்கம். நிறைய பேர் காளிதாசன்தான் ஆரம்பம் எனச் சொல்லுவார்கள். அது சரி கிடையாது. நூறு ஆண்டுகள். நாம் என்ன சாதித்து இருக்கிறோம்? எல்லாரும் இரானியப் படம் அப்படி எடுக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே அந்தப் படங்களுக்கான சந்தை இருக்கிறது. மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் நம்மூரில் இது சாத்தியமா என்றால் இல்லை. மாற்று சினிமா என்பதற்கான களாம் இங்கே உருவாகவில்லை என்பதுதான் வருத்தத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.

பாரதி - அனுபவம் குறித்து? இந்த ஆவணப்படம் முதலில் வந்ததா அல்லது பாரதி திரைப்படமா?

முதலில் வந்தது இந்த ஆவணப்படம்தான். படத்தில் சில புனைவுகளும் இருந்தன. இந்த ஆவணப்படத்தில் வெகு அரிதான ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து பயன்படுத்தி இருக்கிறோம். பாரதியார் கைது செய்யப்பட்டபோது பதிவு செய்த கோப்புகள், 1919 - 1921 வரை மூன்று வருட காலத்தில் எடுக்கப்பட்ட அவருடைய ஐந்து புகைப்படங்கள் என நிறைய விஷயங்கள். பாரதியை நேரில் பார்த்த, அவர் வாழ்ந்த கடையத்தில் இருந்த, மனிதரொருவரின் பேட்டியும் உள்ளது.

அசோகமித்திரனுடனான அனுபவம்?

அவர் தன்னுடைய பால்யத்தில் வாழ்ந்த ஹைதை நகரத்துக்குப் போய் எசுக்க வேண்டிய படம். நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் வசித்த ரயில்வே குடியிருப்பு நிறையவே மாறி இருந்தது. அவர் குடியிருந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கவே வெகு நேரமானது. படம் எடுக்கையில் அவர் அந்த வீட்டுக்கு உள்ளே போக மாட்டேன் எனச் சொல்லி விட்டார். தேவையில்லாத ஞாபகங்கள் வருமெனச் சொல்லி உள்ளே போகவேயில்லை. அவரோடு இருக்க முடிந்த காலங்கள் இனிமையானவை.

ஒருத்தி?

தமிழில் தலித்துகள் பற்றிய படங்கள் வந்தாலும் அவை மற்றவரின் பார்வையிலேயே வந்திருக்கின்றன. ஆனால் தலித்துகளின் பார்வையில் வரவில்லை. அப்படியானதொரு முயற்சியாகத்தான் ஒருத்தியை எடுத்தேன். முதல் வாரம் சத்யத்தில் ஹவுஸ்ஃபுல்லாகப் போனாலும் புதுப் படங்கள் வந்ததெனத் தூக்கி விட்டார்கள். அது முதல் திரைப்பட விழாக்கள், கல்லூரி நிகழ்வுகள் எனத் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது நீங்கள் பணிபுரியும் படம்?

மணக்கால் எஸ். ரங்கராஜன் என்றொரு கர்நாடக இசைக்கலைஞர். அற்புதமாகப் பாடக்கூடியவர்.ஆனால் அவருக்கானசரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அவரைப் பற்றித்தான் தற்போது ஆவணப்படம் எடுக்கிறேன்.

தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையிலும் அம்ஷன் குமார் அவர்களுடன் வாசகர்கள் உரையாடிப் போக நிகழ்வு நிறைவு பெற்றது.

September 14, 2011

தனிமையின் இசை


வீழ்த்தப்பட்ட நகரத்தின்
சிதிலங்களின் நடுவே
நின்றிருக்கும் அவன்
தகிக்கும் சூரியன்
காலடியில் வரையும்
மெலிந்ததோர் ஓவியம்
அவனே அதுவாகவும்
அதுவே அவனாகவும்
தனை வெறித்தபடி இருக்கும்
ஓநாயின் விழிகள்
உதிரச் சிவப்போடு
நீ தனியன்
இழப்பதற்கு ஏதுமற்ற நாடோடி
உன் நிழலன்றி
உனக்கென எவருமில்லை
ஆன்மாவின் ஓலம்
சூன்யத்தைப் பிளக்கும்
வீழும் பொழுதில்
கரைந்திடும் ஓவியம் கண்டு
செய்வதறியாது கதறித் துடிக்கிறான்
தன்னைத் தொலைத்தவன்
வெளியில் திரியும் காற்று
இசைத்துப் போகிறது
துயரத்தின் பாடலை

September 8, 2011

வலசை - கலந்துரையாடல் (04-09-11)

கடந்த ஞாயிறு (04-09-11) காலை பத்து மணிக்கு, மதுரை நாகமலை புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும் கீழக்குயில்குடி சமண மலையடிவாரத்தில், வலசை முதல் இதழ் மீதான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் - செல்மா ப்ரியதர்ஷன், சுகுமாரன், செந்தி, சக்திஜோதி, யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீசங்கர், லிபி ஆரண்யா, அகநாழிகை பொன்.வாசுதேவன், கலாப்ரியா, வடகரை ரவிச்சந்திரன், பூமிசெல்வன், ஜெகன்னாதன், ஸ்ரீ, மதுரை வாசகன், மதுரை சரவணன், செல்வம், மாரி மற்றும் கா.பா. நிகழ்வின் தொடக்கமாக வலசை இதழை கலாப்ரியா வழங்கிட சுகுமாரன் பெற்றுக் கொண்டார். அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம். வலசை கொண்டு வருவதற்கான காரணம் பற்றி கா.பா பேசிய பின்பு கலந்துரையாடல் தொடங்கியது. தமிழின் மிக முக்கியமான ஆளுமைகள் பங்கேற்ற இந்த நிகழ்வினை என் நினைவினில் இருந்து இங்கே தொகுத்திருக்கிறேன்.



சுகுமாரன்: எனக்கு நேற்றைக்குத்தான் புத்தகம் கிடைத்தது என்பதால் முழுதும் வாசிக்க முடியவில்லை. ஆனால் மேலோட்டமாக வாசித்த வரையில்.. இதுவரையில் இஸ்மாயில் கதாரே போன்ற ஆளுமைகளை தமிழில் யாரும் பேசியதில்லை. மற்ற படைப்பாளிகளும் அத்தனை அறியப்படாதவர்களே. அவ்வகையில் இவ்விதழ் மிக முக்கியமானதொரு தொடக்கமாகவே எனக்குப் படுகிறது. புத்தகம் பற்றிய என்னுடைய முழுமையான கருத்துகளை வாசித்துப் பகிருகிறேன்...

கலாப்ரியா: எனக்கு பார்வையின்மை வெகுவாகப் பிடித்தது. அதே போல பத்மா மொழிபெயர்த்திருக்கும் நீச்சல்காரன் கதையும் நன்றாக இருந்தது. ஆனால் வி மாதிரியான நீளமான கவிதைகளை வாசிக்கும்போது ரொம்ப அயர்ச்சியாக இருக்கிரது. என்னால் தொடர்ச்சியாகக் கவிதையில் பயணிக்க முடியவில்லை. மற்றபடி இதழில் எனக்கு மொழி சார்ந்து சில சிக்கல்கள் இருந்தன. அத்தோடு வடிவமைப்பிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

முருகேச பாண்டியன்: இந்த இதழ் பற்றி எனக்கு பெரியளவில் எந்த விதமான எதிர்பார்ப்பும் ஆரம்பத்தில் இருக்கவில்லை. ஏற்கனவே தமிழில் ஒரு இதழ் மொழிபெயர்ப்பு சார்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது கடனுக்கு செய்யப்படுவது. அத்தனை சரியானது கிடையாது. வலசையும் அதுபோல இருக்கக்கூடும் என்றிருந்த எண்ணம் எனக்கு இதழை வாசிக்க ஆரம்பித்தவுடன் மாறத் துவங்கியது. இவர்களுக்கு ஒரு நோக்கம் இருப்பது புத்தகத்தில் தெளிவாக தெரிகிறது. எனக்கு இந்த இதழில் எல்லா விஷயங்களுமே பிடித்து இருந்தன. குறிப்பாக ஒரு மொழிபெயர்ப்பாளரின் நேர்காணல். வெகு கடினமான விஷயங்களை எல்லாம் அவர் இதில் எளிதாக சொல்லி இருக்கிறார். ஆனாலும் எனக்கு சின்னதொரு வருத்தம் உண்டு. இந்த இதழுக்கு செங்கால் நாராய் என்று பெயர் வைத்து சில நேரடித் தமிழ்ப் படைப்புகளையும் வெளியிட்டிருக்கலாம். வலசை என்றாலே அது வெளியிலிருந்து இங்கு வருவதுதானா? ஏன் பறவைகள் நம்மூரில் இருந்து வெளிநாடுகளுக்குப் போவதில்லையா? எனவே அடுத்த இதழில் ஆசிரியர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

யவனிகா: இதழ் பற்றிப் பேசுமுன்பாக ஒரு விஷயம். இதில் இருக்கும் படைப்புகளை மொழிபெயர்த்தவர்கள் தெரிவு செய்தார்களா?

காபா: இல்லை யவனிகா. இதழை ஆரம்பிக்கும்போதே இதன் ஊடுசரடாக இருக்கப்போவது உடல் மற்றும் அதன் மீதான அரசியல் என்பதை முடிவு செய்து கொண்டோம். பின் அது சார்ந்த படைப்பாளிகளும் அதர்குப் பின்னர் அவர்களுடைய படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டு மொழிபெயர்க்கும் நண்பர்களுக்குத் தரப்பட்டது.

யவனிகா: நல்லது. அதைத் தெரிந்து கொண்டு பேசுவது தான் சரியாக இருக்கும். முருகேச பாண்டியன் சொன்னது போல இந்த இதழுக்கென ஒரு நோக்கம் இருக்கிறது. அது மிகச் சரியான அணுகுமுறை. வி மாதிரியான நீண்ட கவிதைகளை வாசிக்கும்போது அயர்ச்சி வருவதாக கலாப்ரியா சொன்னார். ஆனால் எனக்கு அது மிக முக்கியமான கவிதை. இன்றைக்கு சூழ்நிலைக்கு வெகு பொருத்தமானது. இங்கிலாந்தில் பிறந்த ஒரு மனிதன் அங்கிருக்கும் அரசியலை எப்படியெல்லாம் பகடி செய்கிறான் என்பதான மிக அற்புதமான விஷயங்கள் அந்தக் கவிதையில் இருக்கின்றன. ஒரு புதிய நிலத்தை எனக்கந்த கவிதை அறிமுகம் செய்கிறது. அது மிகவும் முக்கியம். கிரேக்கம் தெரிந்தவர்களை மேன்மக்கள் எனக் கொண்டாடும் ஒரு சமூகத்தை சாடும் கவிஞனின் நேர்மை அபாரமாக வெளிப்படும் வி மிக மிக முக்கியமான கவிதையாக இருக்கிறது. அதே மாதிரி நீச்சல்காரன் சிறுகதை உண்டாக்கும் வாழ்வின் மீதான அபத்தம் ரொம்பவே ரசிக்கும்படியான ஒன்று. எட்டு மைல் நீந்தி ஒருவன் வீட்டை அடைய முடியும் என்கிற எண்ணமே கிளர்ச்சியைத் தருவது. அவன் நோயால் பீடிக்கப்பட்டவனா, இறந்தவனா இல்லை மனநிலை தவறியவனா என்கிற மாதிரியான விடையில்லாக் கேள்விகளை கதை எழுப்புகிறது. இதை வாசிக்கும்போது எனக்கு இட்டாலோ கால்வினோவின் கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. நடு இரவில் காற்று வாங்கலாம் என வெளியே செல்லும் ஒருவன். தெருவில் யாருமில்லை. கடை ஒன்றை நான்கைந்து திருடர்கள் சேர்ந்து உடைக்க முற்படுகிறார்கள். இவனைப் பார்த்தவுடன் அவனையும் சேர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். சிறிது நேரத்தில் கடையை உடைத்து திருடிக் கொண்டு ஓடுகிறார்கள். இவன் திகைத்து நிற்கிறான். இப்போது அங்கு வந்து சேரும் காவல்துறை இவனைக் கண்டவுடன் ஓடிப்போய் திருடர்களைப் பிடிக்கச் சொல்கிறது. சற்று நேரம் கழித்து எல்லாரும் போய் விட இவன் வீட்டுக்கு வந்து சேருகிறான். கையில் பொருள் இல்லாத காரணத்தால் அவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான். அப்படியானால் இன்றைக்கு எல்லாமே பொருள் சார்ந்த மதிப்பீடுகள்தானா? நவீன காலனிய ஆதிக்கக்காலத்தில் மனிதனுக்கு மதிப்பே இல்லையா என்பதான கேள்விகளை இந்தக்கதை எழுப்பும். அத்தகைய உணர்வை நீச்சல்காரனும் தந்தது. ஆக இதழ் தனது துவக்கத்தை சரியாகவே கொண்டிருக்கிறது. ஆனால் நண்பர்கள் சிலர் இதழ் பற்றிப் பேசும்போது மொழிபெயர்ப்புகள் மூலத்துக்கு உண்மையானவையாக இல்லை என்று சொன்னார்கள். அதைக் கருத்தில் கொண்டு மொழி சார்ந்து இன்னும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள்தான் படைப்புகளைத் தெரிவு செய்கிறீர்கள் எனும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.



வடகரை ரவிச்சந்திரன்: படைப்புகள் மூலத்துக்கு எத்தனை நெருக்கமாக இருக்கின்றன என்கிற விஷயம் ரொம்ப முக்கியமானது. அதே மாதிரியான மொழியும். நாம் அன்னியதேசம் ஒன்றை அதன் நிலத்தைப் பற்றியும் மக்கள் பற்றியும் வாசிக்கிறோம் என்கிற விழிப்புநிலை மொழியில் இருக்க வேண்டும். அதற்கு இன்னும் நிறைய புதிய சொற்களை நாம் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அப்புறம் தேவுகள். இந்த இதழில் இருக்கும் ஒருசில கவிதைகள் வெகு சாதாரணமானவையாகத் தோன்றின. ராபியா பஸ்ரி, ஆயிஷா அர்னௌத்.. இது மாதிரி..

செல்மா: ஆமாம். இது முக்கியமான இடம். இங்கே தமிழில் எடுத்துக்கொண்டாலே இதை விட அதிகப் பாய்ச்சலைத் தரக்கூடிய படைப்புகள் இருக்கின்றன. எனவே நீங்கள் தேர்வு செய்யும்போது அந்தப் படைப்புகள் எத்தனைத் தரமுடையவை என்பதையும், அவை சமகாலத்துக்குப் பொருந்துமா என்பதையும் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.

வாசுதேவன்: என்னாலும் இதை உணர முடிந்தது. மோரியோட செவாய்க்கிழமைகள் வெகு நாட்கள் முன்பாக வந்த புத்தகம். இதை எதற்காக இங்கே கொண்டுவந்தார்கள் என்கிற கேள்வி எனக்கு இருந்தது?

கா.பா: படைப்புகள் தெரிவில் ராபியா, அர்னௌத் பொறுத்தவரை.. இருவரும் பெண்கள் என்பதோடு தங்கள் மதம் சார்ந்து கடவுளுக்கு உடலை காணிக்கை செய்யத் துணிந்தவர்கள் என்பதாலும் கண்டிப்பாக பேசப்படவேண்டியவர்கள் என்பதாக உள்ளே வைத்தது. அதே போலத்தான் மிட்ச் ஆல்பமும் தமிழ் சூழலில் பேசப்படாதவர், உடல் மர்றும் நோய்மை சார்ந்த கதை என்பதால் உள்ளே வந்தது.

செல்மா: இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு நீங்கள் முதல் வாசகர்கள் என்று சொல்வதில் உடன்பாடு இல்லை. அது வாசக அதிகாரம் மாதிரியான தோற்றத்தை உண்டாக்குகிறது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

யவனிகா: செல்மா சொன்னதில் மிக முக்கியமானது.. சமகாலத் தனமையோடு படைப்புகளை தருவது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. மொழிபெயர்ப்புகள் மூலமாகத்தான் உலக இலக்கியத்தை அறிந்து கொள்கிறேன். இன்றைக்கு இருக்கக் கூடிய இளைஞன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறான், அவனுடைய அரசியல் நோக்கு என்ன, என்ன மாதிரி காதல் செய்கிறான், எது மாதிரியான கவிதைகளை எழுதுகிறான்.. இதுபோன்ற விஷயங்களாஇ எல்லாம் நீங்கள் இங்கே கொண்டுவந்தால் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்கும்.

லிபி ஆரண்யா: தொடர்ச்சியாக சிற்றிதழ்கள் வர ஆரமபித்து இருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படைப்புகள் சார்ந்து எனக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லை. இது ஒரு அருமையான ஆரம்பம். ஆனால் வடிவம் மற்றும் லேஅவுட் சார்ந்து நீங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. இதழை வாசிக்கும்போது ஒரு அக்கடமிக் தன்மையை உணர முடிகிரது. அதைத் தவிர்த்து சிற்றிதழுக்கான ஒரு உணர்வை நீங்கள் கொண்டு வர வேண்டும். அடுத்த இதழ் இன்னும் சிறப்பாக வரும் என்பதற்கான அறிகுறிகள் இந்த இதழில் உள்ளன. அது நிகழ வேண்டியது அவசியம்.

யவனிகா: கண்டிப்பாக இரண்டாம் இதழ் இன்னும் சிறப்பாக வரும். முருகேச பாண்டியன் சொல்வது போல சமகாலத் தமிழ் படைப்பாளிகளையும் உள்ளே கொண்டு வருவது இன்னும் நன்றாக இருக்கும்.

பூமிசெல்வம்: நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நண்பர்கள் சொல்லி விட்டார்கள். வடிவம் தவிர்த்து எனக்கு இதழில் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை. உள்ளே இருக்கும் படைப்புகள் மிக முக்கியமானவை. அத்தோடு மொழியிலும் சில இடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. புணர்ச்சி விதிகள் சார்ந்து நிறைய வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது.

சக்திஜோதி: இதழுடைய அடையாளமாக யாளி இருக்கிறது. கீழைத்தேய நாடுகளில் யாளி அதிர்ஷ்டத்தின் குறியீடு. ஆனால் மேலை நாடுகளிலோ அது அவநம்பிக்கையின் வடிவமாகப் பார்க்கப்படுகிறது. அதை ஆசிரியர்கள் நினைவில் கொள்தல் நலம். பிற்காலங்களில் வலசை வெகுபல இடங்களுக்குப் போகும்போது அது என்னவாக இருக்கிறது என்பதைக் காலம் தீர்மானிக்கும். இப்போதைக்கு முதல் இதழாக இது ஒரு அபாரமான முயற்சி. நேசனுக்கும் காபாவுக்கும் என் வாழ்த்துகள்.

ஸ்ரீசங்கர்: இதழ் நல்லதொரு தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த இதழ்கள் இன்னும் தனித்தன்மையுடன் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

அத்தோடு கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது. பின்பாக மாலைவரை நண்பர்களோடு கழிந்த பொழுதுகள் இனிமையானவை. அற்புதமானதொரு தினத்தை சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வலசை தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.